வீலிங் கெத்து காட்டிய தம்பியை தட்டி தூக்கிய திருச்சி போலீசார் !
வீலிங் கெத்து காட்டிய தம்பியை தட்டி தூக்கிய திருச்சி போலீசார் ! திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மாத்தூர் பகுதியில் இளைஞர்கள் சிலர் ரீல்ஸ்-க்காக டூவீலரில் வீலிங் செய்துவருவதாக திருச்சி எஸ்.பி.யின் சிறப்பு உதவி எண் 9487464651 ணுக்கு தகவல் பறந்திருக்கிறது.
இதனை கண்காணித்து கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரிடம், குண்டூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த குமரகுரு என்பவரது மகன் சச்சின் வகையாக சிக்கியிருக்கிறார். வெறும் 18 வயதேயான சச்சின், “மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து, அலட்சியமாக ஓட்டிச் சென்றும், அதனை வீடியோ காட்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.” என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். ”இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வானங்கள் பறிமுதல் செய்யப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, ”இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி.யின் சிறப்பு உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும்” திருச்சி மாவட்ட போலீசார் தரப்பில் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில், ரீல்ஸ்-போடுவதற்காக செல்போன் வாங்க வேண்டுமென்று, மூதாட்டி ஒருவரை தாக்கிவிட்டு அவரிடமிருந்து நகையை பறித்தார் என்றக் குற்றச்சாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இளங்கன்று பயமறியாது என்பதோடு, ரீல்ஸ்-க்கா எதையும் செய்யத்துணிந்த இளசுகளின் பட்டாளமாக மாறிவருகிறது.
”போலீசாரின் நடவடிக்கை ஒருபக்கம் இருக்க; ஆடம்பரமான பைக்குகளை வாங்கிக்கொடுத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வழக்கில் சிக்காத அளவுக்கு அறிவுரை வழங்கி அவர்களை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது, பெற்றோர்களின் பொறுப்பு.” என்று எச்சரிக்கிறார்கள், போலீசார் தரப்பில்.
– அங்குசம் செய்திப்பிரிவு.