அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்தியா Vs பாரத் – உண்மை என்ன ? பேராசிரியர் த.செயராமன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்தியா Vs பாரத் – உண்மை என்ன ? பேராசிரியர் த.செயராமன்

இந்தியாவின் பெயரைப் பாரத் என்று மாற்றுவதில் ஆர்.எஸ்.எஸ், பாஜக, சங்பரிவார அமைப்புகள், மதவெறியர்கள் மற்றும் இது பற்றி எதுவும் புரியாதவர்கள் இப்போது முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்தியா என்ற சொல்லுக்கும் பாரத் என்ற சொல்லுக்கும் வேறுபாடு இல்லையா? இருக்கிறது. இந்தியா என்பது மதச்சார்பற்ற சொல். பாரத் என்பது ஆரிய இனச் சொல்; பார்ப்பன மேலாண்மை நிலவும் தேசம் என்பதைக் குறிக்கும் சொல்; சனாதனம் நிலவும் பகுதி என்பதைக் குறிக்கும் சொல்.

இந்தியா என்ற சொல் ஆங்கிலேயர்கள் கொடுத்தது என்று பித்தலாட்டக்காரர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். “சிந்து” என்ற சொல்லிலிருந்து பிறந்த “இந்து” என்ற சொல் முதலில் சிந்து ஆற்றுக்கும், பிறகு அப்பகுதியைச் சேர்ந்த நிலப்பரப்புக்கும், அதன் பிறகு அங்கு வாழும் மக்களுக்கும், அதன் பிறகு வடஇந்தியப் பகுதிக்கும், அதன் பின்னர் மொத்த இந்தியத் துணைகண்டத்தையும் குறிப்பிட “இந்தியா” என்ற பெயராக மாற்றம் பெற்றுப் புழக்கத்தில் வந்தது. இச்சொல் கிரேக்கர், பாரசீகர் காலத்தில் தொடக்கம் பெற்று, பின்னர் முகலாயர்கள் காலத்தில் வட இந்தியாவைக் குறிக்க “இந்துஸ்தான்” என்று உருமாறி, பின்னர் இந்தியா என்று வடிவம் கொண்டது. அப்போது ஒரு மதத்துக்கும் இந்தச் சொல்லுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சிந்து - இந்து
சிந்து – இந்து

அந்தச் சொல் சமயச் சார்பற்ற சொல். ஒரு நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் மட்டுமே என்பதால் அனைத்துத் தரப்பினரும் அதை ஏற்பதில் தயக்கம் இல்லாமல் இருந்தனர். ஆனால், “பாரத்” அல்லது “பாரதம், என்ற சொல் அப்படி அல்ல. ஆரியர்களுடைய பூர்வக் குடிகளுள் ஒன்று பரதர்கள். தங்களுடைய குடிப் பெருமையைக் காட்டுவதற்காகவும், இந்தியத் துணை கண்டமே தங்களுக்கானது என்று நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்தியக் குடிகளுள் தாங்களே மேலானவர்கள் (ஆரியர்கள்) என்பதைக் காட்டுவதற்காகவும், அறிவு என்றால் அது ரிக் வேதத்தில் இருந்து வந்தது என்றும், இந்தியத் துணைக்கண்டத்தில் விளங்கும் மொழிகள் என்றால் அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றும், நாகரிகம் என்றால் அது ஆரியர்கள் தந்தது என்றும் மார்தட்டுகிற இவர்கள், இவை அனைத்தையும் சேர்த்துக் குறிக்கும் ஒற்றைச் சொல்லாக, தங்கள் பூர்வக்குடி இனப் பெயரான பாரத் என்பதை இந்தத் துணைக்கண்டத்துக்குப் பெயராகச் சூட்டிவிடத் தொடர்ந்து முயற்சி செய்து வந்திருக்கிறார்கள்.

