கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு இல்லை ஏன் ?
சேலம் மாவட்டம் ஓமலூரில் வசித்த, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் இரயில்வே தண்டாவளத்தில் பிணமாக இறந்து கிடந்தார்.
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவியைக் காதலித்த விவகாரத்திற்காக கோகுல்ராஜ் திட்டமிட்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறை வழக்கு தொடர்ந்தது.
சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 16 பேர் மீது தொடரப்பட்ட இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த மார்ச் 5ம் தேதி மதுரை, தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, யுவராஜூ மற்றும் அவரது கார் ஓட்டுனர் அருண் ஆகிய இருவருக்கும் 3 ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், இருவருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனையுடன் 5 ஆயிரம் அபராதமும் என தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எனது பார்வையை உங்கள் முன் வைக்கிறேன். கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிபதி சம்பத்குமார் நினைத்திருந்தால் தூக்குத்தண்டனை வழங்கியிருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தால் தூக்குத்தண்டனை பெற்றவர்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு போட்டு ஆயுள் தண்டனையாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
மேலும் ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்களுக்குரியது. நன்னடத்தை மற்றும் விடுமுறைகள் என 12 ஆண்டுகளில் விடுதலையாகி விடுவார்கள் என்பதால்தான் குற்றவாளிகளில் முதல் இருவருக்கு 3 ஆயுளும், அடுத்த ஐவருக்கு 2 ஆயுளும், அடுத்த இருவருக்கு ஒரு ஆயுளும் வழங்கி அனைவரும் சிறையிலேயே தங்களின் வாழ்நாளைக் கழிக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.
ஒருவேளை இந்த 10 பேருக்கும் தூக்குத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டு, கருணை மனு குடியரசுத் தலைவராலும் நிராகரிக்கப்பட்டு, அனைவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களின் உடல்களைச் சாதி ஆணவம் கொண்டவர்கள் பெற்றுப் புதைத்து, புதைத்த இடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை என்று கொண்டாடுவார்கள். தமிழகத்தில் சாதிக் கனல் இருந்துகொண்டே இருக்கும். இறுதி மூச்சு வரை ஆயுள் சிறை என்பதால், இனிச் சாதி வெறி கொண்டு கொலை செய்யத் துணிவோர் இந்த 10 பேருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை எண்ணிப் பார்ப்பார்கள்.
தங்களின் சாதி ஆணவத்தைக் குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல் என்றுதான் சொல்லவேண்டும்.