2024 எம்பி தேர்தலில் காங்கிரஸ் வெல்ல சிறந்த யோசனை ! புலவர் முருகேசன் விடுக்கும் திறந்தமடல்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2024 எம்பி தேர்தலில் காங்கிரஸ் வெல்ல சிறந்த யோசனை! புலவர் விடுக்கும் திறந்தமடல்!

புலவர் க.முருகேசன் அவர்கள் 1971ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். பல ஆண்டுகாலம் திருவெறும்பூர் திமுக/மதிமுக ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார்.

திருச்சி மாவட்ட மதிமுக அவைத்தலைவராகவும் இருந்துள்ளார். மதிமுகவின் தேர்தல் பணிக்குழுச் செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது மதிமுகவின் மாநில விவசாய அணி செயலராகவும் பணியாற்றி வருகிறார். பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி, வைகோ, இடதுசாரி தலைவர்கள் என இவர்களின் நன்மதிப்பைப் பெற்ற அரசியல்வாதி. ஈழவிடுதலை செயற்பாட்டாளர். தமிழ்த்தேசியச் சிந்தனையாளர். மரபு கவிதை புனையும் கவிஞர். பல நூல்கள் படைத்த படைப்பாளி. சமரசம் இல்லாத அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

-ஆசிரியர்

 

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்    சோனியாகாந்தி அம்மையாருக்கு, வணக்கம். கொரோனோ பெருந்தொற்றிலிருந்து மீண்டு, நலம் அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

கடந்த மாதத்தில் ராஜஸ்தான் மாநிலம், உதயப்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு கூட்டம்’ நடைபெற்றது. அக்கூட்டத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான உத்திகளை வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்துவது என்பதன் மூலம் மக்களைச் சந்திக்கும் முடிவுக்கு வந்தது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். காரணம், மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுப்பதிலிருந்து காங்கிரஸ் வெகுதூரம் விலகியே உள்ளது என்ற கருத்தும் பொதுமக்கள் மத்தியில் உண்டு.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

உயர்ந்து வரும் விலைவாசி குறிப்பாகப் பெட்ரோல்,  டீசல் விலை உயர்வு, இரயில் கட்டண உயர்வு போன்ற பொதுமக்களைப் பாதிக்கும் எதற்கும் காங்கிரஸ் கட்சி கருத்து சொல்வதோடு நின்றுவிடுகின்றது, போராட்டக் களம் காணுவது என்பது அரிதினும் அரிதாக உள்ளது. காரணம் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் செல்வாக்கிழந்துள்ளது. செல்வாக்கோடு உள்ள மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளப் படாதபாடுபட வேண்டியுள்ளது.

வெல்லமுடியாத கட்சியாகப் பாஜக  தோற்றம் தருகின்றது. பாஜகவை வெல்லமுடியும் என்ற சிந்தனையோட்டத்தைக் காங்கிரஸ் பெற்றுள்ளது. அதற்குக் கட்சியில் சில கட்டமைப்புகளை மாற்றம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியதே. எனினும் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் திராவிட இயக்கத்தின் அரசியல் களத்திலும், தேர்தல் களத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நான், பாஜகவை 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெல்லுவதற்குச் சில பரிந்துரைகளை முன்வைத்தே இந்தத் திறந்த மடலை உங்களுக்கு அங்குசம் செய்தி இதழ் வழியாக எழுதுகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற இராகுல்காந்தி அவர்கள் கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது, ‘இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்புதான்’ என்று உரையாற்றினார். அதை இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பாராட்டினார்கள். இது ராகுலின் சிந்தனை வளர்ச்சியைக் காட்டியது.

உதயப்பூர் சிந்தனை அமர்வில் பேசும் போது,‘பாஜகவை அகற்றக் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். மாநிலக் கட்சிகளால் முடியாது’  என்று முரண்பாட்டோடு பேசினார். அதற்குப் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ராகுல்,‘2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மாநிலக்கட்சிகளின் துணையோடு பாஜகவை வெல்லுவோம்’ என்று அறிவித்தார். இதுபோன்ற குழப்பங்களைத் தலைவர் நிலையில் உள்ள இராகுல் காந்தி போன்ற மற்ற தலைவர்களும் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாஜகவை எதிர்த்து மத்தியப்பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பெற்றது. கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாகத்தான் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது. பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியைவிடக் குறைந்த எண்ணிக்கை யில் வெற்றிபெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டது காங்கிரஸ் எடுத்த நல்ல முடிவு.

அதைப்போலவே, மராட்டியத்தில் பாஜக+சிவசேனைக் கூட்டணி முறிந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சியும் இணைந்து இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கும் சிவசேனையோடு கூட்டணி அமைத்து, சிவசேனைக்கு முதல்வர் பதவி வழங்கியது காங்கிரஸ் கட்சியின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, கர்நாடகத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதுமட்டுமல்ல, எம்.எல்.ஏ. பதவியைத் துறந்து கட்சி மாறிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் பாஜக உறுப்பினர்களாகப் போட்டியிட்டு ஒருவர் இருவரைத் தவிர அனைவரும் வெற்றிபெற்றனர்.

