அங்குசம் பார்வையில் ‘மர் மர்’
தயாரிப்பு : ‘எஸ்.பி.கே.பிக்சர்ஸ்’ & ஸ்டேண்ட் அலோன் பிக்சர்ஸ்’ பிரபாகரன். டைரக்ஷன் : ஹேம்நாத் நாராயணன். நடிகர்-நடிகைகள் : ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், அரியா செல்வராஜ், யுவிஹா ராஜேந்திரன். ஒளிப்பதிவு : ஜேசன் வில்லியம்ஸ், சவுண்ட் டிசைனர் : கெவின் ஃபிரெடரிக், எடிட்டிங் : ரோஹித், தயாரிப்பு வடிவமைப்பு : ஹாசினி பவித்ரா, காஸ்ட்யூம் : பிரகாஷ் ராமச்சந்திரன் மேக்கப் : ஷெல்டன் ஜார்ஜ். பி.ஆர்.ஓ. : ஸ்ரீவெங்கடேஷ்.
சில வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே காத்தூர் கிராமத்தின் ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் போன எட்டு இளைஞர்கள் காணாமல் போனார்கள். வனத்துறையும் அரசு நிர்வாகமும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களின் பிணத்தைக் கூட மீட்க முடியவில்லை. ஆனால் அவர்கள் வைத்திருந்த நான்கைந்து கேமராக்களை உடைந்த நிலையில் மீட்டது வனத்துறை.
அந்தக் கேமராவில் இருந்த ஃபவுண்ட் ஃபுட்டேஜுகளைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டது வனத்துறை. ஏன்னா அந்தப் பதிவில் காட்டுப்பகுதியில் பின்னிரவில் அமானுஷ்ய சக்தி ஒன்றிடம், சிக்கிக் கொண்ட அந்த இளம் டீமின் அலறலும் ஓலமும் இருந்துள்ளது.
இதை அடிப்படையாக வைத்துத் தான் தமிழ் சினிமாவின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் பேஸிக்கில் இந்த ‘மர் மர்’ ஹாரர் சினிமாவை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் ஹேம்நாத் நாராயணன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்த காத்தூர் காட்டுக்குள் போனால் உயிருடன் திரும்புவது கடினம் என்று தெரிந்தும் அதைப் பதிவு செய்ய பெரும் தொகை செலவழிக்கத் தயாராகிறது யூடியூப் சேனல் ஒன்று. இதற்காக களம் இறங்குகிறார்கள் ரிஷி [ ரிச்சிகபூர்], மெல்வின் [ தேவராஜ் ஆறுமுகம் ], அங்கிதா[ சுகன்யா சண்முகம் ], ஜெனிஃபர் [ அரியா செல்வராஜ்] அடங்கிய நால்வரணி.
“நாங்க ஏன் அங்கே போறோம், எதுக்குப் போறோம்?’ என்பதை நால்வரும் கேமராவில் பதிவு செய்வது போல படம் ஆரம்பிக்கிறது. காத்தூர் போய் அக்கிராமத்துப் பாட்டியிடம் காட்டில் அப்படி என்னதான் இருக்கு? என்பதைத் தெரிந்து கொண்டு, கிராமத்துச் சிறுமி காந்தா[யுவிஹா ராஜேந்திரன் ] துணையுடன் அடர்ந்த காட்டுக்குள் டெண்ட் அடித்து தங்குகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோஸ்ட் செஸ் போர்ட் மூலம் பாட்டி சொன்ன சூனியக்காரியிடம் பேச முயற்சிக்கிறார்கள்.
முதல் முயற்சியி தோல்வி. அடுத்த நாள் இரவு வேறொரு இடத்தில் டெண்ட் அடிக்கிறார்கள். இந்த முறை அந்த சூனியக்காரியின் திகிலூட்டும் முணுமுணுப்பு லேசாக கிளம்பி, போகப் போக வேகமெடுக்கிறது. அதன் பின் அந்த ஐந்து பேரின் கதி என்ன என்பதன் க்ளைமாக்ஸ் இந்த ‘மர் மர்’ [ முணுமுணுப்பு என்று அர்த்தம் ].
கோர முகங்கள் இல்லாமல், சூடம், சாம்பிராணிப் புகை இல்லாமல், பின்னணி இசை இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான இசைக்கருவிகளின் ஒலியே இல்லாமல், சவுண்ட் டிசைனர் கெவின் ஃபிரெடரிக் உருவாக்கிய ஸ்பெஷல் சவுண்டை மட்டுமே பயன்படுத்தி, இரண்டு மணி நேரம் ஒரு ஹாரர் சினிமாவைப் பார்க்க வைத்த முயற்சிக்காக டைரக்டர் ஹேம்நாத் நாராயணனுக்கு சபாஷ் போடலாம்.
இவர்களுக்குத் துணையாக கேமராமேன் ஜேசன் வில்லியம்ஸும் பயமின்றி வேலை பார்த்திருக்கிறார். சென்னையிலிருந்து நால்வரும் காரில் போகும் போது பகலிலேயே ஒருதினுசாக திகில் ஆங்கிள் வைத்து மிரட்டிய ஜேசன், வனப்பகுதியில் இரவுத் திகிலை அமானுஷ்ய உணர்வையும் நன்றாக பதிவு செய்துள்ளார்.
படத்தில் நடித்திருக்கும் ரிச்சிகபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், அரியா செல்வராஜ், சிறுமி யுவிஹா ஆகிய ஐந்து பேருமே .. “ஸ்டார்ட் ..கேமரா…ஆக்ஷன்” சொல்லாமல் கேண்டிட் கேமரா ஸ்டைலில் நடித்தது போல் இயல்பாக வருகிறார்கள். இதில் அங்கிதாவாக நடித்துள்ள சுகன்யா சண்முகம் தான் அதிக கவனம் ஈர்க்கிறார்.
திகிலூட்டும் காடு, நட்டநடுராத்திரி, பேய்னு மட்டும் காட்டிக்கிட்டிருந்தா சலிச்சுப் போயிரும்ணு நினைச்சு, ஜெனிஃபருக்கும்[ அரியா செல்வராஜ் ]மெல்வினுக்கும் [ தேவராஜ் ஆறுமுகம் ] டெண்ட்டில் கிளுகிளு சீன் வைத்திருக்கிறார் டைரக்டர்.
டிஃபெரெண்ட் ஹாரர் சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘மர் மர்’ நல்ல எக்ஸ்பீரியன்ஸ்.
— மதுரை மாறன் .