GH -ன் மறுபக்கத்தைக் காட்டும் GH டைரி – Dr. கு. அரவிந்தன்
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு. கு.அரவிந்தன் #my_gh_diaries மூலம் உங்களுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி பொது மக்கள் நீங்கள் GH யின் மறுபக்கத்தை என்றுமே அறிந்ததில்லை. பத்திரிகைகளில், ஊடங்களில், சினிமாக்களில் GH யின் நெகடிவ் செய்திகள் மட்டுமே உங்களை சென்று அடைகிறது. அதை மாற்றுவதே எனது GH diaries கட்டுரை தொடரின் நோக்கம்.
இக்கட்டுரை, எமனின் பாசக் கயிற்றில் சிக்கிய ஒரு 11 வயது சிறுமியின் உயிரை எவ்வாறு எங்கள் GH எமனிடமே சண்டையிட்டு மீட்டது என்பதை பற்றியது. 24/08/25 11:05PM ஞாயிற்றுக்கிழமை, ஊரே ஞாயிறை மகிழ்வோடு கழித்து உறங்கிக் கொண்டிருந்த நேரம். என்னுடைய 24 மணிநேர பணி அன்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து, RMH குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவாகிய எங்களுக்கு. 11 வயது சிறுமி காலில் ஏதோ கடித்து சுயநினைவின்றி இங்கே தவறுதலாக கொண்டு வந்துள்ளார்கள் , உரிய முதலவி செய்து, செயற்கை சுவாசத்தை செலுத்தி அவரை நாங்கள் உடனடியாக ஆம்புலன்சில் அனுப்பி வைக்கிறோம் என்று ஒரு cal வருகிறது.
தொலைபேசியில் அவர்கள் சொன்ன விவரத்தை வைத்து அது பாம்பு கடியாக இருக்கும் என்ற யூகத்தில் (நான், பனி முதுகலை பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர், மற்றும் செவிலியர்கள்) பம்பரமாக சுழன்று எங்களுடைய தீவிர சிகிச்சைப் பிரிவை ஆம்புலன்ஸ் வருவதற்குள் தயார் செய்து விட்டோம்.

அச்சிறுமி தஞ்சை மருத்துவ கல்லூரி சென்ற போதே இரத்த ஓட்டமும், இருதய துடிப்பும் மிக மோசமான நிலைக்கு சென்று 2முறை CPR செய்து இருதய துடிப்பை திரும்ப வர வைக்கப்பட்டதை இங்கே குறிப்பிடுகிறேன் RMH PICU வில் அவனை இரவு 11.45 மணி அளவில் பெற்றோம்.. ஒரு நொடி தாமதம் இன்றி உடனடியாக ASV எனும் பாம்பு விஷ முறிவு மருந்து ஆரம்பித்தோம்..
துர்தஷ்டவசமாக அங்கிருந்து இங்கு மாற்றிய போது சுவாசக் குலாயில் பொருத்தப்பட்ட ET டியூப் சற்று விலகி இருந்தது அதை எடுத்து வேறு ட்யூப் போடும் பொழுது தொண்டையில் இருந்தும், மூக்கிலிரிந்தும் ரத்தம் மடமடவென வருவதை கண்டோம் .. பாம்பு கடி விஷத்தினால் இரத்த உறைவு தன்மை செயலிழந்து உடம்பில் இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது..
அவ்வாறு இருக்கும் நிலையில் டியூப் செலுத்துவது கடினம் என்பதால், மயக்க மருந்து நிபுணரின் உதவி கேட்கப்பட்டது, ஒரு சிசேரியனில் இருந்த நிலையில், அவரோ பட்ட மேற்படிப்பு மாணவிகள் இரண்டு பேரை உடனடியாக அனுப்பி வைத்தார்.. அடுத்த 5 நிமிடத்தில் அவரும் வந்து சேர்ந்தார்..
