பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பாவப்பட்ட அரசு கல்லூரி !
ஐம்பது ஆண்டுகள் பழைமையான பாரம்பரியமிக்க துவாக்குடி அரசு கலை கல்லூரி 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மாணவர்கள் மாணவிகள் என இருபாலர் கல்வி கற்க கூடிய வகையில் அமையப் பெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. குறிப்பாக, திருவெறும்பூர், துவாக்குடி, போன்ற பகுதிகள் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் காவேரி பாசனம் பாயக்கூடிய டெல்டா மாவட்டங்களில் இருந்து உயர் கல்வி கற்பதற்காக மாணவர்கள் துவாக்குடி அரசு கலை கல்லூரியை நாடி வருகின்றனர். இந்த கல்லூரியில் படித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்று உயர்ந்த நிலையில் உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படிப்பிலும் விளையாட்டிலும் தனித்தன்மையுடன் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் பாவப்பட்ட கல்லூரி !
இந்த கல்லூரி அமைந்துள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுயில் அமைந்துள்ளது. இவ்வாறு புகழ்பெற்ற இந்த கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கான சுற்றுப்புற சூழல் இல்லாமல் உள்ளது. குறிப்பாக கல்லூரி வளாகத்தில் சுற்றிலும் கருவேல மரங்கள் நிறைந்து அமேசான் காடு போல காட்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிறைந்து உள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பிற்கு என எந்த ஏற்பாடும் இல்லை.
பரந்து விரிந்த கல்லூரியின் பெரும்பாலான பரப்பளவு பயன்பாடு அற்று கிடக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றுவரும், கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் அன்றாடம் பயணிக்கும் மாணவர்களுக்கான போதுமான பேருந்து வசதிகளும் இருப்பதில்லை. கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பலகட்ட போராட்டங்களை நடத்தியும், பேருந்துகளை சிறைபடுத்தியும் எந்தவித மாற்றமும் இல்லை. தொலைதூரத்திலிருந்து அன்றாடம் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் குறிப்பாக மாணவிகளும்கூட, தங்களது கிராமத்திற்கு செல்லும் கடைசி பேருந்தை தவறவிட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் படிகட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொள்வதை இன்றளவும் காண முடியும்.
விடுதி : இருக்கு ஆனா இல்லை !
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு குக்கிராமங்களிலிருந்தும், பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் கல்வி கனவை பூர்த்தி செய்யக்கூடிய கேந்திரமான கல்வி நிறுவனமாக துவாக்குடி அரசு கல்லூரி இயங்கி வருவது என்பதுதான் இதன் தனித்துவம். திருச்சி மாநகர் – மாவட்டத்தில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில், குறைவான மதிப்பெண் மற்றும் அவர்கள் கோரும் கல்வி கட்டணத்தை கட்ட இயலாத சூழல் போன்றவற்றின் காரணமாக அத்தகைய கல்லூரிகளில் சேர முடியாமல் போகும் மாணவர்களையும் அரவணைக்கும் அரசு கலைக்கல்லூரி இதுவென்றால் அது மிகையல்ல.
ஆனாலும், அவ்வாறு தொலை தூரங்களிலிருந்து அதிலும் குறிப்பாக போதுமான பேருந்து வசதியே இல்லாத கிராமப்புறங்களிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களின் அலைச்சலை போக்கும் வகையில் விடுதி வசதி அறவே இல்லை என்பது பெருங்கொடுமை. கல்லூரி வளாகத்திலேயே, அரசு செலவில் கட்டப்பட்ட விடுதி யாருக்கும் பயணில்லாமல் வெறும் கட்டிடமாகவே இருப்பது அவலத்தின் உச்சம்.
திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் தேவைக்கேற்ப விடுதி வசதியே இல்லை என்பதும் பெருங்குறையாகவே நீடித்து வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான விடுதிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அத்தகைய விடுதிகளில் சேர்க்கை கிடைப்பதே குதிரைக் கொம்புதான். ஆயிரக்கணக்கில் குவியும் விண்ணப்பங்களிலிருந்து சில நூறு மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலை உண்மையில் பரிதாபகரமானது. துவாக்குடி அரசுக்கல்லூரியை நம்பி தொலை தூரங்களிலிருந்து பயணிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரி வளாகத்திலேயே உள்ள கட்டிடத்தை புணரமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக, மாணவிகளுக்கான விடுதி வசதி கட்டாயம். விடுதி கட்டுவதற்கான இடவசதி தாராளாமாகவே கிடக்கிறது. அதற்கு அரசு மனம் இரங்க வேண்டுமே?
பழமை மாறாத பாழடைந்த கட்டிடங்கள் !
பழமை வாய்ந்த கல்லூரி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால், பாதுகாப்பற்ற எந்த நேரத்திலும் எவர் தலையில் இடிந்து விழும் நிலையிலுள்ள பாழடைந்த கட்டிடங்களை அப்படி எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படித்தான் இருக்கிறது கல்லூரி வளாகம். எந்த ஒரு கட்டிடத்திற்குமே அதன் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அவை எதுவும் அரசு கட்டிடங்களுக்கு மட்டும் பொருந்தாது போல.
வாய்ப்பிருந்தால், கல்லூரியை ஒருமுறை வலம் வந்து பாருங்களேன். தொல்லியல்துறை பராமரிப்பதை போல, பழமைவாய்ந்த கட்டிடங்கள் என காட்சி பெட்டகமாக பாதுகாத்து வருகிறதோ என்ற சந்தேகம் உங்களுக்கே எழும். அத்தகைய கட்டிடங்களில்தான், அன்றாடம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சில கட்டிடங்களுக்கு பெயர் என்னவோ, நியூ பில்டிங். ஆனாலும் அவையெல்லாம் முறையான பராமரிப்பு இன்றி, எந்த காலத்திலோ பூசிய வர்ணங்கள் பொலிவிழந்து ஐயோ பாவமாய் காட்சியளிக்கிறது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் வசதியோ, கழிவறை வசதியோ கிடையாது. கருவேலம் காடாக கல்லூரியே புதர் மண்டி கிடப்பதால், கிராமப்புறங்களை போலவே ஒதுக்குப்புறமாக ஒதுங்கும் அவலம்தான் இங்கே நிலவுகிறது. மாணவிகளின் நிலை இன்னும் பரிதாபம். மாதவிடாய் காலங்களில், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதவை.
சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிப்போன வளாகம் !
கருவேலம் காடுகளுக்கு மத்தியில் கல்லூரி இயங்கிவருகிறது என்பது ஒருபுறமிருக்க, கல்லூரியின் நான்கு புறமும் முறையான சுற்றுச்சுவர் இல்லாததால், கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் சமூக விரோதிகள் சர்வசாதாரணமாக வந்து செல்லும் அவலம் நிலவுகிறது.
போதாக்குறைக்கு, கல்லூரிக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபான கடை அமைந்திருக்கிறது. அங்கே சரக்கை வாங்கிக் கொண்டு, சைடிஷ் உடன் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து விடுகிறார்கள். பகல் நேரத்திலேயே இந்தக் கூத்துக்கள் சர்வசாதாரணம். கடந்த ஆண்டில் இதுபோன்ற ஒரு கும்பல் சாராய பாட்டிலுடன் கல்லூரி வளாகத்தில் சரக்கடித்துக் கொண்டிருந்ததை கேள்வி கேட்டதற்காக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. கல்லூரிக்கு அருகிலேயே இயங்கிவரும் டாஸ்மாக் சாராயக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை இன்றளவும் மாவட்ட நிர்வாகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது.
டூரிங் டாக்கீஸை நினைவூட்டும் கேண்டீன் !
அடித்துப் பிடித்து குறித்த நேரத்திற்கு பேருந்தைப் பிடித்து கல்லூரிக்கு வருவது என்பதே பெரும்பாடு. இதன் காரணமாக, பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை தவிர்த்துதான் பயணிக்கின்றனர். இன்னொரு பிரிவு மாணவர்கள் காலை உணவு முடித்து கல்லூரிக்கு வந்தாலும், மதிய உணவு நேரத்திற்குள் கல்லூரி முடித்து வீடு போய் சேரமுடியாத சிக்கலை எதிர் கொள்கிறார்கள். காலை மற்றும் மதிய உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கேண்டீன் வசதி அடிப்படை தேவைகளில் ஒன்று.

