துரைமுருகன் – முடிவை மறுபரிசீலனை செய்வாரா ?
திமுக அறிவித்திருக்கிற அவர்களது 164 வேட்பாளர்களில், 60 புதுமுகங்கள்; 18 பெண்கள்; 125 பட்டதாரிகள்; 29 வழக்கறிஞர்கள்; 17 பொறியாளர்கள்; 15 மருத்துவர்கள்; 7 PhD முனைவர்கள் – எல்லாம் நன்றாக இருக்கிறது.
எனக்கு ஒவ்வாத ஒன்று, 87 வயதான துரைமுருகன் வேட்பாளராக இருப்பது. இந்த வயதில் அவரே பெருந்தன்மையாக ஒதுங்கிக் கொண்டிருக்க வேண்டும். இப்போது திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் அவர், தன் அனுபவத்தையும் அரசியல் அறிவையும் கொண்டு அடுத்தத் தலைமுறையை கட்சிக்குள் வழிநடத்தும் பெரிய பணியைச் செய்ய, அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விலகியிருக்க வேண்டும்.

முதல்வரும், இன்னும் பிறரும் அவரிடம் நிச்சயம் இதுகுறித்துப் பேசியிருப்பார்கள் என நான் நம்புகிறேன். ஒரு அளவுக்கு மேல் மூத்தத் தலைவரிடம் சொல்லமுடியாது. அவர் இதை வலிந்து கேட்டிருப்பார் என்றும் நினைக்கிறேன்.
இந்த முடிவை அவர் மட்டுமே எடுத்திருக்க முடியும். இது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அவர் விலகியிருந்தால் அது திமுகவுக்கு இன்னும் கொஞ்சம் வலிமையைக் கூட்டியிருக்கும்.
உயர்நிலையிலிருப்பவரும், வயது முதிர்ந்தவரும் தங்களுக்கிருக்கும் ஆள் – பண பலங்களை வைத்து, பலரைக்கொண்டு தங்கள் தொகுதியை சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஆனால், அதுமட்டுமே பார்வையாகி விடாது. சமநீதி என்று வரும்போது, காலங்காலமாக தங்கள் கட்சியில் உழைத்து வரும் அடுத்த தலைமுறைக்கு எப்படி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறோம் என்பதும்தானே பார்க்கப்படும்? இப்போதும் ஒன்றும் முடிந்துவிடவில்லை.
அவர் இன்னமும் தன் முடிவை மாற்றிக்கொள்ளலாம். மாற்றி பிறர் மதிப்பில் உயரலாம். உழைத்துக் காத்திருப்பவருக்கு நம்பிக்கையை ஊட்டலாம்.
— ஜேம்ஸ் வசந்த்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.