அரைகுறையாக பாதாளசாக்கடைத் திட்டம் ! மூன்று மாதங்களாக கிடப்பில் திருச்சி – அரியமங்கலம் பகீர் –

0

அரைகுறையாக முடிக்கப்பட்ட பாதாளசாக்கடைத் திட்டம் ! எந்நேரமும் எதுவும் நடக்கலாம் … திருச்சி – அரியமங்கலம் பகீர் – ”ஒருத்தன் வந்தான் சாலையோரம் குறிப்பிட்ட இடைவெளியில் குழியை தோண்டிவிட்டுச் சென்றான். மற்றொருவன் வந்தான் போட்டிருந்த குழியை எல்லாம் மண் போட்டு மூடிச் சென்றான். இதனைக் கண்டவர் ஒருவர் வழிமறித்து, குழியைப் பறித்து பின் மூடிவிட்டு செல்கிறீர்களே? என்று கேட்டதற்கு சொன்னானாம்.

மரக்கன்றுகளை நடுவதற்காக போடப்பட்ட குழி. முன்னவன் குழியைப் போட டெண்டர் எடுத்தவன். நான் குழியை மூட டெண்டர் எடுத்தவன். இடையில் மரக்கன்றுகளை நடுவதற்கு டெண்டர் எடுத்தவன் அவன் வேலையை செய்யவில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் எங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறோம்.” என்றானாம்.

அரைகுறையாக பாதாள சாக்கடை
அரைகுறையாக பாதாள சாக்கடை

தமிழகத்தில் டெண்டர் விடப்பட்டு மேற்கொள்ளப்படும் பெரும்பாலான பணிகளில் இத்தகைய மோசமான அனுபவங்களைத்தான் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதற்கு எடுப்பான உதாரணமாக அமைந்துவிட்டது, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் அரைகுறையாக முடிக்கப்பட்ட பாதாளசாக்கடைத் திட்டம்.
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை என்பது எப்போதும் பரபரப்பாக வாகன நெரிசல்களை கொண்ட நெடுஞ்சாலை.

இந்த நெடுஞ்சாலையில் இரு பக்கமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை, நிறைவேறாத கனவாகவே மாறிய ஒன்று. இதனால், அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி பல போராட்டங்களை நடத்தி அலுத்துவிட்டார்கள் இப்பகுதி மக்கள்.

அரைகுறையாக பாதாள சாக்கடை
அரைகுறையாக பாதாள சாக்கடை

இந்நிலையில், வணிகவளாகங்களும் நெருங்கிய குடியிருப்பு பகுதிகளும் கொண்ட அரியமங்கலம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையையொட்டி பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான வடிகால் அமைக்கும் பணி கடந்த மார்ச்- ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது.

அப்போதே, சர்வீஸ் சாலையையொட்டி அமைந்திருந்த திறந்தவெளி சாக்கடை கால்வாயை ஒட்டி ஆழமான பள்ளங்களைத் தோண்டினார்கள். தோண்டிய பள்ளங்களால் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளும்; நெடுஞ்சாலை என்பதால் இரு பக்கத்திலும் அமைந்த வணிக வளாகங்களில் அமைந்திருந்த பல்வேறு வியாபார நிறுவனங்களை நடத்தி வந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நல்ல நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் அரசின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திலிருந்து அத்தகைய தற்காலிக இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்ற மனநிலையில் கடந்தும் சென்றனர்.

அரைகுறையாக பாதாள சாக்கடை
அரைகுறையாக பாதாள சாக்கடை

ஆனாலும், பாதாள சாக்கடை திட்டத்திற்கான வடிகால் அமைக்கும் பணி முழுமையாக நிறைவேறிய பின்னரும்கூட, இன்றுவரையில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாக சரிசெய்யாமல் கிடப்பில் போட்டிருப்பதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

தற்போது புதியதாக கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடைத்திட்டத்திற்கான கால்வாய் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதேசமயம், அதற்கு இணையாக ஏற்கெனவே இருந்த திறந்தவெளி கால்வாயை மூடியிருந்த சிமெண்ட் சிலாப்புகள் முற்றிலும் சேதமடைந்திருக்கின்றன. புதிய கட்டுமானத்திற்கு முன்புவரை ஒழுங்காக இருந்த சிலாப்புகள், கட்டுமானப் பணிகளின்போதுதான் சேதமடைந்திருக்கின்றன.

