கொள்கைக் குருதியின் தன் வரலாறு !
அவரைப் பற்றி அவரது அப்பா உள்பட பலரும் பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். ஆனால், அவரே அவரைப் பற்றி எழுத்தில் சொல்வதும் அதைப் படிப்பதும் தனி அனுபவம். ‘உங்களில் ஒருவன்’ அப்படிப்பட்ட அனுபவத்தைத் தந்தது.
படங்களுடன் 300க்கும் அதிக மான பக்கங்கள் கொண்ட முதல் பாகத்தை 3 மணி நேரத்திற்குள் ளாகப் படித்து முடித்துவிட முடிந் தது. எளிமையான நடை. சுருக்கமான வரிகள். பக்கங்களைப் புரட்டும் போது நம்மையும் கைப் பிடித்துப் பயணிக்க வைப்பது போன்ற உணர்வு.
இந்திய அரசியலின் கவனத்தை ஈர்க்கும் தமிழ்நாட்டு முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழும் இன்றைய நிலையில், அந்த ஸ்டாலின் உருவான வரலாற்றை அவரே பதிவு செய்வது என்பது கம்பீரமான சிங்கம், தான் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது போன்ற ‘அரிமா நோக்கு.
முழுநேர அரசியல்வாதி மு.க.ஸ்டாலின் எங்கே விதையாகி, எப்படி முளைத்து, எவ்வாறு வளர்ந்தார் என்பதை அவரைத் தலைவராகக் கொண்ட இயக்கத் தினர் மட்டுமல்லாமல், அவரைப் பற்றி எதுவும் தெரியாமலேயே ஏளனம் செய்து கொண்டிருக்கும் அற்பக் கூட்டமும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. மார்ச் 1, 1953ல் அவர் பிறந்தது முதல் பிப்ரவரி 1, 1976ல் அவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறை வாசலுக்குக் கொண்டு செல்லப்படும் வரையிலான 23 ஆண்டுகால வாழ்க்கை இந்த முதல் பாகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப் பை சலூன்கடையில் தொடங்கி கழகப் பணியாற்றத் தொடங்கிய மு.க.ஸ்டாலின் இன்று 68 வயதை நிறைவு செய்து மக்களின் பேராதரவுப் பெற்ற தலைவராக-முதல்வராகத் திகழ்கிறார். அடுத்தடுத்த பாகங்களில் அதற் கானப் வரலாற்றுப் பதிவுகள் இடம் பெறும்.
பிறந்தநாள் முதலே அரசியல் காற்றை சுவாசிக்கும் ஸ்டாலின் வாழ்வில் அவருக்கான நிமிடங்கள், அவரது தனிப்பட்ட பார்வைகள் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் அலங்காரம் ஏதுமின்றிப் பதிவு செய்திருக்கிறார். அதில் உள்ளத்தால் அவர் ‘திருவாரூர்’க்காரராக இருப்பது என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
‘திருவாரூர்’ என்ற தலைப்பில் ஓர் அத்தியாயமே உள்ளது. கலைஞர் பிறந்த திருக்குவளைக்கும் அவர் வளர்ந்த திருவாரூருக்கும் ஏறத்தாழ 13 கி.மீ. இடைவெளி என்றாலும் மு.க.ஸ்டாலின் மனதில் இரண்டும் ஒரே ஊர்தான். சிறுவயதில் உறவினர்களின் ‘செல்லப் பிள்ளை’யாகத் திருவாரூரில் வலம் வந்ததையும், முதல்வர் பொறுப்பேற்ற பின், தன்னைத் திருவாரூக்காரன் எனப் பதிவு செய்ததையும், முதல்வ ராகத் திருவாரூர் வந்ததையும் நெகிழ்வாகப் பதிவு செய்திருக்கிறார். கலைஞர் பிறந்த திருக்குவளை வீட்டையும் பெருமையுடன் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு அத்தி யாயம் தொடங்குவதற்கு முன்பும் அவருடைய கையெழுத்தைப் படியெடுத்து அச்சிட்ட ஒரு சில சொற்கள் இடம்பெற்றுள்ளன. திருக்குவளை வீட்டைப் பற்றித் தன் கையெழுத்தில் எழுதும் போது, ‘திருவாரூர் வீடு இரத்தத்தாலும் உணர்வாலும் கட்டப்பட்டது’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரைப் பற்றிச் சொல்லும் போது, ‘கோபாலபுரம் வீட்டையே அரசியல் வீடாக மாற்றியவர் ஆத்தா அஞ்சுகம் அம்மையார்’ என்று எழுதியிருக்கிறார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து, கலைஞரால் மாவட்டத் தலைநகராக்கப்பட்ட நகரம் திருவாரூர். தென்தமிழகத்தில் ஆத்தா என்பது அம்மாவையும் குறிக்கின்ற சொல்லாக இருந்தாலும், தஞ்சை மண்டலத்தில் பாட்டியைத்தான் ‘ஆத்தா‘ என்று சொல்வோம். தாத்தா ஆண்பால். ஆத்தா பெண்பால். மண்ணுக்குரிய உச்சரிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போதும் மறக்கவில்லை.
