இணையத்தில் பின்தங்கியிருக்கும் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்! எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி…
கரூர், அன்னை மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, பொன்முடியார் முத்தமிழ் மன்றம், இணைந்து கல்லூரிக் கலையரங்கத்தில் 14.02.2025ஆம் நாள் வெள்ளிக்கிழமை ‘இணையமும் தமிழும்’ எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறைக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் சாருமதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் தெ.தெய்வானை, கல்விசார் புலத் தலைவர் முனைவர் மு.சாந்தி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வே.ராசாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சிப் பட்டறையின் முதல் அமர்வில், அண்மையில் தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி மு.சுப்பிரமணி, ‘இணையத்தில் தமிழ் வளர்ப்போம்’ எனும் தலைப்பில் உரை வழங்கிப் பயிற்சியளித்தார். அப்போது அவர், “உலகம் முழுவதும் கணினி மற்றும் திறன்பேசிகளின் வழியாக இணையம் பயன்படுத்துவது 692 கோடி என்கிற அளவில் அதிகரித்திருக்கிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 86.11 சதவிகிதம் பேர் இணையம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் ஐந்தாண்டுகளில் 95 சதவிகிதம் பேர் இணையம் பயன்படுத்துவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அண்டோரா, அண்டார்க்டிகா, கத்தார் நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் இணையம் பயன்படுத்துவதால் 100 சதவிகிதம் எனும் அளவிலும், வடகொரியாவில் பொதுமக்கள் இணையம் பயன்படுத்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு 0.1 சதவிகிதம் எனும் அளவிலும் இணையப் பயன்பாடு இருந்து வருகிறது. இப்பட்டியலில் இந்தியா, இணையப் பயன்பாட்டில் 53.9 சதவிகிதம் எனும் அளவில் 199 ஆம் இடத்தில் இருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இணையப் பயன்பாட்டிலிருக்கும் மொழிகளில் ஆங்கிலமொழி 59.9 சதவிகிதம் எனும் அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இதில் இந்திய மொழிகள் அனைத்தும் 0.1 சதவிகிதத்திற்கும் குறைவான உள்ளடக்கங்களையேக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழி 0.0043 சதவிகிதம் எனும் அளவில் மிகக் குறைவான உள்ளடக்கங்களையே கொண்டிருக்கிறது. உலக மொழிகளில் 7 நாடுகளில் பேசப்படும் மொழியிலான தமிழ் மொழி 20ஆம் இடத்தில் இருக்கின்ற போதிலும், இணைய உள்ளடக்கத்தில் 40 இடங்கள் பின்தங்கி 60ஆம் இடத்திலிருந்து வருகிறது.
புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் வந்திருக்கும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சேட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ போன்றவை இணையத்திலிருக்கும் உள்ளடக்கங்களை முதன்மைத் தரவுகளாகக் கொண்டிருப்பதால், ஆங்கில மொழியில் தேவையான தகவல்களை முழுமையாகப் பெறமுடிகிறது. ஆனால், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. இவ்வேளையில், இணையத்தில் தமிழ் மொழியிலான உள்ளடக்கங்களை அதிகரிக்க மாணவ- மாணவியர்கள் முன் வரவேண்டும். இணையத்தில் தங்களது தமிழ் மொழியிலான பங்களிப்புகளைச் செய்திட வேண்டும்’ என்றார்.
இப்பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் அமர்வில், உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி அ.சபானா பர்வீன், ‘இணைய அடிமைகள்’ எனும் தலைப்பில் உரை வழங்கிப் பயிற்சியளித்தார். அப்போது அவர், “நமக்குத் தேவையான தகவல்களைப் பெற இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நாம், அங்கு காட்சிப்படுத்தப்படும் தேவையற்ற, தவறான மற்றும் பாலியல் தொடர்பான தளங்களைப் பார்வையிடுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அது நம் மன நலத்தையும், உடல் நலத்தையும் பெருமளவில் பாதிப்பதுடன், நமது வாழ்க்கையின் இலட்சியத்தைத் திசை திருப்பிவிடும்.
இணையத்தில் இடம் பெறும் விளையாட்டுகள், ரீல்ஸ், சார்ட்ஸ் போன்றவை முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும், சிறிது காலத்தில் அது நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு, ஆபத்தில் கொண்டு போய்விட்டுவிடும். சில வேளைகளில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இணையம் பயன்படுத்துவதில் சிறுவர்களும், இளம் வயதினர்களும் கவனமாகச் செயல்பட வேண்டும். குறிப்பாக, இளம் வயதுப் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என்றார்.
இப்பயிற்சிப் பட்டறையின் முதல் அமர்வில் உதவிப்பேராசிரியர் பா.மலர்விழி, இரண்டாம் அமர்வில் உதவிப்பேராசிரியர் முனைவர் செ.தேவி வரவேற்புரையாற்றினர். உதவிப்பேராசிரியர்கள் நிஷா, பெ.அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினர். நிகழ்வில் பங்கேற்ற அனைத்துக் கல்லூரி மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெற்றது. முடிவில், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஈ. சௌமியா நன்றி தெரிவித்தார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.