ஆக்கிரமிப்பாளர்களால் அவமதிப்பிற்குள்ளாக்கப்பட்ட தனி தாசில்தார் ! நடந்தது என்ன?
ஆக்கிரமிப்பாளர்களால் அவமதிப்பிற்குள்ளாக்கப்பட்ட தனி தாசில்தார் ! நடந்தது என்ன? திருச்சி மாவட்டம் துறையூரில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில், அறிவிப்பு பலகை வைத்ததற்காக சிறப்பு தாசில்தார் பிரகாசத்தை அவமரியாதைக்குள்ளாக்கியிருக்கின்றனர் ஆக்கிரமிப்பாளர்கள்.
துறையூரிலிருந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது நல்ல காவத்தாயி அம்மன் கோவில். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலின் கட்டுப்பாட்டில், 12 ஏக்கர் 98 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த இடத்தை சிலர் முறைகேடாக பத்திரம் பதிவு செய்து வைத்துக் கொண்டு வணிக வளாகங்களையும் கட்டி ஆக்கிரமித்து வருவதாக புகார் எழுந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அவ்விடத்தில் துறையூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இப்புகார் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் சிறப்பு தாசில்தார் பிரகாசம், இந்து அறநிலையத்துறையின் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சித்துள்ளார். தாசில்தாரின் அறிவுரையின்படி, அக்கோயிலின் செயல் அலுவலர் வேணுகோபால் நிறுவியிருந்த அறிவிப்புப் பலகையை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றியுள்ளனர். இதனையறிந்து, நேரில் விசாரணையை மேற்கொள்வதற்காக வந்திருந்த தாசில்தார் பிரகாசத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து, அவரை அவமானப்படுத்தியுள்ளனர்.
வீடியோ லிங்
துறையூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் குமார் (எ) சிவக்குமார் என்பவரும், சர்ச்சைக்குரிய கோயில் நிலத்தில் கட்டிடம் கட்டியிருப்பதாக சொல்கிறார்கள். அதற்குரிய ஆவணங்கள் இருக்கிறது என்று தாசில்தார் பிரகாசத்திடம் மல்லுக்கட்டியிருக்கிறார், அரசு மருத்துவரான குமார் (எ) சிவக்குமார்.
ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லியோ, இல்லை, ஆக்கிரமிப்பு இடத்தை அளக்கவோகூட அவர் வரவில்லை. இதுவரை ஆக்கிரமித்ததே வழக்காகி கிடக்கிறது. இனியும் புதியதாக யாரும் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்ற நோக்கில் வெறுமனே அறிவிப்பு பலகையைத்தான் வைத்திருந்தார்கள். அதைக்கூட வைக்கக்கூடாது என்று தடுப்பதற்கு என்ன இருக்கிறது? எனக் கேள்வி எழுப்புகிறார்கள், பொதுமக்கள் சிலர்.
என்ன நடந்தது என்ற கேள்வியோடு, சம்பந்தபட்ட தாசில்தார் பிரகாசத்தை அணுகினோம். ”நான் இந்து சமய அறநிலையத்துறையின் தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறேன். துறையூர் வெங்கேடேசபுரம் கிராம சர்வே எண்: 209/1,2,3, இல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லகாவத்தாயி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் 96 சென்ட் இடத்தை, சுமார் 20-க்கும் அதிகமானோர் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது.
ஏற்கெனவே, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில், புதியதாக சிலரும் மேற்படி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருவதாகவும் புகார்கள் வரத்தொடங்கின. மேலும், திருக்கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை நான் தடுக்க தவறிவிட்டேன் என்றும் எனக்கு எதிராகவும் சிலர் புகார் தெரிவித்து வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பியிருக்கிறார்கள்.
நீதிமன்றத்திலிருந்தும் உத்தரவுகள் வந்தது. இந்நிலையில்தான், அத்திருக்கோயிலின் செயல் அலுவலரை அணுகி முதல்கட்டமாக, ஏற்கெனவே ஆக்கிரமித்து பயன்படுத்தி வருபவர்களை தொந்தரவு செய்யாமல் அதேசமயம் புதியதாக எவரேனும் ஆக்கிரமிப்பு செய்துவிடாதபடி தடுக்கும்பொருட்டு அறிவிப்பு பலகை ஒன்றை நிறுவ தீர்மானித்தோம்.
அதன்படி, ஆக-30 ஆம் தேதியன்று துறையூர் போலீசார் உதவியுடன் செயல் அலுவலர் அறிவிப்பு பலகையை நிறுவியிருந்தார். அதனை ஆக்கிரமிப்பாளர்களில் யாரோ சிலர் அகற்றியிருக்கின்றனர். இதனையடுத்தே, அவ்விடத்தை தள ஆய்வு செய்வதற்காக ஆக-31 அன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தேன்.
அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவினேன். அப்போது அங்கு வந்த டாக்டர் சீனிவாசன் என்பவரது மகன் குமார் எ சிவக்குமார், ராமநாதன் மகன் பத்ரிநாராயணன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்டு சிலர் என்னை அவமரியாதை செய்தனர். அரசு பணி செய்ய விடாமல் தடுத்தனர். குறிப்பாக, டாக்டர் குமார் என்பவர், தாசில்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அடையாள அட்டையைக் காட்டு என்றெல்லாம் என்னை அத்தனை பேர் மத்தியில் அவமரியாதையாக நடத்தினார். இதனைதொடர்ந்து, நடந்த சம்பவத்தை புகாராக எழுதிக் கொண்டு, துறையூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்க சென்றிருந்தேன்.
அங்கே 6.30 மணி முதல் 8.00 மணி வரையில் காத்திருந்தும் எனது புகாரை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த போலீசுகாரர் ஒருவர், “அங்கிருந்து லா – அண்ட் ஆர்டர் பிரச்சினையை உருவாக்குவதற்கே வந்திருக்கியா? உனக்கு இதே வேலையா போச்சு” என்று என்னை ஒருமையில் பேசினார்.” இதற்குமேல் இங்கு காத்திருப்பதில் பலன் இல்லை என்றுதான், உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு, அவர்களின் அறிவுறுத்தலின்படி அங்கிருந்து கிளம்பிவிட்டேன். பிறகு, ஆன்லைனில் புகாரை பதிவு செய்தேன்.” என்கிறார்.
புகாரை வாங்காமல் காலம் தாழ்த்தியதான குற்றச்சாட்டு குறித்து துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். “சம்பவத்தன்று நான் சென்னையில் இருந்தேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. பொதுவாக இதுபோன்று சென்சிட்டிவான விவகாரங்களை அணுகும்போது, கண்டிப்பாக எங்களுக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். அல்லது, வருவாய்த்துறை அதிகாரிகளுக்காவது தகவல் சொல்லியிருக்க வேண்டும். அவர் யாருக்கும் தகவல் சொன்னதாக தெரியவில்லை. அடுத்து, அந்தக் குறிப்பிட்ட இடம் ஆக்கிரமிப்பு சர்ச்சை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது, இவர் எது செய்தாலும் அது அந்த இடத்தை பயன்படுத்தி வருபவர்களுக்கு அச்சத்தைதான் ஏற்படுத்தும். அவர்களும் பட்டா எல்லாம் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கு இந்த தாசில்தாருக்கு அதிகாரம் இருக்கிறதா? அதற்குட்பட்டுதான் அந்த அறிவிப்பு பலகையை நிறுவினாரா? என்பதையெல்லாம் நாங்கள் விசாரிக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எங்கள் மீது அவர் குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை. அவரது ஆன்லைன் புகாரை பெற்று விசாரித்து வருகிறோம்.” என்கிறார், அவர்.
”திருச்சி, பெரம்பலூர் இரண்டு மாவட்டங்களுக்கும் நான்தான் பொறுப்பு அதிகாரி. எங்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. இதே இடத்தில், வக்கீல் ஒருவர் தற்போது கட்டிடம் கட்டி வருகிறார். அவர் முதலில் என்னிடம் ஆட்சேபனை தெரிவித்தார். நீங்கள் இடத்தை ஆக்கிரமித்து இருப்பதையோ, அதில் கட்டிடடம் கட்டி வருவதையோ நான் தடுத்து நிறுத்தவில்லை.
அது நீதிமன்றத்தில் வழக்கில் இருந்து வருகிறது. இனி யாரும் ஆக்கிரமிப்பு செய்துவிடாதபடி தடுக்க வேண்டும் என்றுதான் நான் போர்டு வைக்க போகிறேன். இதனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறதோ, அப்போது பார்த்துக் கொள்ளலாம். என்று தெளிவாக சொல்லிவிட்டேன்.
அதன்பிறகு அவரும் சரி என்று சொல்லிவிட்டார். டாக்டர் குமார் தான் ஆட்களை வரவழைத்து தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்திவிட்டார். அடுத்து, போர்டு வைக்கும்போதே போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டோம். இன்று நான் வருகிறேன் என்ற தகவலையும் செயல் அதிகாரி வழியே போலீசுக்கு சொல்ல சொல்லியிருந்தேன்.
அவர் சொல்லாமல் விட்டிருக்கிறார். அடுத்து இரண்டு மாவட்டத்துக்கு நான் பொறுப்பு என்பதால், தினமும் பல இடங்களுக்கு செல்வதாகத்தான் இருக்கும். எல்லாமே போலீசிடம் சொல்லிக்கொண்டு போய்வர வாய்ப்பில்லை. இரண்டு மணிநேரமாக போலீஸ் ஸ்டேஷனில் என்னுடைய புகாரை வாங்காமல் என்னை ஏன் காத்திருக்க வைத்தார்கள் என்பதுதான் எனக்கும் புரியவில்லை.” என்கிறார், தாசில்தார் பிரகாசம்.
– ஆதிரன்.
வீடியோ லிங்