திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் – வரலாறு நூல் வெளியிட்டு விழா
திருச்சி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு புத்தக வெளியீட்டு விழா மற்றும் கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
திருச்சி முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் செ.சக்திவேல் வரவேற்புரையாற்றினார். சங்க ஆலோசகர் முனைவர் சு.செயலாபதி தலைமை வகித்தார். சங்கத் துணைத் தலைவர் கு.கதிரேசன், ஒருங்கிணைப்பாளர் கவிஞர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் நெறியாள்கை செய்தார்.
தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கல்வி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. சங்க காலம் முதல் இன்றுவரை தமிழர் நாகரிகத்தின் அறிவுச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் இம்மண், எண்ணற்ற இலக்கிய மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் தாயகமாக விளங்குகிறது.
தமிழ் மொழியின் செம்மையைக் காக்கவும், புதிய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை உருவாக்கவும், இலக்கிய ஆய்வுகளை ஊக்குவிக்கவும், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் பல்வேறு இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.
இவ்வமைப்புகள் கருத்தரங்குகள், கவியரங்கங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் தமிழ் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றன. அதோடு, சமூகப் பொறுப்புணர்வு, மனிதநேயம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தமிழர் பண்பாட்டு மரபுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றன.இலக்கிய அமைப்புகள் வெறும் மன்றங்களாக அல்லாமல், அறிவை வளர்க்கும் சமூக இயக்கங்களாகத் திகழ்கின்றன.
திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகளின் வரலாறும் பணிகளும், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியின் முக்கிய ஆவணங்களாகப் போற்றத்தக்கவை அவ்வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு தலைப்பில்
1916 முதல் 2026 வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோன்றி, வளர்ந்து, தமிழ்ப்பணியாற்றிய 53 இலக்கிய அமைப்புகள் வரலாறு நூலை திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் தமிழவேள் உதயகுமார் பெரியசாமி வெளியிட சிரா இலக்கியக் கழக தலைவர் எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி பெற்றுக்கொண்டார். திருக்குறள் சு.முருகானந்தம் வாழ்த்துரை வழங்கினார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் நூல் ஆசிரியருமான யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் ஏற்புரையாற்றினார் நிறைவாக திருச்சி முத்தமிழ் சங்க துணை தலைவர் கவிஞர் தில்லை சண்முகம் நன்றி கூறினார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.