இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் ! அழகான தருணம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கோயம்புத்தூரைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இன்று இந்திய தடகள வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ், இந்திய தடகளத்தின் முன்னாள் நட்சத்திர வீராங்கனை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகள் பழமையான தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55.42 விநாடிகளில் நிறைவு செய்து இந்திய தேசிய சாதனையைப் படைத்திருந்தார். அந்த சாதனை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

2023 ஹாங்சூ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா ராம்ராஜ் 55.42 விநாடிகளில் ஓடி, பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அதே சாதனையை அவர் முறியடித்திருக்கிறார்.

இந்த முறை 54.75 விநாடிகளில் இலக்கை கடந்ததன் மூலம் பழைய சாதனையை 0.67 விநாடிகள் முன்னேறி புதிய இந்திய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். அதோடு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

வித்யா ராம்ராஜ்
வித்யா ராம்ராஜ்

சாதனையின் பின்னால் ஒரு குடும்பத்தின் உழைப்பு

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வித்யா ராம்ராஜ் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் மிகவும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தது. அவரது தந்தை லாரி ஓட்டுநராக பணியாற்றியவர்.

வித்யாவும் அவரது இரட்டைச் சகோதரி நித்யா ராம்ராஜும் சிறு வயதிலேயே தடகளத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் அவர்களின் உடல்திறனை கவனித்த உடற்கல்வி ஆசிரியர், இருவரையும் விளையாட்டில் ஈடுபடுத்துமாறு அவர்களின் தாயாரிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் அவர்களின் தாயார் இருவரையும் ஈரோடு விளையாட்டு விடுதியில் சேர்த்தார். குடும்பத்தால் விளையாட்டுச் செலவுகளை முழுமையாகச் சமாளிக்க முடியாத சூழலில், அந்த விளையாட்டு விடுதி அவர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.

வித்யாவின் இரட்டைச் சகோதரி நித்யாவும் ஒரு தடகள வீராங்கனை. ஒரு கட்டத்தில் வித்யாவின் பயிற்சி மற்றும் போட்டிச் செலவுகளுக்கும் நித்யா தனது வருமானத்தின் மூலம் உதவி செய்துள்ளார். பின்னர் வித்யா இந்திய ரயில்வேயில் பணியில் சேர்ந்தார்.

இன்று அந்த குடும்பத்தின் பல வருட உழைப்புக்கும் காத்திருப்புக்கும் கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் — இந்தியாவின் நீண்ட கால தேசிய சாதனைகளில் ஒன்றை முறியடித்திருப்பது.

பி.டி. உஷா உருவாக்கிய சாதனையை வித்யா ராம்ராஜ் இன்று முறியடித்திருப்பது, ஒரு தலைமுறையின் சாதனையை அடுத்த தலைமுறை முன்னெடுத்துச் செல்லும் அழகான தருணம்.

—   கார்த்திக்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.