குண்டாஸ் 100 : சபாஷ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் !
140 ஆண்டுகால திருச்சி மாவட்ட போலீசு வரலாற்றிலேயே முதல்முறையாக, அடுத்தடுத்து 100 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறார், திருச்சி மாவட்ட எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்.
சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதுதான் போலீசாரின் பிரதான பணி என்ற போதிலும்; நடைபெற்ற குற்றங்களின் மீதான நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாதிருக்க அவர்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள்தான் போலீசாரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

குறிப்பாக, தமிழக அரசியல் சூழலில் ஆளும்கட்சிக்கு எதிராக தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுள் முதன்மையானதாகவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை அமைந்திருக்கிறது.
இந்த பின்னணியில்தான், திருச்சி மாவட்டத்தின் கண்காணிப்பாளராக செ.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ். கடந்த 2025 ஜனவரி-06 ஆம் தேதி பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரையிலான இடைப்பட்ட பத்து மாத காலத்தில், 100 பேரை அடுத்தடுத்து குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கவனத்தைப் பெற்றிருக்கிறார்.

சட்டம் ஒழுங்குப்பிரச்சினை தொடர்பான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 20 பேர்; போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் 27 பேர்; போஸ்கோ வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 6 பேர்; சைபர் கிரைம் குற்றத்தில் தொடர்புடைய 2 நபர்கள் என திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து இதுவரை 100 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி.யாக பதவியேற்ற முதல் மூன்று மாதங்களிலேயே, சிறப்பு தீவிர வேட்டை (Special Drive) என்ற பெயரில் சிறப்புப் படைகளை அமைத்து தனது அதிரடியை தொடங்கியிருந்தார் எஸ்.பி.செல்வநாகரத்தினம். இதன்படி, மாவட்டத்தில் குற்றப்பின்னணி கொண்ட ரவுடிகளின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு (OCIU) போலீசாரின் இரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அடையாளம் காணப்பட்ட ரவுடிகள் 57 பேரில், அவர்கள் தொடர்ந்து இழைத்துவரும் குற்றங்களின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் முதற்கட்டமாக 18 பேரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருந்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் போதைப்பழக்கத்துக்கு எதிரான தீவிர முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவதன் தொடர்ச்சியாக, கஞ்சா கேஸில் சிக்கினால் குண்டாஸ் கன்பார்ம் என்ற நிலையை திருச்சி மாவட்டத்தில் உருவாக்கினார்.
பொதுவில் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில், போலீசாரின் நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், திருச்சி லால்குடி – புறத்தாக்குடியை சேர்ந்த முதியவர் ஆரோக்கியசாமி என்பவரிடம் ஆன்லைனில் கடன் தருவதாகக்கூறி பணம் பறித்த விவகாரத்தில் தொடர்புடைய சைபர்கிரைம் குற்றவாளிகள் இருவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ததும், திருச்சி மாவட்ட போலீசு வரலாற்றிலேயே முதன்முறையாக அமைந்தது.
சென்னையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் பயணித்த காரை வழிமறித்து 10 கிலோ தங்கத்தை கடத்திய வடமாநில குற்றவாளிகள் 12 பேரை கூண்டோடு அதிரடியாக கைது செய்ததோடு, அந்த வழக்கில் கைதான குற்றவாளிகளில் பெண் ஒருவரை தவிர்த்து மற்றவர்கள் அனைவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் கைதான போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இருவர் மீது பதியப்பட்ட குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழான கைதை தொடர்ந்து, திருச்சி மாவட்ட வரலாற்றில் முதன்முறையாக 100 குண்டாஸ் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1885 ஆம் ஆண்டிலேயே ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்த காலத்தில்தான் திருச்சி காவல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு முதல் எஸ்.பி. பதவியேற்றிருக்கிறார். அதன்படி, தற்போது எஸ்.பி.செல்வநாகரத்தினம் 113-வது எஸ்.பி.யாக இயங்கி வருகிறார். 1947-க்குப் பிறகான காலத்தை கணக்கிட்டால், திருச்சி மாவட்டத்தின் 63 எஸ்.பி.யாக இருக்கிறார். எதுவாயினும், திருச்சி மாவட்ட காவல்துறை உருவாக்கப்பட்ட 140 ஆண்டுகால கடந்த கால வரலாற்றில் அடுத்தடுத்து 100 குண்டாஸ்களை பதிவு செய்திருப்பது இதுவே முதல்முறை என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெற்றிருக்கிறார்.
இவர்களை போன்று, திருச்சி மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யாரேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்பட்சத்தில், பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என்றும் எஸ்.பி. அலுவலக போலீசார் தெரிவிக்கிறார்கள்.
— ஆதிரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.