இடையில் பறிபோன உரிமை ! உயர் கல்வித்துறையின் அதிரடி அரசாணை ! விடிவு கிடைத்த மகிழ்வில் பேராசிரியர்கள் !
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் 30.07.2025 தேதியிட்டு, வெளியாகியிருக்கும் அரசாணை எண்: 178 பல்கலை பேராசிரியர்களின் முக்கியமான நடைமுறை சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. பேராசிரியர்களின் இழந்த உரிமையை மீட்டெடுத்த விவகாரமாக மட்டுமின்றி, மாணவர்களின் கல்வி உரிமையையும் இதன்வழியே உறுதிபடுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் கல்வியாண்டின் இடைப்பட்ட மாதங்களில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் அதே கல்வியாண்டின் இறுதி வரையில் பணியை தொடர்வதற்கான சிறப்பு அனுமதி நடைமுறையில் இருந்துவருகிறது. மற்ற துறைகளைப் போல, கல்வித்துறையிலும் கறாராக குறிப்பிட்ட தேதியில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டால் அது மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் என்பதிலிருந்தே இந்த ஏற்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால், இதில் துரதிர்ஷ்டம். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் இந்த நடைமுறை, ஒரு காலத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் இருந்தது.

இடையில், அந்த உரிமை பறிபோனது. குறிப்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த சமயத்தில், அந்த உரிமை பறிக்கப்பட்டது. இது, மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்றும் கல்லூரி நிர்வாகத்தில் பல்வேறு வகையான நடைமுறை சிக்கல் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதையும் வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்களைப் போல, தங்களுக்கும் அத்தகைய சிறப்பு உரிமை தொடர வேண்டும் என்பதை கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில்தான், தற்போது அதற்கு ஓர் விடிவு காலம் எட்டியிருக்கிறது.

தமிழகத்தில் இப்படி ஒரு முன்னோடியான உத்தரவை பெறுவதற்கு காரணமாக அமைந்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன், விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் கல்லூரி முதல்வர் (முதல் நிலை), கல்லூரி முதல்வர் (இரண்டாம் நிலை), நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு கல்வியாண்டின் இறுதி மாதமான மே 31 ஆம் தேதி வரை மறு பணி நியமனம் செய்வதற்கான அரசாணை தமிழக அரசால் 30.07.2025 (இன்று) வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் உயர்கல்வியில் முதன்மையாக சிறந்து விளங்குவதற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி அனைத்து நிலைகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்களை காக்கும் திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்த அரசாணையினை வழங்கியமைக்காக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
உயர்கல்வி தொடர்பான முதலமைச்சரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து அதனை சிறப்பாக நிறைவேற்றி வரும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த பணி நீட்டிப்பு ஆணையினை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தந்தமைக்காக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த அரசாணையினை பெற்றுத் தர முயற்சிகளை மேற்கொண்ட உயர் கல்வித் துறை செயலர் சங்கர் இ.ஆ.ப., அவர்களுக்கும் கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி இ.ஆ.ப., அவர்களுக்கும் சிறப்பான நன்றிகளை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். ” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
-இளங்கதிர்