ஹெச்.ஐ.வி தொற்று ரத்தத்தின் மூலம் பரவுமா ?
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் தலாசீமியா எனும் இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியில் மரபணு சார்ந்த குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு , ஏற்றப்பட்ட இரத்தம் வழியாக ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் நாமும் உடன் இருப்போம்.
இந்தப் பதிவின் வழி நான் ரத்தம் ஏற்றுதல் மற்றும் அதன் வழியாக எவ்வாறு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அறிவியல் ரீதியாக விளக்குகிறேன்
தலாசீமியா எனும் மரபணு நோயில் ரத்த ஹீமோகுளோபின் சரியான முறையில் அளவில் உற்பத்தி ஆகாது. எனவே, மாதம் இருமுறை புதிதாக ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும்.
இதற்காக தலாசீமியா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இரத்தக் கொடையை நாடியவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் உயிர் பிழைக்கத் தேவையான உயிர் காக்கும் சிகிச்சையாக “ரத்தம் ஏற்றுதல்” இருக்கிறது.
ரத்த வங்கி அதிகாரியாக இருந்த மருத்துவரும் இரண்டு ஆய்வக நுட்புனர்களும் பணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நிலைய பொறுப்பு அதிகாரி கூறியிருப்பதாவது ரத்தக் கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை தொற்று நோய்களான ஹெச்.ஐ.வி , ஹெப்பாடைட்டி பி, சி வைரஸ், சிஃபிலிஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் ஆகியவற்றுக்கு எதிராக அரசு வகுத்துள்ள பரிசோதனைகள் முறையாக செய்யப்பட்டு “நெகடிவ்” என்று அறிந்த பின்னரே ரத்தம் வழங்கப்பட்டன.
பின் எப்படி ஹெச்.ஐ.வி கிருமி ரத்தத்தின் மூலம் பரவியிருக்கும்?
அதற்கு ரத்த தானம் & ரத்தம் ஏற்றுதல் குறித்து அறிய வேண்டும்.
பொதுவாக எவற்றுக்கெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறது என்பதை பார்ப்போம்?
- சாலை விபத்துகளில் அடிபட்டு அதிக ரத்தப்போக்குக்கு உள்ளானவர்களுக்கு
- ரத்தப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ரத்தம் ஏற்றப்பட வேண்டும்
- தீவிர ரத்த சோகை (severe anemia) தலாசீமியா நோய் இருப்பவர்களுக்கு
- பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு பின் அந்த அறுவை சிகிச்சை மூலம் வீணான ரத்தத்தை ஈடு செய்ய ஏற்றப்படும் (Perioperative blood loss)
இவ்வாறு பல்வேறு காரணங்களுக்கு தேவைப்படும் ரத்தமானது தொண்டு நிறுவனங்கள் , ரத்த வங்கிகள் இவற்றில் தன்னார்வத்துடன் ரத்தத்தை தர விரும்பும் கொடையாளர்களிடம் (Donors ) இருந்து பெறப்படுகிறது. குருதிக் கொடை தரவும் பல விசயங்களை பூர்த்தி செய்தாக வேண்டும்.
குருதி தருபவருக்கு வயது 18 க்கு மேல் இருத்தல் வேண்டும். நல்ல உடல் எடையுடன் ஆரோக்கியமானவராக இருத்தல் வேண்டும்.
அவருக்கு வேறெதுவும் தொற்று நோய்கள் இருத்தல் கூடாது. அவரது ரத்த ஹீமோகுளோபின் அளவு சரியானதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் தரலாம்.
நாள்தோறும் தேவைப்படுவோர்க்கு தேவையான ரத்த யூனிட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சாலை விபத்துகள் அதிகமாகின்றன..
அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே ரத்த தான முகாம்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே இருக்கின்றன.
இப்படி கொடையாக வாங்கப்படும் உதிரமானது மற்றவருக்கு ஏற்றப்படுவதற்கு முன்பு பல கட்டாய பரிசோதனைகளுக்கு பின்பு ஏற்றப்படுகிறது.
என்னென்ன பரிசோதனைகள் செய்யப் படுகின்றன ?
முக்கியமான பரிசோதனை “Cross Matching” எனப்படும் பரிசோதனை.
அதாவது கொடை வாங்கப்பட்ட இந்த ரத்தம் எந்த ரத்த வகையை சேர்ந்தது ?
மற்றும் ரத்தம் ஏற்றப்படப்போகும் குருதி பெறுபவரின் ரத்த வகை எது?
இது இரண்டும் ஒத்துப்போகிறதா? என்ற சோதனை..
இந்த சோதனை அனைத்து ரத்த யூனிட்களுக்கும் செய்யப்படுகின்றன.
