பாட்டியாலா மகாராஜா தலைமையில் பல்வங்கர் பலூ உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்ற கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சென்று, அங்குள்ள சிறந்த ஆட்டக்காரர்களிடம் விளையாடக் கற்றுக்கொண்ட பின், 21 ஆண்டுகள் கழித்துதான் முழுமையான ஆட்டத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி உருவானது. ’ஆல் இண்டியா‘ என்பதுதான் இந்திய அணியின் பெயர்.
1932 ஆம் ஆண்டு போர்பந்தர் மகாராஜா தலைமையில் சென்ற இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முழுமையான உறுப்பினர் என்ற தகுதியைப் பெற்றிருந்தது. அதனால், இங்கிலாந்தில் அது டெஸ்ட் மேட்ச் விளையாடும் வாய்ப்பையும் பெற்றது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்தான் இந்திய அணி பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. ஆல் இண்டியா அணி போர்பந்தர் மகாராஜா தலைமையில் இங்கிலாந்துக்கு சென்றிருந்தாலும், டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் சி.கே.நாயுடு. (கர்னல் கோட்டாரி கனகய்யா நாயுடு என்பதன் சுருக்கம்தான் சி.கே.நாயுடு) டெஸ்ட் மேட்ச்சுக்கு இந்திய அணி தகுதியுடையது என ஐ.சி.சி. தேர்ந்தெடுக்க காரணமே, நாயுடு ஆடிய மேட்ச்கள்தான்.
1926-27 ஆம் ஆண்டுகளில் பம்பாய் வட்டாரத்திற்கான இந்து அணியில் ஆடிக்கொண்டிருந்தார் நாயுடு. அப்போது இந்தியாவுக்கு விளையாட வந்த இங்கிலாந்தின் மேர்லிபோன் கிரிக்கெட் கிளப்புடன் நடந்த ஆட்டத்தில் களமிறங்கிய 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட வலது கைது ஆட்டக்காரரான சி.கே.நாயுடு, 116 நிமிடங்களில் 153 ரன்களை விளாசினார். தொழில்முறை ஆட்டக்காரர்களான இங்கிலாந்து கிளப் டீமிற்கு எதிராக நாயுடு போட்ட போடு, இந்தியாவை டெஸ்ட் போட்டிக்குத் தகுதிப்படுத்தியது.
போர்பந்தர் மகாராஜா தலைமையில் 1932ல் இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணி, முதல் தரக் கிரிக்கெட் போட்டிகள் பலவற்றில் விளையாடியது. லார்ட்ஸ் மைதானத்தில் சி.கே.நாயுடு தலைமையில் நடந்த டெஸ்ட் போட்டிதான், அந்தப் பயணத்தின் ஒரே டெஸ்ட் போட்டி. இந்திய அணியில் 7 இந்துக்கள், 2 சீக்கியர்கள், 4 முஸ்லிம்கள், 4 பார்ஸிகள் இடம்பெற்றிருந்தனர். இந்தியாவில் மகாத்மா காந்தி முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டிருந்ததால், அணிக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பெற்ற விஜய் மர்ச்சென்ட் உள்ளிட்ட ஆட்டக்காரர்கள் பங்கேற்கவில்லை.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிதான் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது. எந்தவொரு இங்கிலாந்து ஆட்டக்காரரும் செஞ்சுரி போட முடியாத வகையில் இந்திய அணியின் பந்து வீச்சு இருந்ததை இங்கிலாந்து பயிற்சியாளர்களும் பார்வையாளர்களும் ஆச்சரியத்துடன் ரசித்தனர்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட கூடுதல் ரன்கள் பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 275 என்ற நிலையில் டிக்ளேர் செய்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியால் இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. 187 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது. 158 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 21 ஆண்டுகளுக்கு முன் பாட்டியாலா மகாராஜா தலைமையில் வந்த அணியைவிட, சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி, சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை நிலைநாட்டும் முயற்சியைத் தொடர்ந்தது.
இந்தப் பயணத்தின் போது, டெஸ்ட் மேட்ச் மட்டுமின்றி, முதல் தரக் கிரிக்கெட் போட்டிகள் பலவும் நடந்தன. கவுன்ட்டி மேட்ச் எனப்படும் பல்வேறு அணிகளுடனான போட்டிகளும் இங்கிலாந்தில் நடைபெற்றன. அங்கிருந்த அத்தனை கவுண்ட்டி அணிகளுடனும் ஆல் இண்டியா அணி விளையாடியது. பல போட்டிகளில் வென்றது. கிரிக்கெட் கிளப்கள் பலவும் ஆல் இண்டியா அணியுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டின.
ஆல் இண்டியா அணியினர் இங்கிலாந்து டூரில் அந்த நாட்டு கவுன்ட்டி அணிகளுக்காக விளையாடிய இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது சுவாரஸியமாகும். ஒருவர் சஸெக்ஸ் அணிக்காக ஆடிய துலீப் சின்ஜி. மற்றொருவர், வெர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய இஃப்திகார் அலி பட்டோடி.
பட்டோடி சமஸ்தானத்தின் நவாபான இஃப்திகார் அலி பட்டோடி, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு அணிக்காக விளையாடியவர். பின்னர், இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் மேட்ச்சில் விளையாடினார். 6 அடி உயரம் கொண்ட வலது கை ஆட்டக்காரரான பட்டோடி, 1946ல் இந்திய அணியின் கேப்டனாக இருந்து இங்கிலாந்துக்கு சென்று அந்த அணிக்கு எதிராக ஆடியதும் விளையாட்டு உலகின் ஆச்சரியங்களில் ஒன்று.

உலக அளவில் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள்தான் இரு நாடுகளின் சார்பில் விளையாடியிருக்கிறார்கள். இதில் இங்கிலாந்து அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிய ஒரே ஆட்டக்காரர் இஃப்திகார் அலி பட்டோடி மட்டுமே. இவருடைய மகன், பின்னாளில் இந்திய அணியில் புகழ் பெற்று விளங்கிய மன்சூர் அலிகான் பட்டோடி ஆவார். அவரும் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்.
1932ல் தனது முதல் டெஸ்ட் மேட்ச்சை இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய இந்தியா, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியைப் பெறுவதற்கு 20 ஆண்டுகளும், 24 டெஸ்ட் மேட்ச்களும் தேவைப்பட்டன.
இந்தியாவின் முதல் டெஸ்ட் மேட்ச் வெற்றி எப்போது எங்கே சாத்தியமானது?
(ஆட்டம் தொடரும்)
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.