சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் முஹர்ரம் பண்டிகையைக் கொண்டாடும் இந்துக்கள்
சமய நல்லிணக்கத்தைப்
பறைசாற்றும் வகையில்
முஹர்ரம் பண்டிகையைக்
கொண்டாடும் இந்துக்கள்
சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் இஸ்லாமியர்களின் முஹர்ரம் பண்டிகையை ஜாதிஇ மத பேதமின்றி கடந்த 300 ஆண்டுகளாக தங்களது ‘இல்ல விழா’வாகக் கொண்டாடி வருகின்றனர் தஞ்சை அருகேயுள்ள காசவளநாடு புதூர் கிராம மக்கள்.
முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அக் கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் கடந்த 10 நாட்களாக நோன்பிருந்து, தங்களது வேண்டுதல் நிறைவேற இன்று பூக்குழியில் இறங்கி தீ மிதித்தனர்.
இதனால் அக் கிராமமே விழாக் கோலம் பூண்டது.
தஞ்சை அருகே உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். இக் கிராமத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக் கிராமத்தில் மொத்தம் மூன்று குடும்பங்கள் மட்டுமே முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கிராமத்தில் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அதோடு, இஸ்லாமியர்களின் பண்டிகையான முஹர்ரம் பண்டிகையை ஆண்டுதோறும் தங்களது இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தைப் போற்றி வருகின்றனர்.
முஹர்ரம் என்பது இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று.
முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு இக் கிராம மக்கள் 10 நாட்கள் விரதம் இருந்து பய பக்தியோடு தீக் குழியில் இறங்கி நடந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
பத்து நாளைக்கு முன்பாக ஊரின் மையப் பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் உள்ள ‘பஞ்சா’ என்றழைக்கப்படும் கை உருவம் கொண்ட பொருளை வைத்து பந்தல் அமைத்து விரதம் இருந்து பாத்தியா ஓதி முஹர்ரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக எடுத்துச் சென்று மறுநாள் காலையில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி கடந்த 10 நாட்களாக பாஞ்சா என்றழைக்கப்படும் கை உருவத்தை வெளியே எடுத்து வைத்து தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளையும் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர்.
நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) பஞ்சாவுக்கு மாலை அணிவித்து தாரை தப்பட்டையுடன் வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர்.
அங்கு வீடுகளில் கிராம மக்கள் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து பஞ்சாவுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
இன்று அதிகாலை செங்கரை வந்தடைந்ததும் அங்கு தீமிதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பஞ்சாவைத் தூக்கி வந்தவர்கள் முதலில் தீக்குழியில் இறங்கி நடந்தனர். அதைத் தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த காத்திருந்த அக் கிராம மக்கள் பயபக்தியுடன் தீக்குழியில் இறங்கி நடந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.