துறையூா் – பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி !
துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. துறையூர், கிருஷ்ணாபுரம், செல்லிபாளையம், மருவத்தூர், நரசிங்கபுரம், வேங்கடத்தனூர், அம்மம்பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து 184 மாணவ- மாணவிகள் இங்கு படிக்கின்றனர்.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு போதிய கழிவறை இல்லாததால் கூடுதல் கழிப்பறை கட்டடம் கட்டித் தர வேண்டுகோள் விடுத்தனர்.
AGAMT 2022-2023 திட்டத்தின் படி 5.30 லட்சத்தில் கழிப்பறை கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேற்கூரை மற்றும் தரைப்பகுதி சரிவர அமைக்கப்படவில்லை என்றும் முறையான கட்டமைப்பு வசதியுடன் கட்டப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
இந்நிலையில் தரைத்தளம் சரிவர அமைக்கப்படாததால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கழிவறை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் தரை தளத்தை பெயர்த்து விட்டு பின்னர் கட்டித் தருவதாக கூறி பூட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மழைக்காலம் என்பதால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் அவ்வப்போது தேங்கி நிற்கிறது. முறையாக கழிப்பறை கட்டித் தரப்படாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .பள்ளிக்குள் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அரசு பள்ளிக்கு தண்ணீர் தரப்படவில்லை.
இதனால் மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பள்ளி கழிப்பறை மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்குவதற்கும் உடனடி வசதி செய்து தர பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
–ஜோஷ்.