“அன்றே இந்த பர்தா இருந்திருந்தால் நானும் கூட உயர்கல்வியை பெற்று இருப்பேன்”
கவிஞர் சல்மாவின் முகநூல் பதிவிலிருந்து..
எனக்கு பதிமூன்று வயதாக இருந்த போது வயதுக்கு வந்து விட்டேன் என வீட்டுக்குள் இருக்க வைத்தர்கள். ஏராளமான கல்வி சார்ந்த கனவுகளோடு இருந்த நான் பள்ளிக்கல்வி முடிவுக்கு வந்துவிட்ட அதிர்ச்சியில் இருந்தேன். மறுபடி பள்ளிக்கு போக விடமாட்டார்கள். ஊரில் அத்தனை பெண் குழந்தைகளுக்கும் அதுதான் விதித்தது. கொஞ்ச காலம் இருந்து பார்த்தேன். முடியவில்லை. அம்மா அப்பாவிடம் கெஞ்சி தொலைதூர கல்விக்கு அனுமதி கேட்டேன். அவர்களுக்கும் ஆசை.. ஊர் வாய்க்கு பயம்.
அப்போதெல்லாம் வெள்ளை நிற துணியை துப்பட்டி என உடல் முழுக்க சுற்றிக்கொள்வது தான் வழக்கம். முகமும், பாதி உடையும் வெளி தெரியும். பர்தா நடைமுறையில் இல்லை. தொலை தூர கல்வி வேண்டும் என்ற எனது பிடிவாதம் வலுத்த போது என் மாமா பள்ளியில் போய் விசாரித்தார். பிறகு என்னிடம் சொன்னார்
நீ தொலைதூர கல்வி கற்க வேண்டும் எனில் முதலில் பள்ளிக்கு போய் தலைமை ஆசிரியரை பார்த்து கடிதம் எழுதி கொடுத்து கையொப்பம் இட்டு உனது டிசியை பெற வேண்டுமாம். நீயே நேரில் வராமல் தர மாட்டார்களாம். அப்பா சொன்னார், அதெப்படி வயசுக்கு வந்த பெண் வீட்டை விட்டு போக முடியும்? ஒரு ஆண் முகத்தை பார்க்க முடியும், அந்த ஆண் உன் முகத்தை பார்ப்பது எப்படி சரியாகும், ஊர் என்ன சொல்லும்..அதெல்லாம் வேணாம்…
நான் சொன்னேன் நம்மிடம் கார் இருக்கிறது. அதில் போகிறேன். மாமா உடன் வரட்டும். நான் துப்பட்டா போட்டு கொள்கிறேன். துப்பட்டி போட்டாலும், காரில் போனாலும் ஊரில் நீதான் என அடையாளம் தெரிந்து விடும். அப்போதும் ஊர் பேசும் என்றார் அம்மா.
அப்படி நீ தொலை தூர கல்வி கற்க போனாலும் ஊர் பேசும். வெளியூர் போய் பரீட்சை எழுத வேண்டும். ஊரை நாம் தான் கெடுக்கிறோம் என்பார்கள். தயவு செய்து அடங்கி இரு என சொல்லி விட்டார்கள். இந்த போராட்டம் நீண்ட நாட்கள் நடந்தது. இறுதிவரை எனக்கு கல்வி சாத்தியமாக வில்லை.
இஸ்லாம் இதுபோன்ற விதிமுறைகள் எதையும் விதிக்கவில்லை என்றாலும் அந்த சமூகம் அன்று அப்படித்தான் அறியாமையில் இருந்தது. எண்பதுகளின் நடுவில் ஒருவர் வெளியூரில் இருந்து ஒரு பெண்ணை மணமுடித்து வந்தார். அவர்தான் முதல் முறை பர்தாவோடு நாங்கள் பார்த்த பெண். பிறகு அரபு நாடுகளுக்கு பயணித்த இளைஞர்கள் பர்தாவை பிரபலப்படுத்தினார்கள்.
இப்போது நான் தினமும் எனது வீட்டு வழியாக பர்தாவோடு பள்ளிக்கு கூட்டம் கூட்டமாக பெண் பிள்ளைகள் செல்வதை பார்க்கிறேன். அவர்கள் யார் என்பதும், யாருடைய பிள்ளைகள் எனவும் அடையாளம் தெரியாது. நிறுத்தி பெயர் கேட்டு யாருடைய மகள் என்று அறிந்து கொள்வேன். அவர்கள் காலையும் மாலையும் கடந்து செல்லும்போது நான் பார்ப்பேன். பள்ளி இறுதி வரை படிக்கிறார்கள் வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள். அன்றே இந்த பர்தா இருந்திருந்தால் நானும் கூட உயர் கல்வியை பெற்று இருப்பேன் என ஆற்றமையோடு நினைத்து கொள்வேன்.
அவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதா,. இல்லை கல்வி சுதந்திரம் பெறுகிறார்கள் என சொல்வதா என எனக்குள் கேட்டுக் கொள்வேன். இன்று ஊரின் அத்தனை பெண்களும் கல்வி அறிவு பெறுகிற வாய்ப்பை இந்த பர்தா வழியே அவர்கள் பெற்று இருக்கிறார்கள் என்பதே இப்போதைக்கு எனக்கு பெரிய விசயமாக இருக்கிறது.
பர்தாவோடு இன்று அவர்கள் ஜாமியா மில்யாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். கை விரல் உயர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் முதலில் கல்வியை கையில் எடுக்கட்டும். தன் காலில் நிற்கட்டும் . பிறகு முடிவுகளை எடுக்கட்டும்.