தனிப்பட்ட தகராறுகளுக்காக பொதுநல வழக்கா? சவுக்கு சங்கருக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம் !
ஐ.பி.எஸ். அதிகாரி அருணுக்கு எதிராக சிபிஐ விசாரணை கேட்டு, யூடியூபர் சவுக்கு சங்கர் தொடுத்திருந்த வழக்கில், ”தனிப்பட்ட தகராறுகளுக்காக ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டு கடுமையான கண்டனங்களுடன் வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “ரியல் எஸ்டேட் வியாபாரி சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், குண்டர் சட்டத்தின் கீழான போலீசின் நடவடிக்கையை ரத்து செய்து, அருண் ஐபிஎஸ் அந்த உத்தரவை “புறம்பான காரணங்களுக்காக” பிறப்பித்ததாகவும், இத்தகைய உத்தரவுகளை பிறப்பிப்பதில் “பழக்கப்பட்டவர்” என்றும் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்த கருத்துக்களை, அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொண்டு, எனக்கு மட்டுமில்லை. அவர் இப்படித்தான் பல பேர் மேல குண்டாஸ் போட்டிருக்காரு. இந்தந்த வழக்குல இப்படி இப்படி நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கு” அப்படினு கோரிக்கையும் வைத்திருந்தார் சவுக்கு சங்கர்.
இந்த வழக்கின் விசாரணையில்தான், பொதுநல வழக்குகளை சிலர் கேடாக கையாள்வது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது, உயர்நீதிமன்றம்.
“நீதிக்காகப் போராடுவது போல் செயல்படும் நபர்கள், தனிப்பட்ட அல்லது மறைமுக நோக்கங்களுக்காக அரசியலமைப்பு அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. தனிப்பட்ட தீய எண்ணங்களுக்காக பொது நல வழக்குகள் பயன்படுத்தப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அருண் ஐபிஎஸ், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் அருண் ஐபிஎஸ் மீது “பல நூறு கோடிகள் சொத்து சேர்த்ததாக” குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த இரண்டு விஷயங்களும் அவர்களுக்கு இடையே தனிப்பட்ட பகைமை இருப்பதை தெளிவாக காட்டுகின்றன.
மேலும், கட்டமைப்பு அல்லது பொருளாதார சமூக-குறைபாடுகள் காரணமாக நீதிமன்றத்தை அணுக முடியாத சமூகப் பிரிவினர் விளிம்புநிலை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு நீதி கிடைக்கக் கூடியதை நோக்கமாக கொண்ட புனிதமான கருவியாக பொது நல வழக்குகள் உள்ளன. அவற்றை தனிப்பட்ட விரோதத்தை நியாயப்படுத்தும் நோக்கத்துக்காக குறைத்திட முடியாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முற்றிலும் பொதுநலம் கொண்டதாகவோ? அல்லது நேர்மையானதாகவோ? கருத முடியாது. இதனால், சவுக்கு சங்கர் தொடர்ந்த பொதுநல வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருணுக்கு எதிரான சவுக்கு சங்கரின் தனிப்பட்ட குறையைப் பற்றிய பதிவு சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக உள்ளதால், மனுவின் நேர்மைத்தன்மையை முற்றிலும் நீக்குகிறது. உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அசாதாரண அதிகார வரம்பை தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு ஆயுதமாக்க அனுமதிக்க முடியாது. இவற்றின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருணுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி சாவுக்கு சங்கர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுநல மனுக்கள் (PIL) குறித்த ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. தனிப்பட்ட பகையை பொதுநலன் என்ற பெயரில் மறைக்க முடியாது என்றும், நீதிமன்றத்தின் அதிகார வரம்பை தவறாக பயன்படுத்த முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது, இந்த தீர்ப்பு.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.