அதற்கடுத்ததாக, முக்கியமான பரிசோதனைகள் எச்.ஐ.வி மற்றும் ஹெபாடைடிஸ் பி, சி, சிஃபிலிஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் சோதனை
இந்த தொற்று நோய்கள், ரத்தத்தால் பரவும் தன்மை கொண்டவை.
ஆகவே, கொடையாக வாங்கப்பட்ட குருதியில் எச்.ஐ.வி நோய் தொற்றும், ஹெபாடைடிஸ் – பி,சி நோய் தொற்றும் இருக்கிறதா? என்று கட்டாயம் கண்டறியப்படும்.
இந்த பரிசோதனை “பாசிடிவாக” அதாவது கிருமி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்த ரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் மருத்துவக்கழிவுகளில் சேர்க்கப்படும்.
கொடையாகக் கொடுத்த கொடையாளருக்கு நோய்த் தொற்று இருப்பது அறிவிக்கப்படும். இது அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், மேலும் அவர் ரத்தம் கொடை கொடுப்பதும் தடுக்கப்படும்.
இந்த குறிப்பிட்ட நிகழ்விலும் , கொடையாக வாங்கப்பட்ட ரத்தத்தில் மேற்சொன்ன Cross matching, HIV பரிசோதனை, Hepatitis – B,C பரிசோதனை செய்யப்பட்டு “நெகடிவ்” என்று தெரிந்த பின்பே குழந்தைகளுக்கு ஏற்றப்பட்டுள்ளன- என்று நிலைய மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிறகு எப்படி குழந்தைகளுக்கு ஹெச் ஐ வி “பாசிடிவ்” ஆனது?
எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட ஒருவருக்கு.. அவரது ரத்த பரிசோதனையில் எச்.ஐ.வி “இல்லை” என்று வரும் வாய்ப்பு இருக்கிறதா????
ஆம்.. மருத்துவ ரீதியாக இருக்கிறது.
எப்படி?
அதற்கு அந்த பரிசோதனைகள் பற்றியும் எச்.ஐ.வி கிருமி உடலுக்குள் எப்படி பெருக்கம் செய்கிறது என்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு இன்று தான் எச்.ஐ.வி நோய் தொற்று (HIV exposure) ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரது ரத்தத்தை உடனே எச்.ஐ.விக்கு சோதனை செய்து பார்த்தால் “நெகடிவ்” என்று தான் வரும்.
காரணம் நாம் பொதுவாக ரத்த வங்கிகளில் செய்யும் எச்.ஐ.வி பரிசோதனை என்பது “Fourth generation / 3rd generation ELISA antigen- antibody test ”
இதில் ஆண்டிஜென் ( antigen )என்பது உடலுக்குள் வரும் எச்.ஐ.வி கிருமியில் இருக்கும் அந்த ஆண்டிஜெனுக்கு (antigen )க்கு எதிராக உடல் செய்யும் எதிர்வினைதான் ஆண்டிபாடிகள் (antibodies) எனப்படும்.
நாம் செய்யும் இந்த ELIZA (enzyme linked immuno sorbent assay ) என்பது நமது உடலில் உருவான antibody களை அளந்து அது மூலம் எச்.ஐ.வி தொற்று இருப்பதைக் கண்டறியும்.
ஆனால் இந்த கிருமிக்கு எதிராக உடல் உற்பத்தி செய்த antibody களை நான்காவது வாரத்தில்( 28 நாட்களுக்கு பிறகு தான்) இருந்து தான் கண்டறிய முடியும். ( பெரும்பாலும் அனைத்து ரத்த வங்கிகளிலும் இந்த 4th generation ELIZA kits வழங்கப்பட்டுள்ளது)
ஆகவே ஒருவருக்கு இன்று எச்.ஐ.வி தொற்று புதிதாக ஏற்பட்டு இருந்தாலும் , அவருக்கு இன்று பரிசோதனை செய்தால் எச்.ஐ.வி இல்லை என்று தான் வரும். அவரது ரத்தத்தை நான்கு வாரங்கள் அல்லது 28 நாட்களுக்கு பிறகு சோதனை செய்தால் தான் “பாசிடிவ்” என்று காட்டும்.
இன்னும் மூன்று மாதங்களுக்கு பிறகு சோதனை செய்து அப்போது வரும் பரிசோதனை முடிவே இறுதியானது. இதைத்தான் மருத்துவம் “window period ” என்கிறது.
window period என்பது யாதெனில் ஒருவருக்கு நோய் கிருமித் தொற்று ஏற்பட்ட அன்றிலிருந்து அவருக்கு அந்த நோயின் பரிசோதனை முடிவு ” பாசிடிவ்” என்று வரும் நாளுக்கு இடைப்பட்ட இந்த காலத்தை window period என்கிறோம்.
