“தளபதியோட படம் எப்படி இருக்கு மேடம்?” – அதனால, ‘லியோ’ படம் நான் இன்னும் பார்க்கல”…
“தளபதியோட படம் எப்படி இருக்கு மேடம்?” – அதனால, ‘லியோ’ படம் நான் இன்னும் பார்க்கல”…
“தளபதியோட படம் எப்படி இருக்கு மேடம்?”
“எந்த படம்?”
பற்களை நர நரவென்று கடித்தபடி கழுதைப்புலி ரேஞ்சுக்கு உருமியவர், “எந்த படத்தைப் பற்றி கேட்கிறோம்னு உங்களுக்கு தெரியாதா? லியோ…”
“ஓஹ்… சாரிங்க படம் இன்னும் பார்க்கலை”
“தியேட்டர்க்குள்ளேயிருந்துதான் வர்றீங்க. படம் பார்க்கலைங்குறீங்க?”
“வேற யாரையோ பார்த்துட்டு நான்னு நினைச்சுக்கிட்டீங்க. இது, மால். நான், ஷாப்பிங் பன்றதுக்காக வந்தேன்”
“நீங்க படம் பார்க்கலைன்னு இந்த ஊரை ஏமாத்தலாம். இந்த உலகத்தை ஏமாத்தலாம். ஆனா, எங்களை ஏமாற்ற முடியாது. நீங்க படம் முடிஞ்சு வரும்போது பார்த்துக்கிட்டுத்தான் இருந்தோம். படம் எப்படி செம்ம மாஸ்ஸா?”
“ஃபர்ஸ்ட் ஆஃப் செம மாஸ். செக்கண்ட் ஆஃப்….”
கரு கரு கருப்பாயி பாடலுக்கு விஜய் டான்ஸ் ஆடுவதுபோல் உற்சாகமானவர், “செக்கண்ட் ஆஃப் அதைவிட கொல மாஸ்ஸா? தளபதி வேற வெவலுக்கு மெரட்டிருக்காரு பார்த்தீங்களா?”
“இல்லைங்க, நான் இன்னும் படம் பார்க்கல”
ஹாஹ்ஹா ஹாஹ்ஹா விண்ணைப்பார்த்து சிரித்தவர், “ஃப்ர்ஸ்ட் ஆஃப் செம மாஸ்ன்னு இப்போதான் சொன்னீங்க. ஆனா, இன்னும் நீங்க படம் பார்க்கலன்னு சொல்றதை நாங்க நம்பணும்?”
“எவளோ ஒருத்தி தியேட்டர்க்குள்ள என்னைமாதிரி இருந்தானு என் உசுரை வாங்குறீங்களே. அது நான் இல்லைங்க. படம் இன்னும் பார்க்கல”
“சரிங்க மேடம்! ஃபர்ஸ்ட் ஆஃப் செம மாஸ், எப்படி?”
“ஹைனாக்கூட ஃபைட் பன்ற ஃபர்ஸ்ட் சீன் செம்ம வைப். ‘கில்லி’யான மனைவி த்ரிஷா, செல்லமான மகன், மகள்னு குடும்பத்தோடு தெறி பேபியா வாழ்ந்துக்கிட்டிருக்கும் விஜய்யை கஃபேக்குள்ள என்ட்ரியாகி வெறி ஆக்கிடுறாங்க. Gun -ஐ எடுத்து கண் இமைக்கிற நேரத்துல டப் டுப், அப்படியே ஹார்ட்டுக்குள்ளேயும் துளைத்து மிரட்சியடைய வைக்குறாங்க . ட்ரக் மாஃபியா, ஃபைட்டிங், சேசிங்னு பதற, சிதற வைக்கிறார் லோகேஷ். லியோ தாஸ்ன்னு ஃபர்ஸ்ட் ஆஃப்ல கொடுக்கிற பில்டப் எக்ஸைட்மெண்டை எகிறவெச்சுடுது. அன்பான அப்பாவா, அதேநேரத்துல தன் குடும்பத்த கழுகுகளிடம் காப்பாத்த சீறிப்பாயுற கோழியா நேர்த்தியா நடிச்சிருக்காரு விஜய். டான்ஸிலும் ஸ்டைலிலும் செம்ம டான்-ஆ இருக்காரு”
‘நான் ரெடிதான் வரவா’ பாடலுக்கு விஜய் டான்ஸ் ஆடியது போல் மீண்டும் உற்சாகமானவர் “மேடம்… செக்கண்ட் ஆஃப் அதைவிட மிரட்டலா கெத்தா இருந்துச்சில்ல”
“சாரிங்க, படம் பார்த்திருந்தாதானே சொல்ல முடியும்? நான் தான் படம் பார்க்கலையே?”
