உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு !
உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியின் தொடக்கத்தில் இருநாட்டு தேசிய கீதங்களும் அடுத்தடுத்து இசைக்கப்பட்டன. ‘ஜன கண மன’ எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதம் 52 நொடிகளில் நிறைவடைந்தது. அடுத்து, இசைக்கப்பட்ட வங்கதேச தேசிய கீதமான ‘அமர் சோனார் பாங்(க)ளா’ என்ற பாடலின் மொத்த நேரம் 2 நிமிடம் 56 நொடிகள்.
ஒரு நிமிடத்திற்குட்பட்ட இந்திய தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர்தான், வங்கதேசத்தின் ஏறத்தாழ 3 நிமிட அளவிலான தேசிய கீதத்தையும் எழுதியவர்.
‘என் பொன்னான வங்காளமே’ (அமர் சோனார் பாங்களா) என்பது 1905ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் வங்காளத்தை மத அடிப்படையில் பிரிட்டிஷார் இரண்டாகப் பிரித்தபோது, அதற்கு எதிராக எழுந்த தாகூரின் ஒருமைப்பாட்டுக் குரலாகும். முஸ்லிம்கள் நிறைந்த கிழக்கு வங்காளம், இந்துக்கள் நிறைந்த மேற்கு வங்காளம் என இரண்டு வங்காளிகளும் தாய்மொழிப் பற்றுடன் இதனை உளமாரப் பாடி, ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்தினார்கள்.
1947ல் இந்தியா-பாகிஸ்தான் என இருநாடுகளாகப் பிரித்து விடுதலையை அளித்தது பிரிட்டிஷ் அரசு. அப்போது கிழக்கு வங்காளம் பாகிஸ்தானின் ஒரு பகுதியானது. இந்தியாவுக்கு மேற்கில் இன்றைய பாகிஸ்தானும், கிழக்கில் வங்காளமும் இரு பகுதிகளாக அமைந்திருந்தன.

பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்களின் மொழி, உருது.கிழக்கு வங்காள மக்களின் மொழி, வங்காளம். பண்பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் இரண்டு பகுதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
ஆனால், ஆட்சியதிகாரம் பாகிஸ்தான் பகுதியில் உள்ளவர்களின் கைகளில் இருந்ததால் உருது மொழியே தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது.
எங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவியுங்கள் என கிழக்கு வங்காள மக்கள் குரல் கொடுத்தனர். போராடினர். அதிகாரத்தில் இருந்தவர்கள் அந்தக் குரலை மதிக்கவில்லை. போராட்டத்தையும் பேரணிகளையும் தடை செய்தனர்.
1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் தாய்மொழியைத் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, தடையை மீறி நடத்திய பேரணியின் மீது பாகிஸ்தான் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
தாய்மொழிக்காக உயிரிழந்த வங்காள மாணவர்களின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டு மக்கள் கடைப்பிடித்தனர். 1971ல் கிழக்கு வங்காள மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை எட்டியது. இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் ஆதரவுடன் விடுதலைப் போராட்டம் வென்றது.
பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்காளம் விடுதலை பெற்று, வங்கதேசம் (பங்களாதேஷ்) என்ற புதிய நாடு உருவானது. பிரிட்டிஷாரால் வங்காள மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது இரு பகுதி மக்களின் ஒற்றுமை உணர்வுக்காக எழுதப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் பாடல், பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்காளம் பிரிந்து வங்கதேசம் என்ற தனி நாடாக விடுதலை அடைந்தபோது அந்நாட்டின் தேசிய கீதமானது.
தாய்மொழியையும் அதன் பண்பாட்டுக் கூறுகளையும் காத்திடுவதற்காகப் போராடி உயிரிழந்த வங்காள மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், பிப்ரவரி 21ஆம் நாளை தாய்மொழி நாளாக அறிவிக்கவேண்டும் என வங்கதேசத்தின் பிரதிநிதிகள் ஐ.நா.மன்றத்தில் முன்மொழிந்தனர். அதற்கான ஆதரவையும் பெற்றனர். ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மொழி அழிந்தால், அந்த இனம் அழிக்கப்படும். அதன் மரபு வழி அறிவுச் செல்வம் மொத்தமாக அழிந்துபோகும். அவரவர் தாய்மொழிகளின் மீதான பிற மொழி ஆதிக்கத்தைத் தடுக்கும்போது, மொழி-பண்பாட்டு மரபுகளுக்கான விழிப்புணர்வை வென்றெடுத்து, உலக மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும் என்பதுதான் தாய்மொழி நாளின் நோக்கம்.

1952ல் வங்காள மொழி மாணவர்கள் தங்கள் தாய்மொழியைக் காத்திட உயிரைக் கொடுத்த தியாக வரலாற்றுக்கு முன்பே, 1938ல் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தாய்மொழியாம் தமிழைக் காக்கும் போராட்டத்தில் நடராசன்-தாளமுத்து என இருவர் தங்கள் உயிரைக் கொடுத்த தியாக வரலாறு தமிழ் மண்ணில் திராவிட இயக்கத்திற்கு உண்டு. வங்காள தேச மாணவர்கள் பாகிஸ்தான் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1965ஆம் ஆண்டு மொழிப் போர்க்களத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்மொழியைக் காப்பதற்கு தங்கள் உடலுக்குத் தாங்களே தீவைத்துக்கொண்டு, ‘தமிழ் வாழ்க- இந்தி ஒழிக’ என்று முழங்கியபடியே உயிரைத் தியாகம் செய்தனர். விஷம் குடித்து இறந்த இளைஞர்கள் உண்டு. மொழிப்போர்க் களத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு மட்டுமின்றி, துணை ராணுவத்தின் வேட்டைக்கும் பலியான தீரர்களின் வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டவர்கள் நாம்.
வங்கதேசம் தனி நாடாகி, தன் தாய்மொழியைக் காத்துக் கொண்டு, உலகத்தையும் கடைப்பிடிக்கச் செய்கிறது. இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடு தன் போராட்டத்தை சளைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கிழக்கு வங்காளம் பங்களாதேஷ் எனும் நாடாக உருவானதால் அதன் தாய் மொழி உலக அரங்கில் கவனம் பெற்று இருக்கிறது. மேற்கு வங்காளத்தில் அண்மை காலமாக உலகத் தாய்மொழி நாளில் இந்திய ஆதிக்கத்திலிருந்து வங்காள மொழியை காப்பதற்கான பேரணிகள் நடத்தப்படுகின்றன.
அதில் பங்கேற்பவர்கள் தங்கள் மாநில மொழி அறிஞர்களுடன் தமிழ்நாட்டுத் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்களையும் உயர்த்திப் பிடித்த படி ஊர்வலம் போகிறார்கள். மற்ற மாநிலங்களின் தாய்மொழிகளையும் காத்திடும் உறுதிமிக்க வலிமை, தமிழுக்கு அரண் அமைத்த திராவிட இயக்கத்திற்கு உண்டு.
-கோவி.லெனின் – மூத்த பத்திரிகையாளர்