பிஸ்னஸ் பிஸ்தா ஆவது எப்படி?
பிஸ்னஸ் பிஸ்தா ஆவது எப்படி?
டாக்குமெண்டரி ஒன்றில் தேநீரில் ஆர்வம் உள்ள ஆங்கிலேயர் ஒருவர் டார்ஜிலிங் செல்கிறார். அங்கே ஓட்டலில் தங்கிவிட்டு காலை உணவை உண்ண ஒரு உணவகத்துக்கு செல்கிறார். அங்கே போனால் பேரதிர்ச்சி. 13 மேலைநாட்டவர் அங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
டார்ஜிலிங்கில் உள்ள ஏதோ ஊர், பேர் தெரியாத உணவகத்தில் ஒரு நாளில், 13 மேலை நாட்டவர் காலை உணவுக்கு உட்கார்ந்திருக்கும் சாத்தியக்கூறு என்ன என வியந்தபடி இவர்கள் எல்லாம் எப்படி அங்கே வந்து சேர்ந்திருப்பார்கள் என யோசிக்கிறார். அப்போதுதான் தான் எப்படி அங்கே வந்து சேர்ந்தேன் என யோசிக்கிறார்.
லோன்லி பிளேனட் (Lonely Planet) தளத்தில் இந்த உணவகத்தை பற்றி நல்ல ரிவ்யூ எழுதப்பட்டு இருந்தது. அதை படித்து தான் இங்கே வந்ததுபோல நிறைய வெஸ்டர்ன் டூரிஸ்டுகளில் வர ஆரம்பித்து இருக்கிறார்கள்…
சுற்றுலாபயணி ஹெரால்ட் பால்டர் (Harald balder) இலங்கைக்கு சென்ற போது (கலவரங்களுக்கு முன்) ஒரு இலங்கை பாட்டியின் வீட்டில் வாடகைக்கு தங்கி, பாட்டி சமைத்த உனவை பற்றி எல்லாம் நல்லா வீடியோ போட்டுவிட்டு, பாட்டிக்கு நிறைய டாலர்களை கொடுத்துவிட்டு வந்தார்.
அவ்வளவுதான். பாட்டி வீட்டில் தங்க ஏராளமான யுடியூபர்களும், சுற்றுலா பயணிகளும் போட்டிபோட, பைவ் ஸ்டார் ஓட்டல் விலைக்கு பாட்டி வீட்டு வாடகை ஏறியது. எங்கிருந்தோ பாட்டியின் பேரனும், அவனது மனைவியும் வந்தார்கள். நல்ல புராபசனலா வீட்டை நிர்வகிக்கிறோம் என சொல்லி அதை ஓட்டல் கணக்காக ஆக்க, வந்த பல விருந்தினர்களுடன் சண்டை…இலங்கை பெண் ஒருவர் அதை வீடியோ எடுத்து “ஹெரால்ட் பால்டர். உன் பாட்டியின் நிலையை பார்” என வீடியோ போட்டார்.
இதேபோல இங்கிலாந்தில் உள்ள கிட்லிங்க்டன் (Kidlington) கிராமத்தில் திடீரென ஏராளமான சீன டூரிஸ்டுகள் குவிய ஆரம்பித்தார்கள். அந்த ஊரில் பெருசா எதுவுமே இல்லை. திடீரென ஏராளமான சீன டூரிஸ்டுகள் தினமும் அங்கே வந்து கிராமத்து வீடு, சர்ச், வயல் என செல்பி எடுக்க ஆரம்பித்தார்கள். கிராம உணவகத்தில் பணமழை பொழிந்தது. ஆனால் போக்குவரத்தை தாங்க முடியாமல் கிராம சாலைகள் திணறின. “இங்கே எதுக்கு வந்தீர்கள்?” என கேட்டால் “ஒரு ப்ரிட்டிஷ் கிராமம் எப்படி இருக்கும் என பார்க்க வந்தோம்” என சொல்லி வைத்த மாதிரி சொன்னார்கள்.
அதன்பின் பிபிசி சீனா வரை சென்று இதன் ரகசியத்தை ஆராய்ந்தது. சீன டூரிஸ்ட் நிறுவனங்கள் கிட்லிங்கனை “ஒரு டிபிகல் பிரிட்டிஷ் கிராமம்” என விளம்பரம் செய்து வருவது தெரிந்தது. அங்கே எப்போதோ யாரோ சீன டூரிஸ்ட் ஏஜன்ட் ஒருவர் வந்திருக்கலாம். கிட்லிங்கன் அவருக்கு பிடித்து போயிருக்கலாம். போய் சீனாவில் பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் அதை சேர்க்க, ஒருவரை ஒருவர் காப்பி அடித்து, கிட்லிங்க்டன் ஒரு பெரிய சுற்றுலா தளமாகிவிட்டது.
1980க்களின் துவக்கத்தில் நிர்மாவின் வெற்றி முழுக்க தூர்தர்சன் விளம்பரங்களின் அடிப்படையிலேயே அமைந்தது. ஆக இன்றைய முக்கிய ஊடகமான சோசியல் மீடியாவை நல்லபடி பயன்படுத்த தெரிந்தால் நாமும் பிசினஸ் பிஸ்தாக்கள் தான். ஆனால் இந்த வாய்ப்பு கொஞ்ச காலம் தான் நீடிக்கும். அதற்குள் டிரென்டு மாறிவிடும்
-நியாண்டர் செல்வன்