விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சார்பதிவாளர் ! கணக்கில் வராத ரூ.76 ஆயிரம் பறிமுதல் !
முறையற்ற பத்திரங்கள் ! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சார்பதிவாளர் ! கணக்கில் வராத ரூ.76 ஆயிரம் பறிமுதல் !
திருவண்ணாமலை வரன்முறைப் படுத்தப்படாத மனைகளை பதிவு செய்த விவகாரத்தில் கையூட்டு பெற்றது தொடர்பாக இலஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரின் விசாரணையில் பணத்தோடு கையும் களவுமாக புரோக்கர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். சார்பதிவாளரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை, வேட்டவலம் ரோட்டில் இணை- 2 சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிக அளவில் வரன்முறைப் படுத்தப்படாத மனைகள் பதிவு செய்யப்படுவதாக திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு புகார்கள் பறந்தது.
இதையடுத்து நேற்று (08.07.2024) மாலை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் சென்ற போலீசார் சார்பதிவாளர் அலுவலக கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, புரோக்கர் குமார் என்பவர் சார்பதிவாளருக்கு இலஞ்சமாக கொடுப்பதற்காக வைத்திருந்த 25,000 ரொக்கத்துடன் வகையாய் சிக்கினார். கையும் களவுமாக புரோக்கர் சிக்கியதையடுத்து, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அலுவலகத்தின் மேல்தளத்தில் பணம் பதுக்கப்பட்டிருக்கிறதா? என்பதையும்; அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சார் பதிவாளர் அலுவலக ஊழியர்களின் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களிலும் பணம் பதுக்கப்பட்டிருக்கிறதா? என்பதையும் சல்லடை போட்டு அலசியுள்ளனர் இலஞ்ச ஒழிப்புப் போலீசார். விடிய விடிய இந்த சோதனை நீடித்தது.
சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.76 ,900 ரொக்கத்தை கைப்பற்றினர். இதுதவிர கூகுள்-பே போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலம் பல லட்சம் ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் இந்த அதிரடி ரெய்டு நடவடிக்கையின் வழியே அம்பலமாகியிருக்கிறது.

ரெய்டில் சிக்கிய , பணம் மற்றும் முறையற்ற ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவரும் இலஞ்ச ஒழிப்புப் போலீசார், விசாரணையின் இறுதியில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அதிரடி ரெய்டு, தமிழகம் முழுவதுமே சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கா. மணிகண்டன்