அவ்வாறு சேதமடைந்து, அவ்வழியே கடந்து செல்வோர் எவரும் எந்நேரமும் அதில் விழுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் சாக்கடை கால்வாயைத்தான் இதுவரை சரிசெய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார்கள். அதுவும் பணி முடிந்து கடந்த மூன்று மாதங்களாக நீடிக்கிறது இந்த அவலம்.

அரைகுறையாக பாதாள சாக்கடை
அரைகுறையாக பாதாள சாக்கடை

திருச்சி மாநகராட்சியின் 36-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக்கேயனிடம் பேசினோம். “பாதாள சாக்கடைக்கான பணிகளை மேற்கொள்ளும்பொழுதுதான் அவை சேதமடைந்திருக்கின்றன. என்னுடைய கவனத்திற்கு வந்தது. சிறிய அளவிலான சேதமாக இருந்திருந்தால், நானே முன்னின்று செய்திருப்பேன். குறிப்பிட்ட தொலைவிற்கு சேதமடைந்திருக்கிறது. காண்டிராக்ட் எடுத்தவர்களும் UGSS (Under Ground Sewerage Schemes) திட்டப் பணியாளர்களும்தான் இதை செய்து தரவேண்டும். அதற்கு நான் முயற்சித்து வருகிறேன்.” என்கிறார்.

சம்பந்தபட்ட சாக்கடை கால்வாய்த்திட்டத்தை செயல்படுத்திய காண்டிராக்டர் அருளிடம் பேசினோம். “எங்களுக்கு இந்த திட்டத்தை செய்வதற்கு ஒப்புதல் அளித்த UGSS அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். அவர்களின் அனுமதி இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் சொன்னால் கண்டிப்பாக செய்து தருகிறோம். ” என்கிறார்.

திருச்சி மாநகராட்சியின் UGSS திட்டத்தின் கீழ் சூப்பர்வைசராக பணியாற்றும் அஜீர்ஷாவிடம் பேசினோம். “பாதாள சாக்கடைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, பல துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. அவ்வாறு எந்தவித இடையூறுமின்றி எளிதாக இந்தப்பணியை மேற்கொள்வதற்காகவே நாங்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிடும் பகுதி தேசிய நெடுஞ்சாலை NHAI (National Highway Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள இடம். இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே அவர்களின் அனுமதியைப் பெற்றுத்தான் தொடங்கினோம்.

அப்போதே, அவர்கள் பணியின்போது ஏற்படும் சேதாரங்களை நீங்கள் சரிசெய்து தரவேண்டியதில்லை. அந்தப் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடுங்கள். அதற்குரிய இழப்பீட்டை மட்டும் வழங்கிவிடுங்கள் என்பதாகத்தான் ஒப்புதல் தந்தார்கள். நாங்களும் பணி முடித்து அவர்களுக்கு பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். ஆனாலும், இதுவரையில் அவர்கள் தரப்பில்தான் பணியை முடிக்காமல் இருக்கிறார்கள்.

அரைகுறையாக பாதாள சாக்கடை
அரைகுறையாக பாதாள சாக்கடை

கடைசியாக, பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார் வந்ததையடுத்து மீண்டும் நினைவூட்டியபோது, “நாங்கள் எங்களது வரிசைக்கிரமப்படித்தான் பணிகளை நிறைவேற்றுவோம். நீங்கள் சொல்வது போல, குறிப்பிட்ட பகுதியில் உடனே செய்ய முடியாது. விரைவில் சரிசெய்துவிடுவோம்” என்றுதான் பதிலளித்தார்கள். நாங்களும் எங்களது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கிறோம்.” என்கிறார், அவர்.

தொடக்கத்தில் சொன்ன கதைதான். எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் பகுதியில், சர்வீஸ் சாலையை ஒட்டியே இதுபோல சிலாப்புகள் பெயர்ந்து கிடக்கும் சாக்கடை கால்வாயால் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்கள் மட்டுமல்ல; எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக சரிசெய்யப்பட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

– ஆதிரன்.

Leave A Reply

Your email address will not be published.