அரசின் சிறப்புத் திட்டங்களுக்கு தனி அலுவலர்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் சங்கங்கள் !
உயர் கல்வித் துறை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நவம்பர் – 12 அன்று திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் பி டேவிட் லிவிங்ஸ்டன் பங்கேற்று ஆசிரியர் தரப்பு கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.
கருத்துக் கேட்பு கூட்டத்தில் அவரது தரப்பு கருத்தாக, “தமிழக உயர் கல்வித் துறை வரலாற்றில் முதல் முறையாக இது மாதிரியான கருத்துக் கேட்பு கூட்டத்தினை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் ஏற்பாடு செய்ததற்காக அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் தமிழக அரசு கல்லூரிகளில் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இருப்பினும், இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் கல்லூரி பேராசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதுடன்பணிப்பளு அதிகமாகவும் மன உளைச்சல் கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது. எனவே, இத்திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக அனைத்து கல்லூரிகளிலும் புதிதாக ஒரு அலுவலரையும் அவருக்கு உதவியாளர் ஒருவரையும் நியமனம் செய்ய வேண்டும்.
அதுபோல, கல்வி உதவி தொகை தொடர்பான பணி மற்றும் UMIS விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஒரு மாணவருக்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகிறது. ஆகவே, இதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்து கல்லூரி பேராசிரியர்கள் கற்பித்தல் பணியினை செய்வதற்கு உதவ வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.” என்பதாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்