Police மீது புகார் கொடுத்த இளம்பெண் மாயம் ! அதிர்ச்சி Report!
தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி சீரழித்த ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, கடந்த ஓராண்டு காலமாக போராடி வந்த 24 வயதேயான பாதிக்கப்பட்ட பெண் பொருட்செல்வி திடீரென மாயமாகிவிட்டதாக அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, காணாமல் போன பொருட்செல்வி என்ன ஆனார்? என்ற பதைபதைப்பில் இருந்த அவரது சகோதரர் சிற்சபையிடம் பேசினோம். “புதுக்கோட்டை, தெம்மாவூர் கள்ளர் தெருவில் வசித்து வருகிறோம். எனது தங்கை பொருட்செல்வி நர்சிங் முடித்துவிட்டு திருச்சியில் தங்கி பணியாற்றி வந்தார். எங்களது ஊரில் வசித்து வரும் தீபா மற்றும் அவரது கணவர் செந்தில் அறிமுகத்தில், தீபாவின் சகோதரர் பாலமுருகன் என்பவருக்கு பெண் கேட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணுகினர். பிறகு நல்ல நாள் பார்த்து இரு குடும்பத்தாரும் கலந்து பேசிக்கொள்ளலாம் என்று முடிவான நிலையில், இருவரும் மொபைல் எண்ணை பரிமாறிக்கொண்டு பேசத் தொடங்கிவிட்டனர்.
ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்த பாலமுருகன் திருச்சியில் போலீசு குடியிருப்பில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் எனது தங்கையுடன் நட்பாக பழகியிருக்கிறார். திருமணம் செய்துகொள்ளத்தானே போகிறோம் என்று இருவரும் நெருக்கமாக பழகியிருக்கின்றனர். இந்நிலையில், கர்ப்பமடைந்த நிலையில், அவரே கூட்டிச்சென்று கலைத்திருக்கிறார். இதற்கிடையில், என் தங்கையுடன் பேசுவதை அவர் தவிர்த்திருக்கிறார். நாங்களும் அந்த வரண் வேண்டாம். வேறு இடத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுங்கியிருந்தோம்.
ஆனாலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி நட்பாக பழகி ஏமாற்றியதை என் சகோதரியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இந்த வரண் மீது எனக்கு விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. என் சகோதரி தனிப்பட்ட முறையில், போலீசில் புகார் கொடுத்தார். முதலில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடம் திருச்சி என்பதால் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் போலீசுக்கு வழக்கை மாற்றினர்.
அங்கும் சென்று புகார் கொடுத்தார். ஆனால், அங்கு விசாரித்த எஸ்.ஐ. தமிழ்ச்செல்வி, மற்றும் உஷா ஆகிய இருவரும் எனது தங்கையிடம் நைச்சியமாக பேசி செல்போனில் இருந்த ஆதாரங்களை அழித்திருக்கிறார்கள். போலீசு நடவடிக்கையிலிருந்து தப்பிக்க பாலமுருகன் திருமணம் செய்து கொள்வதாக நாடகமாடியதை வைத்து, புகாரை வாபஸ் வாங்குமாறு எனது தங்கையை மிரட்டியிருக்கிறார்கள்.
பாலமுருகன் போலீசாக இருப்பதால், நாங்களே வழக்கு போட முடியாது. வேண்டுமானால், கோர்ட்டில் ஆர்டர் வாங்கி வாருங்கள் என்று போலீசார் அறிவுரை சொன்னார்கள். இதையும் குறிப்பிட்டு, திருச்சி கலெக்டரிடம் எனது தங்கை சென்ற நவம்பர் மாதமே புகார் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான், ஊருக்கு வந்து திரும்பி சென்றவள் ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. பாலமுருகனின் தம்பி சுரேஷ் என்பவர்தான் எனது தங்கைய திருமணம் விசயம் தொடர்பாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றதாக, வாய்ஸ் மெசேஜ் ஒன்றை தங்கை அனுப்பி வைத்திருக்கிறாள். அதன்பிறகு, அவளை தொடர்புகொள்ளவே முடியவில்லை. பாலமுருகன் வீட்டிலும் யாரும் இல்லை. அவர்களிடம் கேட்டாலும் எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள்.
நாங்களும் எங்களது உறவினர்கள் தரப்பில், அவரது நண்பர்கள் தரப்பிலும் விசாரித்துவிட்டோம். எங்கும் இல்லை. போலீசில் புகார் கொடுத்து இரண்டு நாட்களாயிற்று. எங்களிடமே எவிடன்ஸ் வேண்டும் என்கிறார்கள். பாலமுருகன் குடும்பத்தினர்தான் கூட்டிச் சென்றார்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் கொடு என்று கேட்கிறார்கள். ஸ்டேஷனுக்கு எதேச்சையாக வந்த டி.எஸ்.பி. சாரிடம் சொன்ன பிறகே, கொஞ்சம் கவனம் கொடுத்து விசாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். நவம்பர் 30 தேதியிலிருந்து தொடர்பு இல்லை. என்ன ஆனார் என்றே தெரியவில்லை.” என்பதாக குறிப்பிடுகிறார், பொருட்செல்வியின் சகோதரர் சிற்சபை.
பாலமுருகனின் சகோதரர் சுரேஷை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. அவரது சகோதரியின் கணவர் செந்திலை தொடர்புகொண்டோம். அழைப்பை ஏற்று பேசிய, பாலமுருகனின் சகோதரி தீபா, எனது நம்பரை யார் கொடுத்தது என்று நம்மிடமே குறுக்கு விசாரணையை நடத்தியவர், இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் அழைப்பை தவிர்த்துவிட்டார். கீரனூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். “புகார் கொடுத்திருக்கிறார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.” என்பதாக முடித்துக் கொண்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தன்னை ஏமாற்றிய பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக பொருட்செல்வி போராடி வந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதும்; மாவட்டத்தின் எஸ்.பி.யாக வந்திதா பாண்டே வருண்குமார் பணியாற்றும் மாவட்டத்திலேயே, இளம்பெண் காணாமல் போன விவகாரத்தில் போலீசார் அலட்சியம் காட்டியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-ஆதிரன்.