இது நோய்க்கு நோய் மாறுபடுகிறது.
எச்.ஐ.வி பொறுத்தவரை இப்போதைய நமது 4th generation ELIZA kits க்குரிய window period – 28 நாட்கள்
சரி.. விண்டோ பீரியட் குறைவாக உள்ள இதை விட சிறந்த பரிசோதனை உள்ளதா? என்றால் ஆம் உள்ளது.
நாட் அல்லது பிசிஆர் பரிசோதனை
NUCLEIC ACID AMPLIFICATION TEST ( NAAT)
POLYMERASE CHAIN REACTION TEST
எச்.ஐ.வி உடலுக்குள் நுழைந்த முதல் மற்றும் இரண்டாம் வாரம்
– உள்ளே வந்த வைரஸின் அளவு பொருத்து அதற்குரிய Polymerase chain reaction/NAAT எனும் சோதனை மூலம் சில வைரஸ்களை , பல வைரஸ்களாக பெருக்கம் செய்து கண்டறியலாம்.
ஆனால் இது மிகவும் காஸ்ட்லியான பரிசோதனை. இதை அனைவருக்கும் செய்வது நமது நாட்டின் நிதி சூழ்நிலைக்கு தற்போதைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.
இனி நாம் எடுக்கும் அனைத்து ரத்த யூனிட்களுக்கும் PCR எனும் polymerase chain reaction/NAAT செய்தாலும் அதற்குரிய window period 7 முதல் 14 நாட்களாகும்.
அதாவது தொற்றைப் பெற்றவர் 2 வாரங்களுக்குள் ரத்தம் கொடையாக கொடுத்தால் டெஸ்ட் நெகடிவ் என்றே அப்போதும் வரும்.
நாட் / பிசிஆர் பரிசோதனைகளை உடனடியாக ரேபிட் கார்ட் வடிவத்தில் செய்ய இயலாது.
தலைசிறந்த ஆய்வகத்தில் மட்டுமே செய்ய இயலும். மேலும் அந்த பரிசோதனை ரிசல்ட் கிடைக்க நேரம் பிடிக்கும் time consuming test. ஆகவே அவசர நிலையில் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்தக் குழந்தைகள் விஷயத்தில் அரிதாக இந்த நிகழ்வு நடந்ததற்கு இரு காரணங்கள் தான் இருக்க முடியும்.
ஒன்று மருத்துவ ஊழியர்கள் தாங்கள் செய்ய வேண்டிய அந்த பரிசோதனையை சரியாக செய்யாமல் ரத்தத்தை ஏற்றியிருந்தால் அது Gross / serious Professional Negligence என்ற வரையறைக்குள் வரும். அது அவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தரும்.
ஆனால் அதுவே அவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்திருந்து window period விளைவாக நெகடிவ் என்று வந்திருந்தால்
அது Medical test error (Error Of God ) என்ற ரீதியில் அணுகப்பட வேண்டும். காரணம் இது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய பரிசோதனை முடிவில் உள்ள குறைபாடு.
தற்போதைக்கு அந்த மருத்துவர் + ஆய்வக நிபுணர்கள் மூவரையும் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
மருத்துவ குழுவின் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் நமக்கு தெரிய வரும்.
இந்தியாவில் அனுதினமும் குருதிக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு 1200 சாலை விபத்துகள் நமது நாட்டில் நடக்கின்றன
வருடத்திற்கு சராசரியாக 6 கோடி அறுவை சிகிச்சைகள் – சாலை விபத்துகளில் பாதிப்படைந்தோருக்கு செய்யப்படுகிறது.
23 கோடி மேஜர் அறுவை சிகிச்சைகள் நமது நாட்டில் வருடாவருடம் நடக்கிறது.
33 கோடி யூனிட்கள் என்ற எண்ணிக்கையில் தலாசீமியா, கேன்சர் நோயாளிகளுக்குரிய கீமோதெரபி மற்றும் சிகிச்சைகளுக்கு ரத்தம் வருடாந்திர தேவையாக உள்ளது.
அதாவது நாளொன்றுக்கு 30000 முதல் 40000 யூனிட் ரத்தம் என்ற அளவில் நமது குருதித் தேவை மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது.
இன்னுமொரு விஷயத்தையும் பதிவு செய்கிறேன் வருடம் தோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் யூனிட் ரத்தம் தேவையற்றதாக அல்லது ஏற்றத்தகுதியற்றதாக நிராகரிக்கப்பட்டு மருத்துவ கழிவுக்குச் செல்கிறது.