பல்வேறு மொழியினங்கள் வாழும் இந்தியத் துணைக்கண்டத்து மக்கள் சமஸ்கிருதத்திற்கும் ஆரியத்துக்கும் தொடர்பற்றவர்கள். ஆனால் ஆரிய மேலாண்மையை நிறுவிக் கொள்வதன் அடையாளமாகவே “பாரதம்” என்ற சொல்லை இந்த நாட்டுக்குச் சூட்டிவிட ஆரிய, பார்ப்பன, சனாதனிகள், அதன் மூடத்தனமான அடிவருடிகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

ஆரியர்கள் குடியேறி நெருங்கி வாழ்ந்த பகுதிக்கு ஆரியவர்த்தம் என்று பெயர் விளங்கி இருக்கிறது. பாரதவர்ஷா என்றும் பண்பாட்டு அடிப்படையில் பெயர் அளித்திருக்கிறார்கள். எங்கெல்லாம் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திர இழிபிறப்பாளர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்களோ, அதாவது எங்கெல்லாம் சனாதனம் நிலவி வந்திருக்கிறதோ அந்தப் பகுதியை “பாரதம்” என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவையே பாரதம் என்று பெயரிடும்போது, இது ஆரியச் சமூகக் கட்டமைப்பான மேல்-கீழ் வருணப் பிரிவுகள் கொண்ட சனாதனம் நிலவும் பூமி என்று பொருள். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி, இங்கு இருப்பவர்கள் ஒன்று பார்ப்பனராக இருக்கவேண்டும் அல்லது சூத்திரராக இருக்கவேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சத்திரியர்களோ வைசியர்களோ இங்குக் கிடையாது என்பதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

வட இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள் – பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரன் என்ற ஏதாவது ஒரு வருணப் பிரிவைச் சேர்ந்தவராகவும், அந்த வருணத்துக்குள் பல்வேறு சாதியினராகவும் இருப்பார்கள். சனாதனத் தர்மப்படி, வருணங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வும், இழிவும், உரிமை மறுப்பும் காலாகாலமாக இருந்து வந்திருக்கின்றன.

InDia_Bjarat
InDia_Bjarat

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்நிலையில்தான் இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் சட்டம் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிற சமயச் சார்பற்ற சட்டமாக வடிவம் பெற்ற நிலையில், சனாதனத்தை அடையாளப்படுத்தும் சொல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்தியாவிற்கு இந்தியா என்று தலைவர்கள் பெயரிட்டார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட சனாதனவாதிகள் ஓர் இந்து ராஷ்டிரம் படைக்கப்படவேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்திராஷ்டிரம் என்பது பிராமணர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், பெரும்பகுதி மக்கள் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் வாழும் ராஜ்ஜியம் என்று பொருள். அவரவர் வருணத் தகுதியை ஏற்றுக்கொண்டு, அடங்கி, ஒடுங்கி, கீழ்ப்படிந்து, பணிந்து வாழ ஒத்து கொள்கிற அமைப்பு ஆகும்.

இந்திய அரசியல் சட்டம் எழுதப்படும் காலத்தில், கோட்சே -சாவர்க்கர் வகையறாக்கள் இந்திய அரசியலமைப்பு எழுதும் அவைக்குள் ரகளை கட்டினார்கள். பாரதம் என்று பெயரிட வேண்டும் என்று ஓலமிட்டார்கள். இந்து மதத்தின் மேல் தட்டுக்காரர்கள் (15%) சார்பாகப் பேசுகிறவர்கள் சனாதனத்தையும், பாரதம் என்ற சொல்லையும் வற்புறுத்துவார்கள். ஆனால் இந்து மதத்தில் 80% ஆகவுள்ள பிற்படுத்தப்பட்டவர், மிகப் பிற்படுத்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகப் பேசுகிறார்கள் சனாதனத்தை எதிர்ப்பார்கள். அதாவது தாங்கள் சூத்திரர்களாகப் பஞ்சமங்களாக இருக்கமுடியாது என்று எதிர்க்கிறார்கள். இவர்கள் அதன் அடிப்படையிலான பிறவி ஏற்றத்தாழ்வை மறுப்பவர்கள். பாரதம் என்ற சொல்லை இவர்கள் ஏற்கமாட்டார்கள். இதுதான் கடந்த கால வரலாறு.

பிரச்சனையைப் புரிந்துகொள்ளாத பலர் அரசியல் தலைவர்களாகவும் இருக்கிறார்கள்; சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.