மலிவான விலையில், சிற்றுண்டிகள் கிடைப்பதை குறைந்தபட்சம் உடலுக்கு தீங்கிழைக்காத சிறுதானிய உணவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் அது பல மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கும்.
தற்போது இயங்கிவரும் கேண்டீனின் நிலை இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக்கூட பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. அதன் அமைப்பே ஏதோ 1950-களின் காலகட்டத்தில் சினிமா கொட்டகையின் சிற்றுண்டி கடையைத்தான் நினைவூட்டும்.
பாவப்பட்ட பேராசிரியர்கள் !
மாணவர் சேர்க்கைக்கு பஞ்சமில்லை. இன்னும் ஒரு ஷிப்டு முறையை அதிகபடுத்தினாலும்கூட, இன்னொரு மடங்கு மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டுதான் வருவார்கள். ஆனால், இப்போது இருக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அவசியமான பேராசிரியர்களே பற்றாக்குறை என்பது மையமான சிக்கல். அதிலும் ஒவ்வொரு துறையிலும் நிரந்தர பேராசிரியர்களின் எண்ணிக்கை மிக சொற்பம். தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படும் கௌரவ விரிவுரையாளர்களை கொண்டுதான் கல்லூரியை நடத்தி வருகிறார்கள். பாவம் அவர்களின் நிலை. பெயர்தான் கௌரவ விரிவுரையாளர்கள். சம்பளம்கூட, வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கௌரவமானதில்லை.
நகரில் இயங்கிவரும் பெரும்பாலான கல்லூரிகளில் அவர்களே நினைத்தாலும் கல்லூரியை விரிவுபடுத்துவதற்கு போதுமான இட வசதிகள் இருப்பதில்லை. துவாக்குடி அரசு கல்லூரியை பொருத்தமட்டில் தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அப்படியே இரட்டிப்பாக்கினாலும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு விசாலமான இடவசதியை கொண்டிருக்கிறது. போதுமான கட்டுமானங்களை எழுப்ப முடியும். மாணவர் – மாணவியர் விடுதிகளை நிர்மானிக்க முடியும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, உரிய கள ஆய்வு நடத்தி பாரம்பரியமான கல்லூரியின் மாண்பை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் போர்க்கால அடிப்படையில், கல்லூரி எதிர்கொள்ளும் சிக்கல்களை களைய வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.
விடிவு பிறக்குமா?
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் சொந்த தொகுதி என்பதோடு, தற்போதைய ஆளும் அரசில் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த மாவட்டத்தில் அமைந்த கல்லூரி. உயர்கல்வித்துறையை வைத்திருக்கும் கோவி.செழியன் பக்கத்து மாவட்டத்துக்காரர்தான். இவர்கள் நினைத்தால், கூடாத காரியம் இல்லை.

கல்லூரி சூழலை பாதுகாப்பதில் அரசுக்கு மட்டுமல்ல; இங்கே கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கல்லூரி மீதான பற்றுதல் காரணமாகத்தான், அடிப்படை வசதிகளுக்காக இந்திய மாணவர் சங்கத்தோடு இணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் பல்கலைகழகம் அறிவித்த அநியாய தேர்வு கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். கல்லூரி எதிர்கொள்ளும் சிக்கலையும், காலத்தின் தேவையையும் அரசிடம் முன்வைப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. அதை கடைசி வரை முன்னெடுத்து, முடித்து வைப்பதும் மாணவர்களின் கடப்பாடுதான். மாணவர் இயக்கங்களின் தோளில் சுமத்தப்பட்ட சமூக பொறுப்பும்கூட!
— ஜி.கே.மோகன், முதுகலை முதலாமாண்டு, அரசியல் அறிவியல் துறை.