ரூ.5 கோடி காப்பீட்டு தொகைக்காக தனது 2 கால்களை வெட்டிய நபர்!
ஒரு திரைப்படத்தில் காப்பீட்டு தொகை பெறுவதற்காக கவுண்டமணி கொடுத்த யோசனையில் உயிரிழந்தது போல செந்தில் நாடகமாடுவார். பின் காப்பீட்டு அதிகாரிகள் வந்து, செந்தில் உயிரிழந்தது உண்மைதானா என சோதனை செய்ய அவரின் உடலை அறுக்கப் போகிறோம் என்றதும் ஆளை விடுங்கடா சாமி. என்று ஓட்டம் எடுப்பார் செந்தில். படத்தில் நகைச்சுவைக்காக இந்தக் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். சினிமாவில் காமெடிக்காக வைக்கப்பட்ட காட்சியை போல உண்மையாகவே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. காப்பீட்டு தொகை பெறுவதற்கு பிரிட்டனை சேர்ந்த ஒருவர் தனது இரண்டு கால்களையும் துண்டித்திருக்கிறார்.
பிரிட்டனில் ட்ரூரோவைச் சேர்ந்தவர் 49 வயதான நீல் ஹாப்பர். வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரான இவர் ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நீல் ஹாப்பர் தனது கால்களை இழந்ததாக கூறி, 5 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இதில் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம் நீல் ஹாப்பர் என்ற அந்த மருத்துவர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன. காப்பீட்டு நிறுவனம் அளித்த புகாரில் தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக தெரிவித்தது.
இந்த புகாரின் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் இவரது நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் ரத்த நாள பிரச்சினை இருப்பதாக கூறி உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை அகற்றுவது எப்படி என்பது குறித்து ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2020 வரை, வலைத்தளத்திலிருந்து அவர் வீடியோக்களை பீரிமியம் முறையில் வாங்கியதாகவும், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு மருத்துவரின் உதவியுடன் இதனை எந்த பிரச்சினையும் ஏற்படாமல் செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
— மு.குபேரன்.