“பாரத்” என்ற பெயர் அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது; இந்தியாவின் பெயராக “பாரத்” என்ற பெயரை மத்திய அரசு பயன்படுத்துவதை நாம் எதிர்க்கமுடியாது, இதைத் தவறு என்றும் கூறிவிட முடியாது” என்று சில அரசியல் தலைமைகள் கூறியதாகச் செய்தி வெளியானது. இது உண்மையென்றால், அத்தகையோர் கண்டனத்துக்குரியவர்கள்.

பாரத் என்ற சொல்லை நான் ஆதரிக்கிறேன் என்று ஒருவர் கூறினால் எந்த அடிப்படையில் அப்படிக் கூறுகிறார்? இதைச் சொல்ல இவர் ஏன் எம்.பி.யாக இருக்கவேண்டும்? அல்லது அரசியல் கட்சி தலைவராக இருக்கவேண்டும்? இந்திய அரசியல் சட்டம் எழுதப்படும்போது India that is Bharath என்று எழுதப்பட வேண்டி எழுந்த சூழல் என்ன ? என்பதை இப்போதாவது இவர்கள் படித்தறிய வேண்டும்.

இந்தியாவின் பெயர் “இந்தியா”தான். பாரத் என்ற பெயர் தேவையில்லை என்று விவாதம் அரசியலமைப்பு அவையில் நடந்தது. “பாரத்” அல்லது “ஆரியவர்த்தம்” என்ற பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்த இந்துத்துவவாதிகள் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், இறுதியாக “Bharat that is India” என்று எழுத வற்புறுத்திய நிலையில், அதை இந்திய நாட்டின் பெருந்தலைவர்கள் மறுத்து, India that is Bharat என்று, முதற் பெயராக இந்தியாவையும் இரண்டாம் நிலையில் பாரத் என்ற பெயரையும் வைத்தார்கள். இப்படித்தான் பாரத் என்ற சொல் இந்திய அரசியல் சட்டத்துக்குள் புகுந்தது.

சமயசார்பற்ற ஒரு நாட்டிற்கு “பாரத்” என்பது பொருந்தாப் பெயர் என்பதால் அச்சொல் மறுக்கப்பட்டது. பின்னர், வேறு வழியின்றி ஏற்கப்பட்டு இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டது. இன்று இந்துமதச் சனாதனிகளின் கையில் அதிகாரம் அகப்பட்டு விட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களே எண்ணிக்கையில் அதிகமானவர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி “இந்தியா” என்ற பெயரை நீக்கிவிட்டு “பாரத்” என்று சனாதனிகள் வைக்க முயற்சிக்கிறார்கள்.

இப்போது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் சனாதனவாதிகள் மகிழ்கிறார்கள். இந்தியாவின் பெயரையே “பாரத்” என்று மாற்றுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துவது மதவாதத்தை மறுக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடமை.

இதைத்தடுத்து நிறுத்த வேண்டிய கடமை கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பது அதிர்ச்சியை அளிக்கிறது இந்தச் சொல்லின் முக்கியத்துவம் பற்றிய எந்தப் புரிதலுமே இல்லாமல் இருக்கிறார்களே என்ற கவலை எழுகிறது.

குறைந்தபட்சம், கடந்த காலத்தில் பாரதம் என்ற சொல்லைப் பல தலைவர்கள் ஏன் எதிர்த்தார்கள் என்பதைக்கூட அறியாத மனிதர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது அவமானகரமானது. பாரதிய ஜனதா கட்சியின் முகாம் மட்டுமே பாரத் என்ற சொல்லை வரவேற்பதாகக் கருதி விட வேண்டாம். I.N.D.I.A என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கிற எதிர்க்கட்சிகளிலும்கூடப் பல இந்துத்துவப் பார்வை கொண்டவையாக இருக்கின்றன.

கடந்த காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின்போதும், இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் நாம் என்னென்ன உரிமைகளையெல்லாம் சம்பாதித்தோமோ, அவ்வளவையும் ஒட்டுமொத்தமாக இழந்துவிடக்கூடிய அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

(நெறியாளர்,தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.