இளையராஜா மனசுக்குள் நுழைந்த சாத்தான் தற்போது மாரி செல்வராஜின் மனசுக்குள்…..
‘தலித் இலக்கியம்’ போன்று இன்று ‘தலித் சினிமா’ உருவாகி இருப்பது மிகப்பெரிய மறுமலர்ச்சி. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற சிறந்த படைப்பாளர்கள் அதை முன்னெடுத்திருப்பது இன்னும் மகிழ்ச்சி.
மாரி செல்வராஜின் முந்தைய படங்களை கொண்டாடிய நான் அவரது ‘பைசன்’ குறித்த விமர்சனங்களை முன் வைத்தேன். அதற்காக நான் சந்தித்தவைகள் தனி ரகம்.
எல்லாவற்றையும் தாண்டி மாரி செல்வராஜ் மீது எனக்கு தனி மரியாதை, அன்பு எப்போதும் உண்டு. பின்தங்க வைக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து கலை உலகத்தை கைப்பற்றி அதனை தன் மக்களின் விடுதலைக்காக பயன்படுத்தி வரும் அவருக்கு நான் எப்போதும் தலை வணங்குகிறவன்.
அவரது ‘பைசனை’ விமர்சித்தது போன்று அவரது இன்றைய வெற்றி விழா பேச்சையும் விமர்சிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.
காரணம் மாரி செல்வராஜ் என்கிற மகா கலைஞன் பாதை மாறிவிடக்கூடாது என்பதற்காக…
மாரி செல்வராஜுக்கும் எனக்கும் எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் இல்லை. மாரி செல்வராஜ் என்கிற மகத்தான படைப்பாளி, எதிரிகளுக்கு இடம் கொடுத்து வீழ்ந்து விடக்கூடாது, இளையராஜா போன்று சொந்த மக்களையே மதிக்காத ஜென்மமாகவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.
நேற்றைய வெற்றி விழா பேச்சில் தனக்காக உழைத்த, உதவிய அனைவருக்கும் நன்றி சொன்னார், அது முக்கியம். கருப்பு நிற நாயகிகளை ஏன் பயன்படுத்துவதில்லை என்ற கேள்விக்கு, அது சினிமாவில் தவிர்க்க முடியாத சமரசம் என்பதை புரிய வைத்தார்.
‘எனக்கு இதுதான் தெரியும், இதைத்தான் நான் செய்வேன். என்னை வணிக சினிமாவிற்குள் தள்ளி என்னை உங்கள் விருப்பத்துக்கு வடிவமைக்க விரும்பாதீர்கள்’ என்றார் அது இன்னும் மகிழ்ச்சி. ஒரு துணிச்சலான படைப்பாளி அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஆனால் எனக்கான உறுத்தல் எப்போது தோன்றியது என்றால் அவர் தனது பேச்சின் ஊடாக ‘அவருக்கு நான் இன்று நிறைய ‘அவார்ட்’ கொடுத்தேன். இன்றைக்கு அவர் பத்து ‘அவார்ட்’ வாங்கினார். இசை அமைப்பாளர் நவாஸ் கே.பிரசன்னாதான் அதிக அவார்ட் வாங்கினார். எல்லா அவார்டையும் வாங்கி விட்டு காலையில் ‘ஐ லவ் யூ’ என்று மெசேஜ் அனுப்புவார்’ நான் அவருக்கு பதிலே அனுப்ப மாட்டேன்” என்றார்.
நிற்க… இதில் ‘அவார்ட்’ என்று அவர் குறிப்பிட்டது அவர் திட்டியது. அது கெட்ட வார்த்தையாகவும் இருக்கலாம், சுடு சொல்லாகவும் இருக்கலாம். தன்னோடு பணியாற்றியவனை திட்டியதைத்தான் இத்தனை கர்வத்தோடு அவர் சொன்னார்.
உடன் பணி செய்பவனையோ, அல்லது தன்னிடம் கற்றுக் கொள்ள வந்தவனையோ சுடு சொல்லால் திட்டுவதும், அடிப்பதும் ஒன்றுதான்.
அடிப்பது கூட வலி குறைந்ததும் மறைந்து விடும். ஆனால் வார்த்தைகள் வாழ்க்கை முழுக்க கொல்லும். இதுதான் ‘பார்ப்பணியம்’ சொல்லும் ‘குருகுலக்கல்வி’ முறை.
தன் பேச்சின் ஊடே ‘என்னை புரிந்து கொள்ளாதவர்கள், என்னை ‘சைக்கோ’ என்று நினைப்பவர்கள், என்னை விட்டு சென்று விடுகிறார்கள். நான் ஒரு படத்தை தொடங்கி விட்டால் நான் நானாக இருக்க மாட்டேன்’ என்றெல்லாம் பேசினார்.
ஏதோ சினிமா எடுப்பது பெரிய தவம் போன்றும், எவராலும் சாதிக்க முடியாத சாதனை போன்றும் அவரது பேச்சு இருந்தது.
100 படங்களுக்கு மேல் இசை அமைத்த பிறகு இளையராஜா மனசுக்குள் நுழைந்த ‘சாத்தான்’ மாரி செல்வராஜின் 5வது படத்திலேயே அவர் மனசுக்குள் நுழைந்து விட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் பாரதிராஜா படத்தின் நாயகன், நாயகிகளை அடிப்பதும், அடி வாங்கியவர்கள் ‘மோதிர கையால் குட்டுப்பட்டவன் நான்’ என்று பெருமை பேசியதும் ஒரு காலம். அந்த காலம் திரும்பி விட்டதாகவே எனக்குத் தோன்றிது. அவர் அடித்தார், இவர் திட்டினார்.
எனக்கிருப்பது ஒரு சில கேள்விகள்தான்…
100 படங்களுக்கு மேல் இயக்கிய கே.பாலச்சந்தர் யாரையாவது திட்டி கேள்விப்பட்டிருக்கிறீர்களா… ரொம்ப பிடித்தாலும், கோபம் வந்தாலும் முதுகில் ரெண்டு தட்டு தட்டுவார். அதிக பட்சம் ‘முண்டம்… முண்டம்…’ என்பார்.
இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த படங்களை எடுத்த அடூர் கோபாலகிருஷ்ணனும், ஷியாம் பெனகலும், சத்யஜித் ரேவும், எந்த கலைஞனை அடித்ததாகவும், திட்டியதாகவும் தகவல் இல்லை.
அவ்வளவு ஏன்? இன்று உலக பெரும் படங்களை இயக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலன், ஜேம்ஸ் கேமரூன், ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி ஒரு லைட் மேனைகூட திட்டியதாக அடித்ததாக, தகவல் இல்லை.
‘மாமன்னன்’ படத்தின் போது உதயநிதி ஸ்டாலினை திட்டிய கதை எதையும் மாரி செல்வராஜ் சொல்லவில்லையே.
பள்ளிகூடத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை திட்டுவதையும், அடிப்பதையும்கூட சட்டவிரோதம் என்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டு….
அட போங்க மாரி…
— மீரான் முகமது, மூத்த பத்திரிகையாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.