சங்க இலக்கியக் கூறுகளே தமிழ்த் திரையுலகப் பாடல்களின் கரு – வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்க விழாவில் இலண்டன் எழுத்தாளர் பெருமிதம்
சங்க இலக்கியக் கூறுகளே தமிழ்த் திரையுலகப் பாடல்களின் கரு – வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்க விழாவில் இலண்டன் எழுத்தாளர் பெருமிதம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. வணிகவியல் ஒலி ஒளிக் காட்சியகத்தில் நடைபெற்ற இவ்விழாற்குத் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவா் ஞா.பெஸ்கி தலைமை வகித்தார். இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவன் சு.ஹரிபிரசன்னா வரவேற்புரையாற்றினார்.
இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி ப.ஆனி ரெக்சிட்டா வரவேற்பு நடனமாடினார். முனைவர் ஞா.பெஸ்கி தமது தலைமையுரையில், மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள தளமே தமிழ்ப்பேரவை, இங்கு வழங்கப்படும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக இளங்கலைத் தமிழ் மாணவர்கள் உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“திரையிசையில் சங்கத்தமிழ்” என்னும் மையப்பொருளில் இலண்டன் தமிழ்ச்சங்க மேனாள் தலைவரும் எழுத்தாளருமான திருமிகு ஞான முருகன் சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில், சங்க இலக்கியக் கூறுகளைக் கண்ணதாசன் தொடங்கித் தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியர்கள் வரை எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதைச் சான்றுகளோடு பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள்காட்டி அந்தப் பாடல்கள் தமிழ் திரைப்படத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை வீடியோ காட்சி வழியாக தெளிவுபடுத்தியமை மாணவர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவா் ச.ஆசிக் டோனி நன்றியுரையாற்றினார். இரண்டாம் ஆண்டு மாணவா் கு.ஆா்த்தி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தொடக்க விழா நிகழ்வுகளைத் தமிழ்ப்பேரவைப் பொறுப்பாளா்கள் முனைவா் கு.அந்தோணி ராஜா மற்றும் திரு.ஆ.அடைக்கலராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பணிமுறை இரண்டின் துணைமுதல்வர் திருமதி. பாக்கிய செல்வரதி, தமிழ்த்துறை பணி முறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. சீனிவாசன், பேராசிரியா்கள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள், இளநிலை வகுப்புகள் மாணவா்கள் உள்பட 152 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
– ஆதன்