காசுக்காகக் கட்சி மாறிய அந்தச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி மக்களைத் திரட்டி, தேர்தல் களத்தில் தோல்வியைத் தந்திருந்தால், பாஜகவுக்குப் பயம் ஏற்பட்டிருக்கும். காசுக்காகக் கட்சி மாறும் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். காங்கிரஸ் கட்சி பாஜகவுக்குப் பயத்தை ஏற்படுத்தவில்லை, கட்சி மாறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதிலேயே கட்சி பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் காங்கிரஸ் கட்சி உணரவேண்டும்.

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டது. 1.5% வாக்குகளில் பாஜக + நிதிஷ்குமார் கூட்டணி நூலிழையில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியும் காங்கிரஸ் கட்சி தேர்தல் களத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. காங்கிரஸ் கடும் முயற்சி செய்து சில இடங்களை வென்றிருந்தால் பீகாரில் பாஜக கூட்டணி தோல்வியைச் சந்திருக்கும் என்ற தேர்தல் ஆய்வாளர்களின் கூற்றைக் காங்கிரஸ் கட்சி ஆராய வேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தலைநகர் தில்லி சட்டமன்றத்தில் பாஜக ஆட்சியின்போதே காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்போது ஆம்ஆத்மி என்ற மாநிலக் கட்சி மொத்தமுள்ள 60 இடங்களில் 55 இடங்களில் வெற்றி பெறுகின்றது. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தோல்வியைச் சந்திக்கின்றது.  அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியையும் பாஜகவையும் மக்கள் ஓரம் கட்டிய நிகழ்வும் நடந்தது. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்ற நிலையிலும், எந்தக் கொள்கையும் கோட்பாடும் இல்லாமல் தொடங் கப்பட்ட ஆம்ஆத்மி என்ற கட்சி இரு தேசியக் கட்சிகளை வெல்லமுடிகின்றது என்றால் அது சொல்லும் பாடம் என்பது இதுதான்.

“காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் வேறுவேறு அல்ல. ஒன்றே என்பதுதான்.” காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவத்தைப் பேசுகிறது என்றால் பாஜக தீவிரவாத இந்துத்துவம் பேசுகிறது. காங்கிரஸ் முன்வைத்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை முன்மொழிந்தவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம். அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றவர் தமிழ்நாட்டின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர்.

இதைத்தான் பாஜக இப்போது தங்கள் கட்சியின் நோக்கமாகப் பேசிவருகின்றது. பணமதிப்பிழப்பைக் கொண்டுவரக் காங்கிரஸ் ஆலோசனை செய்தது. பாஜக பணமதிப்பிழப்பைச் செயல்படுத்தியது. மருத்துவப் படிப்பிற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்கள் ஏற்கவேண்டிய தேவையில்லை என்று காங்கிரஸ் கொண்டுவந்தது. பாஜக அனைத்து மாநிலங்களும் ஏற்றாக வேண்டும் என்று வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றது.

GST காங்கிரஸ் சிந்தனையில் உதித்தது. பாஜக அறுவடை செய்து வருகின்றது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைக் காங்கிரஸ் கட்சி சிறிய விழுக்காட்டை விற்று வந்தது. பாஜக பொதுத்துறை நிறுவனங்களையே விற்று வருகின்றது. காங்கிரஸ் இந்தி திணிப்பை இந்தி விரும்பாத மாநிலங்களின் மீது திணித்துவந்தது. பாஜக இந்தியோடு சமஸ்கிருதத்தையும் திணித்து வருகின்றது. இப்படிக் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் சிந்தனையின் தொடர்ச்சியாகவே பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. இரு கட்சிகளின் ஆட்சிக்கும் பெரிய அளவில் வேறுபாடுகளைக் காணமுடியவில்லை என்பதிலேதான் காங்கிரஸ் கட்சி மீண்டெழுவதில் சிக்கலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்ற பேருண்மையைக் காங்கிரஸ் கட்சி விளங்கிக் கொள்ளவேண்டும்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை மாநிலக் கட்சிகளின் உறுதுணையோடு காங்கிரஸ் வெல்லமுடியும். அதற்குக் காங்கிரஸ் கட்சி தன்னலம் என்பதை விடுத்துப் பொதுநலத்தோடு செயல்படவேண்டும்.

இந்தியாவில் உள்ள 31 மாநிலங்களில் பாஜக அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சி செய்யும் மாநிலங்கள் 1.உத்தரப்பிரதேசம், 2.கர்நாடகம், 3.குஜராத் 4.இமாச்சல் பிரதேசம், 5.மத்தியப்பிரதேசம் 6.சிக்கிம் 7.திரிபுரா 8.உத்தரகாண்ட் ஆகும்.

