கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் : அனுமதி வழங்காமல் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி !
கடந்த ஏப்-24 அன்று தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திடமிருந்து டெல்டா மாவட்டங்களை பிரித்து ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. புதியதாக உருவாகும் அந்த பல்கலை கழகத்திற்கு, பெயர் சூட்டுவதில் எனக்கே தயக்கம் இருந்தது, ஆனால், பெரும்பான்மையான உறுப்பினர்கள் வலியுறுத்தியதிலிருந்து கலைஞர் பெயரில் புதிய பல்கலை கழகம் செயல்படும் என்பதாக அறிவித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏப்-28 ஆம் தேதி சபையில் முன்வைக்கப்பட்ட சட்ட மசோதாவின்படி, கலைஞர் பல்கலை கழகம் அமைய சட்டமன்றம் ஒப்புதல் வழங்கியது. தற்போது பாரதிதாசன் பல்கலையின் கீழ் திருச்சி, அரியலூர், கரூர், நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் இயங்கும் கல்லூரிகள் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றன. இனி, டெல்டா மாவட்டங்களான அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்கள் புதியதாக அமையப்பெறும் கலைஞர் பல்கலையின் கீழ் இயங்கும் என்பதாக அறிவிக்கிறது, அந்த மசோதா.
மேலும், வேந்தராக அப்போது பதவியில் வகிக்கும் தமிழகத்தின் முதல்வரே அங்கம் வகிப்பார் என்றும் வரையறுக்கிறது. இதற்கேற்ப, பாரதிதாசன் பல்கலை சட்டத்திலும் திருத்தங்களை செய்திருக்கிறார்கள். தற்காலிகமாக, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கலைஞர் பல்கலை செயல்படும் என்பதாகவும் அறிவித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.

இந்நிலையில், சட்டசபையில் நிறைவேறிய சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கும்பகோணம் வலங்கைமான் கள்ளப்புலியூரில் 60 ஏக்கர், சாக்கோட்டை பகுதியில் 40 ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும், இதுநாள்வரையில் கலைஞர் பல்கலை கழகம் அமைவதற்கான மசோதாவில் கையெழுத்திடாமல் புறக்கணித்து வருகிறார், ஆளுநர் ஆர்.என்.ரவி.

கடந்த ஜூன்-16 ஆம் தேதியன்று தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை அப்போதே பதிவு செய்திருந்தார். ஆளுநர் இந்நேரம் ஒப்புதல் அளித்திருந்தால், இந்த விழாவிலேயே நான் அடிக்கல் நாட்டியிருப்பேன். அது முடியாமல் போனதாக வேதனையும் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியிலிருந்துதான், உயர்கல்வித்துறை அமைச்சரும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தனது அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார். வழக்கம் போல ஆளுநர் அரசியல் செய்துவருவதாகவும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து அலசுகிறது, அங்குசம் ஆடுகளம்.
விரிவான வீடியோவை காண
— அங்குசம் சிறப்பு செய்தியாளர் குழு.