இந்தியாவின் முதல் விமானம் எங்கிருந்து புறப்பட்டது தெரியுமா?
தற்போது நாம் இந்தியாவில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் என சேர்த்து மொத்தம் 147 விமான நிலையங்கள் உள்ளது. இதில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான விமானங்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை நம்மில் யாரேனும் இந்தியாவின் முதல் விமானம் எங்கிருந்து புறப்பட்டது, அதை ஓட்டியவர் யார் என்று யோசித்ததுண்டா? அப்படி இந்தியாவில் பறந்த முதல் விமானம் எங்கிருந்து புறப்பட்டது, அதை யார் ஓட்டியது என்று பார்ப்போம்.
இந்தியாவில் இருந்து பறந்த முதல் விமானம் ஹம்பர்ட் பைபிளேன்(Humbert biplane) ஆகும். இந்தியாவிற்கு வந்த முதல் விமானமும் இதுவே. இது பிப்ரவரி 18, 1911 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்து, சுமார் 9.6 கிமீ தூரத்தை 13 நிமிடங்கள் பயணித்து அருகில் உள்ள நைனியில் தரையிறங்கியது. தபால் துறையினரால் செயல்படுத்தப்பட்டு 6,500 கடிதங்களை சுமந்து சென்ற இந்த விமானத்தை ஹென்றி பேக்வெட்(Henri Pequet) என்ற விமானி ஓட்டினார்.
மேலும் இது உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் விமானம் என்ற உலகளவிலான சாதனையை படைத்திருந்தது. இந்த விமானத்தை 100க்கும் மேற்பட்ட பாகங்களாக கடல் வழியாக கப்பல் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்து, இதனை பல பிரிட்டிஷ் பொறியாளர்கள் பல நாட்களாக பணியாற்றி ஒன்று சேர்த்தனர்.
மேலும் அப்போதைய காலகட்டத்தில் முதல் விமானம் பறப்பதை காண லட்சக்கணக்கான மக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்