திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்த தரமான சம்பவம் !
திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்த தரமான சம்பவம் !
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.அய்யாக்கண்ணு. அரை நிர்வாண போராட்டம், மண்டை எலும்பு ஓடுகளுடன் போராட்டம் என நூதன போராட்டங்களுக்கு பெயர் போனவர். மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும், வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களிலும் தவறாமல் பங்கேற்று விவசாயிகளின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்பவர். விளம்பரத்திற்காகவே இதுபோன்ற போராட்டங்களை செய்கிறார் என்பதாக இவரது போராட்டங்கள் குறித்து குறை சொல்பவர்களும் உண்டு.

இந்நிலையில், சமீபத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனை சந்திக்க ஆட்சியர் அலுவலகம் சென்றிருக்கிறார். அதிகாரிகளின் கெடுபிடிகளை கடந்து ஒருவழியாக, ஆட்சியரை சந்தித்து, தான் வந்த நோக்கத்தையும் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசு ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு விசயத்தை தெரிவிக்க, கடுப்பான ஆட்சியர் சரவணன் நேராக கிளம்பி வந்து அய்யாக்கண்ணுவை நோக்கி எழுப்பிய கேள்விகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாய சங்கத்தலைவர் என்ற கெத்தோடு உள்ளே நுழைந்திருக்கிறார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். போலீசார் அவர்களது கடமையை செய்திருக்கிறார்கள். இதனால் கடுப்பான அய்யாக்கண்ணு, ஒருமையில் அந்த பெண் போலீசை திட்டியிருக்கிறார். இதைக்கேட்டுத்தான் கடுப்பான கலெக்டர், “எனது வளாகத்தில், எனது பொறுப்பில் பணியாற்றும் ஊழியரை எவ்வாறு தரக்குறைவாக ஒருமையில் பேசுவீர்கள்? உங்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்பதாக எகிறியிருக்கிறார். ஒருவழியாக, கலெக்டரை சமாதானம் செய்து வெளியேறியிருக்கிறார், அய்யாக்கண்ணு.
விவசாயிகளின் சங்கத் தலைவராக, விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், விவசாய சங்கத்தலைவர் என்ற அகங்காரத்தில் பணியாளர்களை போலீசார்களை அணுகக்கூடாது என்பதாக முணுமுணுத்தார்கள் இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள்.
— சிறப்பு செய்தியாளர் குழு.