அங்குசம் பார்வையில் ‘கோட்’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘கோட்’ திரைப்படம் திரைவிமர்சனம் !
தயாரிப்பு : ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்’ கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ். தயாரிப்பு தலைமை : அர்ச்சனா கல்பாத்தி, இணைத் தலைமை : ஐஸ்வர்யா கல்பாத்தி. டைரக்ஷன் : வெங்கட் பிரபு. நடிகர்—நடிகைகள் : விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, ‘மைக்’மோகன், லைலா, அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரா, பார்வதி, திலீப், பிரேம்ஜி, வைபவ். ஒளிப்பதிவு : சித்தார்த்தா நுனி, இசை : யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங் : வெங்கட் ராஜென், ஆர்ட் டைரக்டர் : ராஜீவன், காஸ்ட்யூம் : வாசுகி பாஸ்கர், பல்லவி சிங். எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம். பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே.அகமது & நிகில் முருகன் [ நிகில் முருகனுக்கு இது 525-ஆவது படம் ]
இந்திய உளவு அமைப்பான ‘ரா’வில் தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் படையில் இருக்கிறார் காந்தி [ விஜய் ] இவருடன் சுனில் [ பிரசாந்த்], கல்யாண்[ பிரபுதேவா] அதே படையில் வேலை பார்க்கிறார்கள். இவர்களது சீஃப்பாக இருப்பவர் நசீர் [ ஜெயராம் ]. காந்திக்கு அனுராதா [ சினேகா ] என்ற மனைவியும் ஐந்து வயதில் ஜீவன் என்ற மகனும் இருக்கிறார்கள். பிரசாந்தின் மனைவி லைலா.
தாய்லாந்தில் தீவிரவாத ஒழிப்பு ஆபரேஷனுக்காக விஜய், பிரசாந்த், பிரபுதேவா ஆகிய மூவரும் செல்கிறார்கள். தனது மனைவி சினேகாவையும் மகன் ஜீவனையும் கூடவே அழைத்துச் செல்கிறார் விஜய். அங்கே தீவிரவாதிகள் தாக்குதலில் ஐந்து வயது மகனைப் பறிகொடுக்கிறார் விஜய். இதனால் மனமுடைந்து ‘ரா’ வேலையிலிருந்து ராஜினாமா செய்கிறார் விஜய். 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே ‘ரா’வேலைக்குத் திரும்பும் சூழல் வருகிறது விஜய்க்கு. அது ஏன்? எதற்கு? இதற்கு விடை தான் இந்த ‘கோட்’.
உளவு அமைப்பு, தீவிரவாத ஒழிப்பு மூவர் கூட்டணி இதையெல்லாம் படிச்சதும் இது பக்கா எண்டெர்டெய்ன்மெண்ட் படமாத்தானே வந்திருக்கணும். அப்படின்னு நீங்க நினைச்சா அதுக்கு நாம பொறுப்பு இல்ல. ஏதோ நம்மால முடிஞ்சளவுக்கு வரிசைப்படுத்தி கொஞ்சம் பொறுப்புணர்வுடன் கதை மாதிரி சொல்லிருக்கோம். ஆனா விஜய் என்ற மாஸ் ஹீரோவும் 400 கோடியை செலவழிக்கிறதுக்கு கல்பாத்தி பிரதர்ஸும் கிடைச்சுட்டாகளேன்னு மிதப்புல கொஞ்சம் கூட கவலைப்படாம கண்டமேனிக்கு கதைவிட்டு, திரைக்கதைய சுத்தலில்விட்டு, ரசிகர்களை கதறவிட்ருக்காரு டைரக்டர் வெங்கட் பிரபு.
இன்னும் கொஞ்சம் ஓப்பனா சொல்லணும்னா நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் ‘தங்கப்பதக்கம், படத்துக்கு இப்போதைய அதிநவீன ‘டீ ஏஜிங்’ தொழில்நுட்பம் என்ற ‘கோல்டு கவரிங் கோட்’ அடிக்க ட்ரை பண்ணிருக்காரு வெங்கட் பிரபு. ஆனா அதுவும் இத்துப்போன ஈயம் மாதிரி இளிச்சுக்கிட்டுப் போயிருச்சு.
படத்தின் முதல் காட்சியே கென்யா நாட்டில் 2008-ல் ஆரம்பிக்குது. பாலைவனப்பகுதியில் போகும் ரயிலில், இந்தியாவில் குண்டு வைத்த தீவிரவாதி ராஜீவ் மேனன் [ ‘மைக்’மோகன்] போகிறார். அவரைப் பிடிப்பதற்கான ஆபரேஷனில் இறங்குகிறது விஜய், பிரசாந்த், பிரபுதேவா கூட்டணி. அதிரடி, அதகளமான சண்டையில் ரயில் வெடித்துச் சிதறுகிறது,
இந்த சண்டை முடிஞ்சவுடனே சரக்கடித்துவிட்டு ஒரு குரூப் சாங். அது முடிஞ்சவுடனே சினேகா-விஜய் செண்டிமெண்ட் சீன். அது முடிஞ்சவுடனே ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஒரு சேஸிங் ஃபைட். அது முடிஞ்சவுடனே தாய்லாந்தில் ஒரு சாங், அப்புறம் செண்டிமெண்ட் சீன். அது முடிஞ்சவுடனே அங்கேயே ஒரு சேஸிங் ஃபைட். இப்ப இடைவேளை. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் சீன், அது முடிஞ்சவுடனே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்ட்ல இருபது நிமிட க்ளைமாக்ஸ் ஃபைட். இதையெல்லாம் மூன்று மணி நேரம் மொத்தமா பார்த்தா… அதான் விஜய்யின் ‘கோட்’ .
மாஸ்கோவில் இந்திய தூதரகத்தை திறக்க முடியாத அளவுக்கு கலவரம் நடக்குதாம். கலவரத்தையும் அடக்கி, தூதரகத்தையும் திறப்பதற்காக இங்கிருந்து விஜய்யை அனுப்புகிறார்களாம். ஹலோ பிரதர் வெங்கட் பிரபு, எப்படிங்க, இப்படியெல்லாம் யோசிக்கிறீக? இதுக்கு தெலுங்கு பாலைய்யா படமே தேவலை போல.
படத்தில் விஜய் இருக்கிறார் என்பதற்காக பிரசாந்தையும் பிரபுதேவாவையும் டம்மியாக்காமல் இருந்ததற்காக வெங்கட் பிரபுவை பாராட்டலாம். ஆனா ஆகப்பெரிய தீவிரவாதியா பில்டப் கொடுத்துட்டு, கடைசில் மைக் மோகனை டம்மி பீஸாகிட்டீகளேப்பு.
படத்தில் கடின உழைப்பாளிகள் என்றால்.. அது ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனும் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனியும் தான். “மட்ட” பாட்டைத் தவிர, மற்றதையெல்லாம் கோட்டைவிட்ட யுவன்சங்கர் ராஜா, பின்னணி இசையில் பாஸாகிவிட்டார்.
ஆக்ஷன் படம் தான், மசாலா படம் தான். அதுக்காக படம் பார்க்குறவன் தலையில அரை கிலோ பச்சை மிளகாயை வச்சு அரைச்சுட்டு, 400 கோடியை 600 கோடியா ஆக்க நினைக்கலாமா ஏஜிஎஸ் பிரதர்ஸ் & பிரதர் வெங்கட் பிரபு ?
–மதுரை மாறன்