துறையூர் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் .
துறையூர் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் .
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிக்கத்தம்பூர் ஊராட்சியில் , தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாதிரி கிராம விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.சிக்கத்தம்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் ஒன்றான சேர்வை காரன்பட்டியில் நடைபெற்ற முகாமில் , அய்யாறு பாசன வசதி பெறும் விவசாயிகளுக்கு , நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது .
முகாமிற்கு சிக்கத்தம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாகார்த்தி தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் அபிராமி, தோட்டக்கலை அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து தங்கள் துறையில் விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் பயன்கள் பற்றி விளக்கமளித்தனர். மேலும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் சந்தோஷ்குமார் ,ராஜவேல், நீர்வளத்துறை பயிற்சி நிபுணர் ஜான் ஜோசப் ஜெரால்டு ஆகியோர் முகாமில் பங்கேற்று பேசினர். முடிவில் களப்பணியாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.2022- 23ம் வருடம் முழுவதும் நடைபெறும் முகாமில் வேளாண்மை துறை, தோட்டக்கலை,வேளாண் பொறியியல் , வேளாண் வணிகம் , நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சி துறை ,வருவாய் துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மாதிரி கிராம விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று, தங்கள் துறையின் பயன்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.