எச்.ஐ.வி, மலேரியா, சிஃபிலிஸ், ஹெபாடைடிஸ் பி போன்ற தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்படுவதும் இந்த நிராகரிப்புக்கு முக்கியமான காரணம்
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்படி ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 1% மக்கள் ரத்தக்கொடையாளர்களாக இருக்க வேண்டும் என்பது
அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் 1.4 கோடி பேர் ரத்த கொடையாளர்கள் இருக்க வேண்டும் அதாவது மொத்த மக்கள் தொகையில் 1% ஆவது இருக்க வேண்டும்.ஆனால் ரத்தம் தருவது 95 லட்சம் மக்கள் மட்டுமே.
ஆனால் இந்தியாவில் 51 கோடி பேர் ரத்தம் தர தகுதியானவர்களாக இருக்கிறார்கள் என்று NACO எடுத்த ஆய்வு கூறுகிறது.
ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தல் (Blood transfusion) என்பது நவீன மருத்துவம் கண்டறிந்த மிக முக்கிய உயிர் காக்கும் சிகிச்சை.
அதன் மூலம் உயிர் பிழைத்த பல கோடி உயிர்கள் சொல்லும் அதன் முக்கியத்துவத்தை.
ஆண்டு தோறும் பல கோடி யூனிட்டுகள் ரத்தம் ஏற்றப்பட்டு பல கோடி உயிர்கள் காக்கப்படும் நம் நாட்டில் , ரத்தம் மூலம் எச்.ஐ.வி நோய்க்குள்ளாகுபவர்கள் எண்ணிக்கை – வருடம் 100-200 பேர் என்ற அளவில் இருக்கிறது. மொத்த எச்ஐவி தொற்றாளர்களுள் 1% க்குள் என்ற அளவில் இருக்கிறது. இது நம் நாட்டில் ரத்தம் சார்ந்த பாதுகாப்பு நல்ல முறையில் இயங்குகிறது என்பதைப் பரைசாற்றுகிறது. எனினும் ரத்தம் ஏற்றுதல் மூலம் எச்.ஐ.வி நோய்த் தொற்றுப் பரவலை இன்னும் சிறப்பாகத் தடுப்பது எப்படி?
- காசுக்கு இரத்தம் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். குருதியை பணத்திற்காக விற்பது 1995 முதல் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் Red market எனும் பெயரில் இன்னும் ரத்தத்திற்கான கள்ளச்சந்தை இருக்கிறது. இந்தச் சட்டத்தை இன்னும் கடுமையாக்கிட வேண்டும். இதன் மூலம் கிருமித்தொற்றுக்கு உள்ளான ரத்தம் பொதுவெளியில் கலப்பதை தடுக்க இயலும்.
- கொடையாளர்களின் ரத்தத்தை எச்.ஐ.வி போன்ற பரிசோதனை செய்வதில் இன்னும் நவீன முறைகளைப் புகுத்தலாம். window period error இதனால் குறையும் வாய்ப்புண்டு. இருப்பினும் முழுவதும் நீக்க இயலாது. ஆனால் பரவல் சதவிகிதித்தை இன்னும் சிறப்பாகக் குறைக்கலாம்.
தற்போது NATIONAL BLOOD TRANSFUSION ACT 2025 என்று ரத்தம் ஏற்றுதலுக்கென பிரத்யேக சட்டம் வந்திருப்பதால்,
நாடு முழுவதும் நாட்/ பிசிஆர் பரிசோதனையை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து முழுமைப்படுத்த வேண்டும்.
- தன்னார்வல ரத்த கொடையாளர்களை அதிகமதிகம் ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் தேவையான ரத்தம், ஆரோக்கியமான மக்களிடம் இருந்து கிடைக்கும்.
- தங்களுக்கு தொற்று இருக்கும் வாய்ப்பு உண்டு என்று ஒருவர் சிறிதளவு உணர்ந்தாலும் ரத்தக் கொடை அளிப்பதில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும்
முடிவுரை
ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான குழந்தைகள் அனுதாபங்களுக்கு உரியவர்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடு மாநில மத்திய அரசுகளால் வழங்கப்பட வேண்டும்.
தற்போது எச்.ஐ.விக்கு உள்ள சிகிச்சை முறைகள் யாவும் தலைசிறந்தவை. அவருக்கு உயர்தர சிகிச்சையை அரசு உறுதி செய்ய வேண்டும்.
குருதி மூலம் எச்.ஐ.வி., ஹெபாடைடிஸ் பி,சி போன்ற நோய் தொற்றுகள் பரவும் விபத்துகளை தடுக்கும் வண்ணம் அரசு முடிவுகளை எடுத்து செயலாற்ற வேண்டும்.
தலாசீமியா போன்று தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் ரத்தம் ஏற்றுதல் தேவை இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான உதிரம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.