அன்றைய முதல்வரின் மகனான அவருக்குப் பெண் பார்த்தபோது, துர்கா அம்மையாரின் வீட்டார் “மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார்?” என்று கேட்டிருக்கிறார்கள். “கட்சி வேலை பார்க்கிறார். பிரச்சார நாடகங்களில் நடிக்கிறார்” என்று கலைஞர் குடும்பத்தார் சொன்ன பதில், ஸ்டாலினின் ‘கொள்கைப் பணி’க்கான அங்கீகாரம். ‘குடும்ப அரசியல்’ என இன்று பேசித் திரிபவர்களுக்கானப் பதிலடி.
தனக்குத் தெரிந்தது அரசியல் பணி, கொள்கைப் பரப்புரை, கட்சி நிகழ்ச்சி நடத்துதல், பிரச்சார நாடகத்தில் நடித்தல் என்பதை உணர்ந்திருந்த இளைஞர் ஸ்டாலின், தனது சொந்தப் பொருளாதாரத் தேவைக்காகத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை மேயர் சிட்டிபாபுவுடன் சேர்ந்து தொடங்கியவர். அந்த நிறுவனத்துக்கு அவர் வைத்த பெயர், ‘ஆரூரான் பிக்சர்ஸ்’. அந்த இடத்திலும் அவர் கலைஞரின் ஊரை மறக்கவில்லை. மு.க.முத்து நடிக்க, இயக்குநர் மகேந்திரன் வசனம் எழுத, ‘நம்பிக்கை நட்சத்திரம்’ என்ற படத்தைத் தயாரித்து 1975ல் வெளியிட, அந்தப் படத்தின் வசூலும் அவருக்கு நம்பிக்கை தரும் அளவில் இருந்துள்ளது.
இளைஞர் தி.மு.க சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், கழகத்திற்காக நடிக்கும் பிரச்சார நாடகங்கள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் முரசொலியில் இடம்பெறும்போது, அந்த இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைக் குழந்தை மனதுடன் பதிவு செய்திருக்கிறார். முரசொலி உள்ளிட்ட பழைய இதழ்களில் இடம்பெற்றிருந்த செய்திகளைத் தேடித் தொகுத்து தந்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் அவர்களின் ஒத்துழைப்பையும், தனது தனிச்செயலாளர் தினேஷ்குமார் அவர்களின் உறுதுணையையும் முன்னுரையில் மறக்காமல் பதிவு செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முரசொலி, திருவாரூரில் பிறந் தது. கலைஞருக்குத் திருமணம்ஆவதற்கு முன்பே, அவர் பெற்றெடுத்த மூத்தப் பிள்ளை. ‘இன்றைய செய்தி-நாளைய வரலாறு’ என்ற அதன் முகப்பு வரிகளுக்கேற்ப, மு.க.ஸ்டாலினின் நேற்றைய செயல்பாடுகளை இன்றைய வரலாறாக நமக்கு வழங்கிடத் துணை நின்றிருக்கிறது. சென்னை பழைய மூர்மார்க்கெட் அருகே நடந்த பொருட்காட்சியில் மு.க.ஸ்டாலின் நடித்த ‘முரசே முழங்கு’ நாடகம் தொடர்பான முரசொலி விளம்பரத்தின் வழியாக, சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.
நேரடியாகவும் உள்ளார்ந்தும் நமக்கு நிறைய செய்திகளைத் தருகிறது இந்தப் புத்தகம். கலைஞரின் புத்தகங்களை வெளியிடும் ‘பூம்புகார் பதிப்பகம்’ இதனை வெளியிட்டுள்ளது. அட்டையின் தன்மை, அச்சுத்தாள் தரம், அச்சமைப்பு நேர்த்தி, வடிவமைப்பின் சிறப்புகளுடன ரூ.500 விலையில் புத்தகம் வெளியாகி யுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத் திலும் கிடைக்கும். தலைவரின் மகனாகப் பிறந்து, தலைவர்கள் கூடும் வீட்டில் வளர்ந்து, தலைமைக் குரியத் தன்மையை மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டு, அதை வெளிப்படுத்த வேண்டிய காலம் கனியும் வரை பொறுமையாக இருந்து, உயரங்களைத் தொட்ட பிறகும் ‘உங்களில் ஒருவன்’ என்று தன்னை வெளிப்படுத்துகிற பண்பு மாறாத கொள்கைக் குருதி ஓடும் முதன்மை உடன்பிறப்பின் தன் வரலாறு இது.