தமிழக ஆளுநரின் நடவடிக்கை – தமிழக அரசிற்கு எதிராகவா ?
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், இவர் ஆளுநராக இருந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டு ஆளுநர்கள் மாநிலத்திற்குள் ஆய்வு செய்யும் புதிய நடைமுறையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தினார். அன்று ஆட்சியில் இருந்த அதிமுகவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் புதிய ஆளுநராக உளவுத்துறை அதிகாரி ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றது முதலே விமர்சனங்கள் பெரிய அளவில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி ஆளுநர், அரசின் தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு தலைமைச் செயலாளரும் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்கு அறிக்கை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த முறை மக்களாட்சிக்கு எதிரானது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வசனங்களை முன்வைத்து வருகின்றன. அதேசமயம் பன்வாரிலால் போட்ட பிள்ளையார் சுழியை ரவியும் பின்தொடர்கிறார் என்று கூறுகின்றது.
மேலும் தற்போது டெல்லி சென்று இருக்கக்கூடிய ஆளுநர் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் பலரை சந்தித்து ஆலோசித்து வருவது திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுக்கவா என்ற கோணத்தில் திமுகவினர் சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இதுமட்டுமல்லாது மத்திய உள்துறை மூலமாக தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக ஆளுநர் கண்காணித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ராஜ்பவனுக்கு, சென் ஜார்ஜ் கோட்டைக்கும் இடையே மறைமுகப் போர் வெடித்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.