நாட்டிற்கு பேராபத்து ! எச்சரித்த மக்கள் அதிகாரம் மாநாடு !
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு பேராபத்து ! எச்சரிக்கும் மக்கள் அதிகாரம் மாநாடு !
”பாசிச பாஜகவை தோற்கடிப்போம் ! இந்தியா (INDIA) கூட்டணியை ஆதரிப்போம்!!” என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பங்கேற்போடு அரசியல் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
ஜனவரி-07 அன்று திருச்சியில் புத்தூர் நால் ரோடு சந்திப்பு அருகில் நடைபெற்ற இம்மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி., திமுகவின் தலைமைக் கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி, தீக்கதிர் இதழின் முதன்மை ஆசிரியரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச்செயலர் வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில இணைச் செயலர் செழியன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் பாடகர் கோவன், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில பொதுச்செயலர் ச.அன்பு, விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கம்பம் மோகன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலர் லோகநாதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் பங்கேற்று உரையாற்றினர். இம்மாநாட்டில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான கோபட் காந்தி சிறப்பு பங்கேற்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
தமிழகம் முழுவதிலிருந்தும் வருகை தந்திருந்த மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரசியலை ஆதரிக்கும் ஜனநாயக சக்திகளும் திரளாக திரண்டிருந்தனர். முன்னதாக, உறையூர் கடைவீதியிலிருந்து பேரணியாக புறப்பட்டு மாநாட்டுத் திடலை வந்தடைந்தனர். மாநாட்டிற்கு இடையூறாக அமைந்த மழைப்பொழிவிற்கு மத்தியிலும் நனைந்து கொண்டே உரையை தொடர்ந்த அரசியல் தலைவர்களும், கலைந்து செல்லாமல் உரையை கேட்டறிந்த தொண்டர்களுமாக காண்போரை வியப்பில் ஆழ்த்தியது, இம்மாநாடு.
”வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் 153 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு குற்றவியல் சட்டம் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் மசோதா திருத்தத்தை எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றியிருப்பது; பாஜக சங்பரிவார் கும்பலின் நூற்றாண்டு கால திட்டமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருப்பது; ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாகீ ஜே என்ற கூச்சலின் வழியே சிறுபான்மை மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை; ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்தின் மூலம் கூட்டாட்சி கோட்பாட்டை முற்றாக ஒழித்துக்கட்டுவது என்பவையெல்லாம் ஜனநாயக விரோத பாசிச சர்வாதிகார நடவடிக்கைகள். ஒருவேளை 2024 -இல் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வருமானால் இந்தியாவுக்கு அதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என்பதைத்தான் அவர்களது தொடர்ச்சியான ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கைகள் அறிவிக்கின்றன.
இந்த பின்புலத்திலிருந்துதான், பாசிச ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இந்த அரசியல் கருத்தை விரிவாக கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கிலிருந்துதான் இந்த அரசியல் மாநாட்டை பல்வேறு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறோம்” என்கிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சி.ராஜூ.
”2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இறுதிப்போர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி மீண்டும் பிரதமரானால் இதுபோல கூட்டங்களை நடத்த முடியாது. நமது சித்தாந்தங்கள் குறித்து பேச முடியாது. நமது தேசத்தையும் மக்களையும் காக்க முடியாது. பாஜக சட்டத்தை பயன்படுத்தியே தனது கொள்களைகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மனு தர்மத்தை சட்டமாக்கி நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஒருபோதும் நாம் இடம் தரக்கூடாது. கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிய இயக்கங்கள், அனைத்து முற்போக்கு கூட்டணிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.” என்றார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
”நமது வாக்குரிமையில் மட்டுமே நமது பலம் உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் மாநில சுயாட்சியின் இறையாண்மையைப் பறிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.” என்றார், டி.கே.எஸ். இளங்கோவன்.
”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதுடன் மாநில உரிமைகளை பறித்து போட்டி அரசாங்கம் நடத்தி கூட்டாட்சி முறைக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஆளுநர் பதவியை முழுமையாக ஒழிக்க வேண்டும்;தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை உறுதி செய்து கொள்ளும் உரிமை உத்திரவாதம் செய்யப்பட வேண்டும் எனவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்;
ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மக்களுக்காக குரல் கொடுத்த மோடி அரசை விமர்சித்த, எதிர்த்துப் போராடிய அறிவுஜீவிகள், மாணவர்கள் தலைவர்கள், சிறுபான்மையினரை காலவரையற்ற வகையில் விசாரணை கைதிகளாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் எந்த நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமாக வந்துபோகும் தேர்தல் அல்ல; பாசிசத்தை சட்டப்பூர்வமாக செயல்படுத்த மக்களிடம் நயவஞ்சகமாக பாசிச பாஜக அங்கீகாரம் கோரும் முக்கிய தேர்தலாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக. எதிர்கால தலைமுறையினர் சுயமரியாதையோடும் சுதந்திரமாகவும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ வேண்டும் என்றால் பாசிச பாஜகவை தோற்கடிக்க அணைவரும் ஒரணியில் திரண்டு இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், பாஜகவின் பாசிச செயல்பாடுகள் என்பதாக பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டியும், மாற்றாக இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறது, மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாடு.
– அங்குசம் செய்திப் பிரிவு.