அங்குசம் பார்வையில் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே ‘. படம் எப்படி இருக்கு !
‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே ‘.
தயாரிப்பாளர்கள்: இசை, அதிதி இசை, அத்வைதா இசை, இணைத் தயாரிப்பு: நீலிமா இசை. ரிலீஸ்: ஷாட் ஃப்ளிக்ஸ் ஓடிடி. டைரக்டர்: ஜெயராஜ் பழனி, திரைக்கதை வசனம்: சதீஷ் சிவா& ஜெயராஜ் பழனி. ஆர்ட்டிஸ்ட்ஸ்: நிரஞ்சனா நெய்தியார், சுருதி பெரியசாமி, அர்ஷத், தஸ்மிகா, ஆறுமுக வேல், ஆர்.ஜே.பிரதீப், சுதா. டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: கோகுல கிருஷ்ணன், இசை: தர்ஷன் குமார், எடிட்டர்: விக்னேஷ் பிஆர்ஓ: யுவராஜ்
தனது பள்ளிப்பருவத் தோழியான ஷக்கீராவே (நிரஞ்சனா நெய்தியார்)தனக்கு மனைவியாக வரப் போவதை நினைத்து உற்சாகமாகிறார் இர்ஃபான் (அஷ்ரத் ஃபெரோஸ்). நிச்சயதார்த்தம் நடந்து, நிக்காஹ் ஏற்பாடுகளும் நடக்கிறது. நிக்காஹ் முதல் நாள் இரவு மெஹந்தி வைக்கும் வைபவமும் நடக்கிறது.
அன்று இரவு திடீரென ஷக்கீரா வீட்டிற்கு வரும் இர்ஃபான், “சீக்கிரம் கிளம்பு எல்லா ஏற்பாடுகளும் ரெடி” என அவசரப்படுத்தி கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். ஷக்கீராவை அவரது அக்காவே அனுப்பி வைக்கிறார். ஷக்கீராவின் அப்பா உமர்பாய்க்கு விசயம் தெரிந்து வீடு ரணகளமாகிறது. ‘என்னடா இது புது பிரச்சினை. நிக்காஹ் பண்ணப் போற ரெண்டு பேருமே இஸ்லாம் மதம். இதுல என்ன சங்கட்டம் ‘ என நாம் யோசித்தவுடனே ஃப்ளாஷ் பேக் ஓப்பன்.
வினோதாவை தான் காதலிப்பதாகவும் எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குமாறும் இர்ஃபானிடமே கெஞ்சுகிறார் ஷக்கீரா. அந்த வினோதா ஒரு பெண் என தெரிந்ததும் “இது மார்கத்திற்கு எதிரானது” என்று கொந்தளிக்கும் இர்ஃபான், பின்னர் சமாதானமாகி இருவரையும் சேர்த்து வைக்க களம் இறங்குவது தான் ஓப்பனிங் சீன். கதை தரங்கம்பாடியில ஆரம்பித்து திருச்சியில் முடிகிறது.
ஆவணப் படம் எடுக்க தரங்கம்பாடிக்கு வரும் வினோதாவாக சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இந்த வினோதா எந்த மதம் என்பதைக் காட்டாமல் லாவகமாக தப்பித்து விட்டார் டைரக்டர் ஜெயராஜ் பழனி. படம் மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான். ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓடுவது போல ஃபீல் பண்ண வைப்பது பெரிய பலவீனம்.
அதேபோல் ஷக்கீராவுக்கு வினோதா மீது ஈர்ப்பும் காதலும் வருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய இருவரும் தங்களால் இயன்ற அளவு உழைத்துள்ளனர். தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்தால் இந்த ‘ வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே ‘ விற்கு தொடக்கமே கிடைத்திருக்காது. எதிர்ப்புகளும் கடும் கண்டனங்களும் தான் கிளம்பியிருக்கும். Any way Next Best- ஆக இருக்க நீலிமா இசைக்கு இப்போதே சொல்லி வைப்போம்.
-மதுரை மாறன்