மதுரை நகை கொள்ளை நடந்தது எப்படி ? சினிமாவை மிஞ்சிய ரியல் ஸ்டோரி

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனி ஒருவனாக நகைக்கடைக்குள் புகுந்து பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த காதலன் தலைமறைவு

ஹாலிவுட் பட ஸ்டைலில் பிளான் போட்டு கொடுத்த காதலி தனது பைக்கை கொடுத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுத்த காதலி – தலைமறைவான காதலனை தேடும் காவல்துறையினர்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பல கோடி மதிப்பில் கொள்ளையனை காட்டிக் கொடுத்த டாட்டூ

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் கடந்த மாதம் 15ஆம் தேதி தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி ஊழியர்கள் கடையைத் திறந்தபோது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிக் கிடந்ததுடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மேலாளருக்குத் தகவல் தெரிவித்ததுடன், காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை நடைபெற்ற பகுதியில் தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, நவம்பர் 1ஆம் தேதி கையில் கட்டுப் போட்டபடியும், 2ஆம் தேதி தொப்பி அணிந்தபடியும் வாடிக்கையாளரைப் போல இயல்பாக நகைக்கடைக்குள் வந்த இளைஞரின் காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்தக் காட்சிகளையும், 12ஆம் தேதி முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரின் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இருவரது கைகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ இருப்பது தெரியவந்தது. இந்த டாட்டூவே கொள்ளையனை அடையாளம் காண்பதற்கான முக்கிய தடயமாக அமைந்தது.

மேலும், நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, முகமூடி, ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்தபடி இளைஞர் ஒருவர் பைக்கில் வேகமாகப் பேக்குடன் சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இதன் அடிப்படையில், மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து நிஷாந்த் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கான வீடியோ எடிட்டிங் பணிகளையும் செய்து வந்துள்ளார். மேலும், கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நண்பர்களுடன் ஜாலி ரைடு செல்வது, சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று வருவது என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது தனது கல்லூரிக் காலத் தோழியும், பிரபல இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சியைக் காதலித்து வந்துள்ளார். தற்போது மீனாட்சி புதிய வீடு கட்டி வரும் நிலையில், அதற்குப் போதிய பணம் இல்லாமலும், பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் கூறி காதலன் நிஷாந்திடம் கண்ணீர் விட்டுக் கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் காதலியின் நிலையைப் பார்த்து கலங்கிய நிஷாந்த், ஹாலிவுட் தொடரான Money Heist பாணியில் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு மீனாட்சியும் உதவியதுடன், தனது பைக்கையும் கொள்ளைக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுத்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரும் திட்டமிட்டபடி, கடந்த 5ஆம் தேதி நிஷாந்த் தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாகச் சென்று, லிப்ட் அருகே அமைக்கப்பட்டிருந்த அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளார்.

அப்போது கடைக்குள் நுழைவதற்குத் தேவையான கருவிகளை எடுத்துச் சென்று, 12ஆம் தேதி நள்ளிரவு மீண்டும் இரும்புச் சாரம் வழியாக மூன்றாவது தளத்திற்குச் சென்றுள்ளார். அங்கு லிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், லிப்ட் ஷட்டர் வழியாக உள்ளே சென்று அதனை உள்புறத்தில் இருந்து திறந்துள்ளார். பின்னர் மீண்டும் ஷட்டரைத் திறக்க முடியாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அதன் நடுவில் கம்பியை வைத்துவிட்டு, ஒவ்வொரு தளமாக இறங்கிச் சென்று படிக்கட்டு வழியாகத் தரைத்தளத்தில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்துள்ளார்.

தொடர்ந்து கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை எவ்வித பதற்றமும் இன்றி ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பேக்கில் பத்திரமாக வைத்துள்ளார். பின்னர் அந்தப் பேக்கைத் தோளில் மாட்டிக்கொண்டு, மீண்டும் லிப்ட் ஷட்டரில் வைத்திருந்த கம்பியை அகற்றிவிட்டு, அதே வழியாகக் கயிற்றின் உதவியுடன் ஒவ்வொரு தளமாகச் சென்று இரும்புச் சாரம் வழியாக வெளியேறியுள்ளார்.

முன்னதாக, நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடையின் பின்புறப் பகுதிக்கு வந்தபோது அங்கிருந்த நாய்கள் அவரைத் துரத்தியதால் முதற்கட்ட முயற்சியைக் கைவிட்டுள்ளார். பின்னர் அந்தப் பகுதியைச் சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு மீண்டும் மேலே சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையடிப்பதற்காக தனது காதலி கொடுத்த பைக்கைப் பயன்படுத்திய நிஷாந்த், கொள்ளையடித்த நகைகள் இருந்த பேக்குடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார்.

