காலம் உறைந்து நிற்கும் நினைவுகளின் பிம்பம்
இளமை என்பது வாழ்க்கையின் வசந்தகாலம். எத்தனை வயதானாலும் நினைவுகளில் தேங்கி நிற்கும் இளமைப் பருவத்தின் வசந்த மலர்கள் வாடுவதே இல்லை. நினைக்கும் போதெல்லாம் அதன் நறுமணம் நெஞ்சத்தில் வீசிக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட வசந்த மலர்களின் தொகுப்புதான், அருமைத் தோழர் பிம்பம் ஷாகுல் படைத்துள்ள ‘உன்னதபுரத்துக் கதைகள்’.
ஷாகுல் தன் கேமராக் கண்களால் காட்சிகளை கவிதையாக்கித் தருபவர். கேமரா இல்லாவிட்டாலும் அவரது கண்கள் காணும் காட்சிகளை ரசனையாக விளக்கக்கூடிய ஒரு கதைசொல்லி அவருக்குள் இருப்பதை, உண்மை நிகழ்வுகளின் பின்னணியிலான உன்னதரபுரத்துக் கதைகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
அன்பு நண்பர் யுகபாரதியின் அணிந்துரையில் புத்தகத்தின் சாரத்தை வாசகர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. ஷாகுலும் யுகபாரதியும் தஞ்சைவாசிகள். இருவர் எழுத்துகளிலும் மண்வாசனையுடனான அனுபவப் புழுதி மனதெங்கும் பரவுகிறது. அதே தஞ்சையில் பிறந்து திருவாரூரில் வளர்ந்த எனக்கு, கல்லூரிப் பருவத்தில் மீண்டும் தஞ்சை தெருக்களில் சுற்றும் வாய்ப்பு அமைந்தது.
உன்னதபுரத்துக் கதைகளில் பிம்பம் ஷாகுல் குறிப்பிடும் இடங்கள் பலவும் எனக்கும் நெருக்கமானவைதான் என்பதால், கதை மாந்தர்களில் ஒருவனாக அவரது எழுத்துகளுடன் எளிதாகப் பயணிக்க முடிகிறது. யுகபாரதி தனது அணிந்துரையில் குறிப்பிடும் ஷாகுலின், திரையிசைப் பிரியர்களின் வேடந்தாங்கல் கட்டுரையில் வரும், ஆபிரகாம் பண்டிதர் தெருவின் ‘மெக் பீசஸ் டீக்கடை’யின் சவுண்ட் சிஸ்டம் பற்றிய குறிப்புகள், எனக்கு தஞ்சை ரயில்வே சந்திப்பிலிருந்து வெளியே வந்து காந்திஜி சாலையில் நடக்கும்போது, சுண்டி இழுத்த ‘சூப்பர் டீ ஸ்டாலை’ நினைவுகளில் மணக்கச் செய்கிறது. எல்.பி. ரெகார்டில் எஸ்.ஜானகியின் ஊரு சனம் தூங்கிடிச்சும், கே.எஸ்.சித்ராவின் ஏதேதோ எண்ணம் வளர்த்தேனும் இன்னமும் காதுக்குள் ரீங்காரமிடுகின்றன. 20 பைசாவுக்கு டீயும், இன்னொரு 20 பைசாவுக்கு வடையுமாக 1986 மௌன ராகம் முதல் 1989 ராஜாதி ராஜா வரை இசைத்தட்டுகளில் கேட்ட பாடல்கள் மனதுக்குள் சுழன்று கொண்டே இருக்கின்றன.
நினைவுகளைக் கிளறிவிடும் பிம்பம் ஷாகுலின் உன்னதபுரத்துக் கதைகள், இளமைப் பருவத்தில் நம்பிக்கைகளுடன் நகர்ந்த நாட்களை மீட்டெடுக்கும் அனுபவப் பதிவுகள். மெலட்டூரில் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம். அதில் குழந்தை பிறந்த பிறகு மனைவிக்குப் பதில், தானே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டே பெரியார் தொண்டரான அப்பா. அவரது அரசியல் பயணத்தில் சம்பாதித்த நல்ல பெயரை மட்டும் மூலதனமாகக் கொண்டு, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞனாக தன்னம்பிக்கையுடன் வளர்ந்த தோழர் ஷாகுலின் வாழ்க்கையும், அந்த அனுபவங்களை அவர் ரசித்து ரசித்து விளக்குகின்ற விதமும் நம்மை உன்னதரபுரத்திலேயே குடியிருக்கச் செய்துவிடுகின்றன.
வாழ்ந்த கதையின் நிழலில் நிகழ்கால வியர்வையைத் துடைக்கும் பல்கீஸ் கிழவி, கனவிலும் நினைவிலும் இன்னமும் வந்துகொண்டே இருக்கும் மாமுராயின் தூண்டில், ஃபோட்டோகிராபர் தொழிலில் போலீஸ்காரருடன் பயணித்து பிணத்தை படம் எடுத்த திகில் பொழுது, அதிகாலை முகூர்த்தத்திற்கு தொழில்நிமித்தமாக சென்ற வேளையில் எதிர்கொண்ட நடுநிசி நாய்களின் அட்டகாசங்கள், நண்பனின் சொந்தங்கள் தனக்கும் சொந்தமாகி அவர்களுக்கு கீதாச்சாரம் வரிகளை எழுதிக் கொடுத்த நாட்கள், ரத்ததானம் என்கிற பொதுசேவையில் உருவான மறக்கமுடியாத பந்தம், கனவுகளையும் முயற்சிகளையும் கால்களாகக் கொண்டு பயணித்த காலத்தில் அறிமுகமான அய்யாதுரை என்பவர் மெல்ல மெல்ல பட்டாச்சார்யாவான அதிசயம் , பள்ளிக்கூட ஆசிரியர்கள் குப்புசாமிக்கும் விஸ்வநாத ஐயருக்குமான நட்புமுரண் என ஒவ்வொரு அனுபவத்தையும், நம் தோள் மீது கைப் போட்டு நடந்தபடி கதை சொல்கின்ற தோழனைப் போல வெளிப்படுத்தியிருக்கிறார் பிம்பம் ஷாகுல்.
தஞ்சையின் முதல் ஷாப்பிங் மாலான, வட்ட வடிவில் அமைக்கப்பட்ட காவேரி காம்ப்ளக்ஸில் அவரைப் போலவே நானும் சுற்றியிருக்கிறேன். உன்னதபுரத்துக் கதைகளைப் படித்த பிறகு, இன்னமும் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன நினைவுகள். வாசலை அடைத்தபடி உறைந்திருக்கிறது இளமையின் வசந்தகாலம். வெளியே வர மனமில்லை.
— கோவி.லெனின்







Comments are closed, but trackbacks and pingbacks are open.