சிறைக்காவலர்களுக்கான 8 மணிநேர பணி நேரத்தை வரைமுறைப் படுத்த வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலேயே அமல்படுத்த முடியாத அளவுக்கு எழுந்த நடைமுறைச் சிக்கல் குறித்து கடந்த தொடரில் பார்த்தோம்.
சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகளை காரணம் காட்டி, மேற்படி குழுவின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், இந்த கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி சிறைக்காவலர் கருணாமூர்த்தி மற்றும் 9 பேர் மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.
“என்னுடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்த 8 பேரும் அதிகாரிகளின் மிரட்டலுக்குப் பயந்து வழக்கை வாபஸ் பெற்றுவிட்டனர். எஞ்சிய நானும் புதுக்கோட்டை வீரபாண்டியனும் வழக்கை வாபஸ் பெற மறுத்து வழக்கை தொடர்ந்து நடத்தினோம். இந்நிலையில் 1998-இல் சுமார் 400-க்கும் மேற்பட்ட இரண்டாம்நிலைக் காவலர்கள் சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் சிறைத்துறையில் கால்பதித்தனர். அவர்களில் பலர் 8 மணி நேர பணிக்காக குரல் கொடுத்தனர்.

கடலூரில் பணியேற்றவர்கள் சாவி எடுக்க மறுத்து போராடினார்கள். வேலூரில் காசிபாண்டியன், சாமிக்கண்ணு தலைமையில் புதிய சிறைக்காவலர்கள் போராடத் தொடங்கினர். பாளையங்கோட்டையில் பொன்னம்பலம் தலைமையில் சேகர், மந்திரமூர்த்தி, மில்டன், பொன்னுச்சாமி உள்ளிட்ட காவலர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த போராட்டத்தின் எதிரொலி சட்டசபையில் எதிரொலித்தது. நானும் மதுரை நல்லத்தம்பியும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து எங்களது கோரிக்கையை முன்வைத்தோம். இவ்வாறு கடுமையான போராட்டங்களை நடத்தி பெறப்பட்ட சிறைத்துறையில் 8 மணி நேர பணி உரிமைகளைத்தான் தற்போது சிதைக்கும் வகையில் பல்வேறு வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்கள்.” என்பதாக வேதனையை வெளிப்படுத்துகிறார், ஓய்வுபெற்ற சிறைக்காவலர் கருணாமூர்த்தி.
குறிப்பாக, தற்போது தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை முன்வைத்து ஒரு மாத காலத்திற்கான சோதனை அடிப்படையிலான கூடுதல் பணிநேர நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். உயர்நிலைக்குழுவின் இந்த தற்காலிக உத்தரவை சில மாவட்ட – மத்திய சிறைகளில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீட்டிக்கவே விரும்புவதாகவும்; சோதனைக்கான ஒரு மாத காலம் முடிவடைந்தும் பழைய பணிநேர நடைமுறைக்கு தளர்வு வழங்கப்படவில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
தேனி சம்பவத்தை பொருத்தமட்டில் முக்கியமான 4 காரணங்களை புறந்தள்ளிவிட முடியாது. ஒன்று 19 கிளைச்சிறைகள் மூடப்பட்டது; அடுத்து இதன் காரணமாக, சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளையும்கூட மாவட்ட – மத்திய சிறைகளில் அடைக்க நேர்ந்தது; மூன்றாவது, இவ்வாறு கூடிக்கொண்டே போகும் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்ட – மத்திய சிறைகளில் போதுமான சிறைக்காவலர்களை நியமிக்காதது; நான்காவதாக, நிர்வாக நடவடிக்கை என்ற பெயரில் சிறிய வழக்குகளில் கைதானவர்களை மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பெருங்குற்றம் இழைத்த குற்றவாளிகளுடன் ஒன்றுகலக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதால் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களையும் கைதிகளுக்குள்ளேயே குழு ரீதியான மோதல்களாகவும் வெளிப்படுகிறது என்ற அபாயத்தையும் சிறைக்காவலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பிரச்சினையை இதுபோன்ற அம்சங்களிலிருந்து அணுகாமல், “எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்” என்ற மனநிலையில் சிறைக்காவலர்களை மையப்படுத்தியே, பணி நேரத்தை வரைமுறையின்றி நீட்டித்து, மென்மேலும் கசக்கிப்பிழிவது என்ற அணுகுமுறையைத்தான் உயர் அதிகாரிகள் கையாண்டு வருகிறார்கள் என்பதாக சிறைக்காவலர்கள் குமுறலை வெளிப்படுத்துகிறார்கள்.
குமுறல்கள் தொடரும் …
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.