மன்னர் காலத்து கருவியில் கஞ்சா ! போதையில் தள்ளாடும் இளசுகள் !
மன்னர் காலத்து கருவியில் கஞ்சா ! போதையில் தள்ளாடும் இளசுகள் ! மன்னர் காலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சுவைப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பாரம்பரியமான கஞ்சா புகைக்கும் கருவியும் ஒன்னேகால் கஞ்சாவுமாக சிக்கியிருக்கிறார், மதுரை செந்தாமரை தெரு சாந்தி நகரை சேர்ந்த ஹரிஷ் குமார்.
மதுரையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், குறிப்பாக கல்லூரி செல்லும் இளைஞர்களிடையே மிக வேகமாக பரவியிருப்பதாகவும், பட்டப்பகலிலும்கூட கஞ்சா போதையில் கடைகளில் தகறாறில் ஈடுபடுகின்றனர் என்பதாக குற்றஞ்சாட்டி ஒருநாள் கடையடைப்பை நடத்தியிருந்தனர் வணிகர்கள்.
இதனையடுத்து, மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில்மதுரை மாநகர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர சோதனையில்தான் ஹரிஷ்குமார் சிக்கியிருக்கிறார். இதற்காக, ஓரிசாவிற்கு சென்று கஞ்சாவை வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஒரு இழுப்பு, ரெண்டு இழுப்பு என இழுப்பு கணக்கிலும் நிமிட கணக்கிலும் கஞ்சா புகையை வைத்து காசாக்கியிருக்கிறார் ஹரிஷ்குமார்.
பெற்றோர்கள் கொடுக்கும் பாக்கெட் மணியையெல்லாம் இவரிடம் கொட்டி கஞ்சா போதையில் திளைக்கின்றனர் கல்லூரி மாணவர்கள். இங்கேயே தங்கி போதை தலைக்கேறும் வரையில் கஞ்சாவை இழுப்பதற்கும், போதை தெளிந்து வீடுபோய் சேருவதற்குமான வசதிகளையும் வைத்திருக்கிறார் ஹரிஷ்குமார்.
விளக்கம் பெற ஆய்வாளர் சேதுமணிமாதவனை தொடர்புகொண்டோம், மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் என்றவர் பின்னர் தொடர்புகொள்ளவே இல்லை.
ஹரிஷ்குமாரோடு வழக்கை முடிக்காமல், யார் யாரிடமிருந்து கஞ்சா கொள்முதல் செய்தார்? யாரிடமெல்லாம் விற்று காசாக்கினார்? யாரெல்லாம் இதற்கு உடந்தை? என்பதையெல்லாம் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரைவாசிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. எதிர்பார்ப்பு.
-ஷாகுல்
படங்கள் : ஆனந்தன்