10 லட்சம் கொடுத்தால் 20 லட்சம் ! சதுரங்க வேட்டை பாணி மோசடி கும்பல் கைது !
10 லட்சம் கொடுத்தால் 20 லட்சம் ! சதுரங்க வேட்டை பாணி மோசடி கும்பல் கைது !
மண்ணில் புதைக்கப்படும் வரையிலும்கூட, மக்களின் பேராசையை தடுத்து நிறுத்த முடியாது போல. எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்பதாக மோசடி கும்பல் ஒருபக்கம் புதுப்புது திட்டங்களோடு காத்திருக்கிறது. மற்றொரு பக்கம், மோசடிகள் பற்றிய பல செய்திகள் அன்றாடம் அம்பலத்திற்கு வந்தாலும், பேராசைப்பட்டு பணத்தை இழப்பதற்கென்றே ஏமாற்றுக்காரனுக்காக காத்திருக்கிறது.
அப்படி ஒரு பலே மோசடி கும்பல் ஒன்றைத்தான் தேனி மாவட்ட போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மோடி ஆட்சி பொறுப்பேற்ற புதிதிலேயே ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்தார். கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்பதாகக்கூறி, கலர் கலராக புதிய நோட்டுகளை அச்சடித்து தள்ளினார். அதில் ஒன்று, 2000 ரூபாய் நோட்டு. அந்த நோட்டினால் சமூகத்தில் எந்த பலனும் இல்லை. பொருளாதாரத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 2000 நோட்டு புழக்கத்தில் இருப்பதே பயனற்றது என்ற முடிவுக்கு வந்தனர்.
அதன் அடிப்படையில், கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி முதலாக, அதுவரை புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இதன்படி, கடந்த ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி, இன்னும் 2.08 சதவீதம் என ரூ.7,409 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள் பொதுமக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த கெடு தேதிக்குள்ளாகவும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளாதவர்கள், ரிசர்வ் வங்கியின் கிளைகளில், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்பதாகவும் அறிவித்திருந்தது. இதன்படி, நபர் ஒருவர் 20000 வரையில் மாற்றிக்கொள்ளலாம். அதுவும் அவர்களது வங்கிக்கணக்கின் வழியாகவே மாற்ற அனுமதிக்கப்படும் என்பதான நிபந்தனையும் விதித்திருந்தது.
இந்த பின்னணியில்தான், பத்து இலட்சம் மதிப்பிலான நடைமுறையில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளாக கொடுத்தால், கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்புத் தொகையாக 20 இலட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குகிறோம் என்பதாக ஆசையைக் கிளப்பி பணத்தை பறிக்க முயன்றிருக்கிறது ஒரு கும்பல்.
சென்னை – ஆவடியைச் சேர்ந்தவர் தவச்செல்வம், இதே பாணியில் இவரிடம் அணுகியவர்கள் பத்து இலட்ச ரூபாயுடன் தேனிக்கு வரவழைத்திருக்கின்றனர். காரின் டிக்கியில் பளபளவென அடுக்கிவைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை காட்டியிருக்கின்றனர். பின்னர், தேனி உழவர் சந்தை அருகே காரில் அழைத்துச்சென்று அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட அக்கும்பல் தவச்செல்வத்திடமிருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு நடுவழியில் புதிய பேருந்து நிலையம் அருகே இறக்கிவிட்டு சென்றிருக்கிறது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தவச்செல்வம் தேனி போலீசில் புகார் அளிக்க, பிரச்சினையின் தீவிரத்தன்மையை உணர்ந்த மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ. ஜீவானந்தம் ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்ட தேனி மாவட்டம், பொம்மையகவுண்டன் பரமராஜ் மகன் கேசவன் (36), கருவேலநாயக்கன் பட்டி சின்னையா மகன் சேகர்பாபு (45) ஆகிய இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து, போலி ரூபாய் நோட்டுகள் 3 கோடியே 40 லட்சம் ரூபாய், ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் 14 லட்சம், 16 செல்போன்கள், 3 கார்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
ஜெய்ஸ்ரீராம்.