அமமுக, அதிமுக இணைந்தால் திமுகவிற்கு நன்மை
கட்சியினரைக் குழப்புவதற்காகவோ அப்படிப்பட்ட எண்ணத்தை விதைக்கவோ அமமுகவும் அதிமுகவும் இணைய இருப்பதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் அமமுக இணைந்தால் அதிலுள்ளவர்கள் கரைந்து காணாமல் போவார்கள். அமமுகவில் அதிமுக இணைவது என்பது தாய்க்கழகத்திற்கு இழுக்கு. இணைந்தாலும் விரும்பா மற்றோர் அணி உருவாகலாம். ஆனால் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். சசிகலாவையே பொதுச்செயலராக ஏற்பதாக இருந்தால் ஒரே கட்சி என்ற பெயர் கிட்டும்.
பாசகவின் அதிமுக அழிப்பு முயற்சிகள் தோல்வியுற்றதாலும் பொதுத்தேர்தல்களில் மண்ணைக் கெளவி வருவதாலும் தன் அதிகார வலிமையைக் கொண்டு அதிமுகவை இணைக்கும் நாடகத்தை அரங்கேற்ற நினைக்கிறது. அதிமுகவை அதன் போக்கிலேயே விடாமல் தன் கைப்பாவையாக ஆக்கியும் எண்ணம் ஈடேறாததால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிகரமான தோல்வியையாவது சந்திக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவின் ஈரணிகளையும் ஆட்டுவிக்க முயல்கிறது.
முந்தைய நொடி வரை எதிர்த்தவரை அடுத்த நொடியில் ஆதரிப்பதும் ஆதரித்தவரை எதிர்ப்பதும் அரசியலில் வெட்கங் கெட்ட நடைமுறை ஆகிவிட்டது. எனவே, இன்னின்னாரைத் தவிர பிறரைச் சேர்த்துக் கொள்வோம் என்பதுபோன்ற பேச்சுகள் இணைப்பின் பொழுது காணாமல் போய்விடும். ஆனால் அவ்வாறு இணைப்பது என்பது எதிர்பார்த்த பயன் தராது.
செயலலிதா மறைந்ததும் கட்சியில் இயல்பான பிளவு ஏற்படவில்லை. பாசகவின் பொம்மலாட்டத்தால்தான் பன்னீரின் ‘தருமயுத்தம்’ என்னும் கேலிக்கூத்து, சசிகலா பக்கம் இருந்த ஒவ்வொரு பதவியாளர்களும் எடப்பாடிக்கு ஆதரவாகக் கட்டாயமாகக் கொண்ட கட்டாயச் சூழல் ஏற்பட்டன.
ஆனால், பாசகவின் நோக்கம் நிறைவேறாததால் தினகரன் பக்கம் மட்டும் சாய்ந்தால் தோல்வி வெளிப்படையாகத் தெரிந்து விடும் என்பதால் இணைப்பு நாடகம் நடத்த முயல்கிறது. தினகரன் திமுக உள்ள பேராயக்கட்சிக் /காங்.கட்சிக் கூட்டணியில் சேர முடியாது என்பதால் பாசக கூட்டணியில் சேர்த்து விடலாம் எனவும் பாசக எண்ணுகிறது.
தினகரன் பக்கம் அதிமுகவில் அவரது ஆதரவாளர்கள், இப்போதைய ஆளும் அமைப்பின்மேல் உள்ள மனக் குறைவர்கள், அதிமுகவை ஆட்டிவைக்கும் பாசகவை விரும்பாதவர்கள் உள்ளனர். பாசகவின் மேல் வெறுப்பு கொண்ட பொதுமக்களும் தினகரனை ஆதரிக்கின்றனர்.
கட்சி இணைந்த பின்னர் இதே ஆட்சி தொடர்ந்தது எனில், தினகரன் எதிர்த்த திட்டங்களைத் தொடருவார்களா? அப்படியாயின் இதனை எப்படி ஏற்க முடியும்? இல்லை எதிர்த்த திட்டங்கள் கைவிடப்படுமா? அப்படியானால் அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய அரசு எப்படி தொடரலாம்.
அதிமுக ஆட்சி மேல் மக்களில் ஒரு பகுதியினர் வெறுப்புடன் உள்ளது அனைவரும் அறிந்ததே. இத்தகையோர் தினகரன் பக்கம் உள்ளனர். ஆனால், கட்சிகள் இணைந்தால் அத்தகைய பொதுமக்களில் பெரும் பகுதியினர் திமுக பக்கமே செல்வர்.
அதிமுகவும் அமமுகவும் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக அறிவித்துத் தனித்தனியே போட்டியிடுவதுதான் நல்லது. திமுக கூட்டணியில் சேராத பாசக நீங்கலான கட்சிகளை இவர்களுள் யார் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு அதுவே வலிமை தரும்.
-இலக்குவனார் திருவள்ளுவன்