இதையடுத்து அதிகாலை தனது தந்தை சுரேஷைத் தொடர்புகொண்டு தன்னிடம் ஒரு பேக் இருப்பதாகவும், அதனை வீட்டில் வைக்குமாறும் கூறியுள்ளார். சுரேஷ் அந்தப் பேக்கை வாங்கி வீட்டில் வைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த நிஷாந்த் மீண்டும் அந்தப் பேக்கை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனிடையே, மாடக்குளத்தில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளிப் பகுதிக்கு ஆட்டோவில் சென்ற அவர், நகைக்கடைக்கு முன்பு வேவு பார்க்கச் சென்றபோது அணிந்திருந்த உடைகள் மற்றும் கொள்ளையின்போது பயன்படுத்திய உடைகள் உள்ளிட்டவற்றைத் தீயிட்டு எரித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் நகைகளைப் பதுக்கிவைத்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் அங்கிருந்து சென்றுள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர், நேற்று மாலை நிஷாந்தின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தை சுரேஷிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட பைக் யாருடையது என்ற கோணத்தில் விசாரணை நடத்தியபோது, திருப்பாலை பகுதியைச் சேர்ந்த நிஷாந்தின் காதலி மீனாட்சிக்குச் சொந்தமான பைக் என்பது தெரியவந்தது. அந்தப் பைக்கைப் பயன்படுத்தித்தான் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எடுத்துச் சென்றதும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்களாக நிஷாந்தைத் தேடி வரும் காவல்துறையினர், பல்வேறு இடங்களில் செல்போன் நெட்வொர்க் உதவியுடன் அவரைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவ்வப்போது செல்போனை அணைத்துவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, செல்போன் மூலமாகக் காதலி மீனாட்சியைத் தொடர்புகொண்டு பேச முயன்றபோது, நகைகளைப் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளன.

இதையடுத்து, மீனாட்சியைக் கைது செய்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், நிஷாந்தின் தந்தை சுரேஷையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மீனாட்சியை மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்குச் சொந்தமான வயல்வெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு சுமார் 5 கிலோ அளவிலான தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அந்த நகைகளைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, தனிஷ்க் ஜுவல்லரி கடையிலிருந்து எடை இயந்திரங்கள் மற்றும் நகைப் பெட்டிகள் கொண்டுவரப்பட்டு, மீட்கப்பட்ட நகைகள் அடுக்கி வைக்கப்பட்டன.

தமிழகத்தையே உலுக்கிய தனிஷ்க் ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில், நிஷாந்த் தனி ஒருவனாக இரண்டு முறை கடைக்குள் வாடிக்கையாளரைப் போலச் சென்று நோட்டமிட்டுள்ளார். மேலும், ஒருமுறை கடையின் மேல்தளத்திற்குச் சென்று எந்த வழியாக உள்ளே இறங்கலாம், எவ்வாறு வெளியேறலாம் என்பதையும் சோதனை செய்துள்ளார். பின்னர் ஆங்கிலத் திரைப்படங்களில் இடம்பெறும் கொள்ளைக் காட்சிகளைப் போல, எவ்வித பதற்றமும் இன்றி கடைக்குள் புகுந்து நகைகளை எடுத்துச் சென்ற காட்சிகளும் சிசிடிவி பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.

கொள்ளையின்போது கடையில் வைக்கப்பட்டிருந்த சென்சார்கள் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, தேவையற்ற நகைகளைத் தொடாமல், எந்தத் தடயமும் கிடைக்காத வகையில் மிகவும் நிதானமாகச் செயல்பட்டுள்ளார். மேலும், சிசிடிவி கேமராக்கள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றின் மீது ஸ்பிரே அடித்துவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

கொள்ளையடித்துவிட்டு பைக்கில் சென்றபோது, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் இடங்களில் திடீரென புதர் பகுதிகளுக்குச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினரின் விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பல்வேறு வழிகளில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்துள்ளது.

தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக காதலன் தனி ஒருவனாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தலைமறைவாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, குறுக்கு வழியில் கோடீஸ்வரியாகிவிடலாம் என்ற எண்ணத்தில் மீனாட்சி செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் அவரது வாழ்க்கையையும், அவரை நம்பியிருந்த காதலன் மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்காலத்தையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நகைகளைக் கொள்ளையடித்த நிஷாந்தின் காதலி மீனாட்சி பட்டப்படிப்பு முடித்தவர். செல்போன் மற்றும் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் கொண்ட அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு Techboss என்ற யூடியூப் தளத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஊதியப் பிரச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேறி, வேறொரு யூடியூப் தளத்தில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து தற்போது தனியாக இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அரசியல் கட்சிக்கு ஆதரவான வீடியோக்களைப் பதிவிட்டு வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

மேலும், புதிதாக வீடு கட்டுவது தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டுள்ள மீனாட்சி, வீட்டைக் கட்டி முடிப்பதற்குப் போதிய பணம் இல்லை எனப் புலம்பும் வகையிலான வீடியோவையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தையே உலுக்கிய நகைக்கடை கொள்ளை வழக்கில், நிஷாந்தின் கையில் இருந்த டாட்டூதான் கொள்ளையனை அடையாளம் காட்டுவதற்கான முக்கியத் தடயமாக அமைந்துள்ளது. சிறுவயது முதலே சிறிய அளவிலான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிஷாந்த், தற்போது காதலிக்காக மிகப்பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நிஷாந்த் கொள்ளையடித்த நகைகளைப் பதுக்கி வைக்க உதவியதாக அவரது தந்தை சுரேஷைக் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரையே வியக்க வைக்கும் வகையில் திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிய நிஷாந்தைப் பிடிப்பதற்குத் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் திறமை கொண்ட நிஷாந்த், அந்தத் திறமைகளை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாமல் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தியதால் தனது எதிர்கால வாழ்க்கையையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நிஷாந்த் கைது செய்யப்பட்ட பின்னரே, தனிஷ்க் நகைக்கடையில் மொத்தம் எத்தனை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஷாந்தும் மீனாட்சியும் கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்தவர்கள். நிஷாந்த் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியபோதும், தன்னுடன் படித்த மீனாட்சியைக் காதலித்து திருமணம் செய்துகொள்ளக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தீட்டிய கொள்ளைத் திட்டம் தற்போது அவரைச் சிறைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளியுள்ளதுடன், தலைமறைவாக உள்ள அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

–மதுரை ஷாகுல்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.