மாநிலக் கட்சிகளோடு பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் 1.அருணாசலப்பிரதேசம் 2.அஸ்ஸாம் 3.பீகார் 4.கோவா 5.அரியானா 6.மணிப்பூர் 7.மேகலாயா 8.நாகலாந்து 9.புதுச்சேரி ஆகும். இதில் 4 பெரிய மாநிலத்தில்தான் தனித்துப் பாஜக ஆட்சி நடத்தி வருகின்றது.

மாநிலக் கட்சிகளின் துணையோடு குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், பீகார், புதுச்சேரி உட்பட 9 மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு – திமுக, ஆந்திரம் – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கனா – சந்திரசேகரராவ் தெலுங்கனா கட்சி, கேரளம் – இடதுசாரி, மேற்குவங்கத்தில் – மம்தாவின் திருணமூல் காங்கிரஸ், ஒரிசா – பிஜூ ஜனதாதள், மராட்டியம் – சிவசேனா+காங்கிரஸ்+சரத்பவர் கட்சி, டெல்லி – ஆம்ஆத்மி, பஞ்சாப் – ஆம்ஆத்மி, இராஜஸ்தான் – காங்கிரஸ், சட்டீஸ்கர்– காங்கிரஸ் கூட்டணி என 11 மாநிலங்கள் எதிர்க்கட்சியின் வசம் உள்ளன. இதில் பெரும்பாலானவை பெரிய மாநிலங்கள் என்பது முக்கிய செய்தியாகும்.

காங்கிரஸ் மாநிலக் கட்சிகளோடு தேர்தல் உடன்பாடு அமைத்துக் கொள்ளவேண்டும். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அல்லது சமூகநீதிக் கூட்டணி என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநிலக் கட்சிகளையும் காங்கிரஸ் ஒன்றுதிரட்டவேண்டும். அதில் ஆந்திராவின் ஜெகன்மோகன், பீகாரின் நிதிஷ் ஒரிசாவின் நவீன்பட்நாயக் மேற்கு வங்கத்தின் மம்தா இடதுசாரிகள், வடகிழக்கு மாநிலக் கட்சிகள் அனைத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தி ‘குறைந்தபட்சச் செயல்திட்டத்தின் அடிப்படையில்’ கூட்டணி அமைக்க முன்வரவேண்டும்.  அப்படிக் கூட்டணி அமைக்கப்பட்டால் காங்கிரஸ் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையும்கூட ஏற்படலாம். அந்நிலையில் காங்கிரஸ் விட்டுக்கொடுத்துப் பாஜகவை அப்புறப்படுத்துவதற்கு அணியாகவேண்டும்.

குறைந்தபட்சச் செயல்திட்டத்தில், “மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மாநிலச் சுயாட்சியை உறுதி செய்யவேண்டும். நிஷிஜி, நீட் போன்றவை மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மதச்சார்பின்மையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியாவின் 22 அட்டவணை மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும்.

இந்தியா ஒரு நாடு அல்ல; மாநிலங்களின் ஒன்றியம் என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனம் என்னும் விதைநெல்லை விற்றுத் தின்ன அனுமதிக்கக்கூடாது. அரசு நிறுவனங்களின் எண்ணிக்கை உயரவேண்டும். அனைவருக்கும் சமநீதி சமூகநீதி வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் நலம் காக்கப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் பிராமணியச் சிந்தனைகள் அடியோடு புறந்தள்ளப்பட வேண்டும். பாஜகவின் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிர்நிலை எடுத்தால்தான் காங்கிரஸ் வெற்றி பற்றி சிந்திக்கமுடியும். பாஜகவின் தீவிரவாதச் சிந்தனைப்போக்குக்கு ஒத்துழைப்பான மென்மைவாத சிந்தனைப்போக்கைக் காங்கிரஸ் கைவிட வேண்டும். அப்போதுதான் இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சியை “இது நாட்டைக் காக்கும் கை, இது வீட்டைக் காக்கும் கை, இதுதான் எதிர்கால நம்பி‘கை’ என்று காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிக்க முன்வருவார்கள்.

பாஜகவையும் மோடியையும் அப்புறப்படுத்த மக்கள் அணியாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அணியாக உள்ளதா? என்ற கேள்விக்குக் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைப்போம் என்ற பதிலை மக்கள் மன்றத்தில் சொல்லவேண்டும். அதற்கான முன்னெடுப்புகளைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அம்மையார் சோனியாகாந்தி எடுக்கவேண்டும்.

இந்தியா மீண்டும் மாநிலங்களின் ஒன்றியமாக மலரவேண்டும். மாநிலங்கள் உரிமை பெற்று மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். 2024ஆம் ஆண்டு உண்மையான புதிய இந்தியா பிறக்கவேண்டும் என்று ஒரு குடிமகன் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது என் குரல் மட்டுமல்ல; மக்களின் குரலும்கூட.

 

(அடுத்த மடலில் சந்திப்போம்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.