“இவ்ளோ நேரம் படத்தை ரிவ்யூ பண்ணிட்டு செக்கண்ட் ஆஃப் பற்றி கேட்டா மட்டும் படம் பார்க்கலைன்னு சொல்றீங்களே மேடம்? நீங்களா படம் பார்த்தீங்கன்னு ஒத்துக்கிட்டு, லியோ மரண மாஸ்ன்னு சொல்றவரைக்கும் உங்கள விடப்போறதில்ல”
“ஹய்யோ… யாருங்க நீங்கல்லாம்? நீங்க தேடிக்கிட்டிருக்குறது நான் இல்லைங்க. இங்க பாருங்க, நான் மாலில் ஷாப்பிங் பண்ணினதுக்கான ஆதாரம்”
“எங்களை என்னன்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்க?
எல்லாரும் பொய் சொல்லலாம். ஆனா, என்ட்ரியில செக்கப் பண்ணி அனுப்புற லேடி ஏற்கனவே உங்களையே பார்த்தமாதிரி உத்து உத்து பார்க்குறாங்க. அவங்க பொய் சொல்லணும்னு அவசியமில்லயே? சரி சொல்லுங்க, லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில கெத்தா?”
“செம்ம கெத்துதான். ஆனா, கதை என்னன்னு யாரும் அவருகிட்ட கேட்டுடக் கூடாது. படத்துல வீடியோ கேம் விளையாடுற மாதிரியான காட்சிகளைக்கூட ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாற்ற ட்ரை பண்ணியிருக்குற, ஒரிஜினல் ‘லியோ’ யாருன்னா இசையமைப்பாளர் அனிருத்துதான்”
“இப்பவாவது, படம் பார்த்ததை ஒத்துக்கோங்க, படத்தோட செக்கண்ட் ஆஃப் செம்ம மரண மாஸ், ப்ளாக் பஸ்டர்ன்னு ஒத்துக்கோங்க”
“படம் பார்க்காம எப்படிங்க ஒத்துக்கமுடியும்? இப்படியே பேசிக்கிட்டிருந்தா, கூண்டுக்குள்ள இருக்குற சுப்பிரமணிய ஏவி விட்டிருவேன்” என்ற பிறகு தான் தெறித்து ஓடினார்கள், அவர்கள்.
படம் பார்த்ததை ஒப்புக்கொண்டு, செக்கண்ட் ஆஃப் ப்ளாக் பஸ்டர் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி வீடு, மார்க்கெட் போகிற இடங்களுக்கெல்லாம் வந்து மிரட்டுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.
ஃபர்ஸ்ட் ஆஃப் பார்த்திபன் மாதிரி. செக்கண்ட் ஆஃப் லியோதாஸ் மாதிரி.
செக்கண்ட் ஆஃப் பத்தி பேசணும்னா அதுல ஒரு நல்லது இருக்கணும். அப்படி சொல்றமாதிரி எதுவுமில்ல.
செக்கண்ட் ஆஃப தெரியாத்தனமா பார்த்துட்டேன்.
அதை திருத்திக்க நினைக்கிறேன். அதுக்கு ஒரு சான்ஸ்தான் இந்த ஷாப்பிங் பொய்.
செக்கண்ட் ஆஃப்ல வர்ற லியோதாஸ் ஃப்ளாஷ்பேக்கை மறக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, அதை ஞாபகப்படுத்துறாங்க. அத மறக்கணும்னா நான் படம் பார்க்கலைன்னு முதலில் என்னை நானே நம்பணும்.
அதனால, ‘லியோ’ படம் நான் இன்னும் பார்க்கல”…
– வினி