மூன்று நரம்பு ஊசிகள் செலுத்தப்பட்டு, ஒரு பக்கம் விஷமுறிவு மருந்து, ஒரு பக்கம் இருதய துடிப்பை சீராக்க Adrenaline எனும் மருந்து, இன்னொரு பக்கம் குழந்தைக்கு தேவையான நீர் (IVF) என பட்ட மேற்படடிப்பு மருத்துவர்கள் அதையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மயக்க மருந்து நிபுணரும் மிகுந்த சிரமத்திற்கு இடையே ET டியுபை தொண்டையில் செலுத்தினார். உடனடியாக அவனை வெண்டிலேட்டர் செயற்கை சுவாசத்தில் சேர்த்து விட்டோம்.
இதற்கிடையில் இரத்த கசிவை பார்த்த உடனே, எங்களது பயிற்சி மருத்துவ (House Surgeon) மாணவி உடனடியாக இரத்த வங்கிக்கு ஓடிச் சென்று மூன்று (FFP) வெள்ளை ரத்தங்களை வாங்கி வந்தார். அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்தப்பட்டது. 25 பாட்டில் ASV யும் மிகுந்த கவனத்துடன் செலுத்தப்பட்டது..
அடுத்த மூன்று மணி நேர தீவிர கண்காணிப்பிலும், தீவிர சிகிச்சையிலும் சிறுமியின் இருதயத் துடிப்பு சற்று சீராகயது நான் மேற்கொண்ட அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நடு சாமத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை யோசித்துக் கொள்ளுங்கள் இது அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாடில் கூட எளிதல்ல முன்கூட்டியே நான் கூறியது போல, தஞ்சை அருகே பாச்சூர் எனும் கிராமத்தில் சுமார் இரவு 9:30 மணி அளவில் பாம்பு தீண்டி மரண வாயில் வரை சென்ற சிறுமியின் உயிரை 4 மணி நேரமாக போராடி நடு இரவில் மீட்டு வந்தோம்.

இதில் மேலும் ஒரு சுவாரசியமான நிகழ்வு இருக்கிறது, முதலில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவனுக்கு CPR கொடுத்து காப்பாற்றியது பெண் மருத்துவ மாணவிகள், இங்கே எங்களுடைய ICU யில் என்னுடன் சேர்ந்து பணியில் ஈடுபட்ட 3 பட்டமேற்படிப்பு மருத்துவர்களும் மாணவிகள், மயக்க மருந்து மருத்துவர்கள் இரண்டு பேர் ஓடி வந்தர்களே அவர்களும் மாணவிகள், அங்கும் இங்கும் பம்பரமாய் வேலை பார்த்தார்களே செவிலியர்கள் அவர்களும் பெண்கள், இரத்த வங்கிக்கும் மருந்து செலுத்தும் இடத்திற்கும் ஓடி வேலை செய்தாரே House Surgeon அவரும் ஒரு மாணவி என்னையும், மயக்க மருந்து டாக்டர் இருவர் தவிர அச்சிறுமியை காப்பாற்றிய அனைவரும் பெண் மருத்துவர்களே ஆச்சிறுமி இன்று உயிருடன் இருப்பதற்கு அப்பெண்களே காரணம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நிகழ்வு சாத்தியம் இல்லை நமது தமிழக சுகாதாரத் துறையின் வலிமையையும், சுகாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பையும் இது பறைசாற்றுகிறது.
வெண்டிலேட்டரிலிருந்து இப்போது அந்த சிறுமி வெளியே வந்து நல்ல நிலைமையில் அபாய கட்டத்தை தாண்டி, தீவிர கண்காணிப்பில் இருக்கிறாள். சிறுமியை கடவுளாய் காப்பாற்றிய பெண் சக்திகளுக்கும், எனது GH க்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், மீண்டும் ஒரு GH டைரி மூலம் உங்களை சந்திக்கிறேன்.
— Dr. கு. அரவிந்தன்