விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற பட்டாசு வியாபாரியிடம் இருந்து ரூ.4.65 கோடி பெற்று மோசடி செய்ததாக திருச்சி, எல்பின் நிறுவன உரிமையாளர் ராஜா மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து ராஜா கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்த மிதுன் சமேஷ் என்ற நபர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அம்மனுவில், “திருச்சியின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான elfine.com private limited என்கிற நிறுவனம், மிதுன் மற்றும் அவருடைய நண்பர்கள் உறவினர்கள் என்று 11 பேரிடம் இருந்து ரூ.2.18 கோடியை முதலீடாக பெற்றுள்ளது என்றும், அதில் சில திட்டங்களுக்கான பணம் இரட்டிப்பாகவும், சில மூன்று மடங்காகவும் தருவதாக அந்நிறுவனம் கூறியது. அதை நம்பி செய்யப்பட்ட முதலீடுகளின் அடிப்படையில் நிறுவனம் திருப்பத் தர வேண்டிய ரூ.4.68 கோடியை திருப்பித் தராமல் தற்போது மோசடி செய்வதாகவும், இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து புகார் அளித்த மிதுனை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, “இன்ஜினியரிங் படித்த என்னையே ஆசை வார்த்தைகளை கூறியும், மூளைச்சலவை செய்தும், யூ-டியூபில் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜாவைப் பற்றி பிரம்மாண்ட பாட்டுகளை போட்டும் கவர்ச்சியான வார்த்தைகளை கூறியும் ஏமாற்றிவிட்டனர்.
மிகப் பெரிய ஹோட்டல்களில், பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் திரைத்துறை பிரபலங்களான டி.ஆர், விமல், மனோபாலா, ஈரோடு மகேஷ் மற்றும் கவிஞர் ப.விஜய் போன்ற எண்ணற்ற திரை பிரபலங்களின் பேச்ச வைத்து எங்களை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துவிட்டார்கள். குறிப்பாக ப.விஜயினுடைய பேச்சு தான் எல்ஃபின் நிறுவனத்தை நாங்கள் முழுமையாக நம்ப காரணம்.
நான் பணம் கேட்டு எல்ஃபின் அலுவலகத்திற்கு பல முறை சென்று வந்தேன். கடந்த 15ம் தேதி அலுவலம் சென்ற போது அங்கிருந்த ராஜா, ரமேஷ், பால்ராஜ், சாகுல்ஹமீது, அறிவுமணி, பாபு, இளங்கோவன் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் என்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர்.
பணம் தராவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று நான் கூறிய போது ராஜா, ரமேஷ் என இருவரும் “இவனை இங்கே கொன்னு போடுங்கடா” என கூறினார்கள். இதையடுத்து சிலர் என்னை தாக்க, நான் அங்கிருந்து ஓடி தப்பினேன்” என்றார் மிதுன்.
எல்ஃபின் நிறுவனத்திற்கு, பணத்தை ரொக்கமாகவும், NEFT, RTGS மூலமாகவும் செலுத்தி இருப்பதாக ஆதாரத்தோடு குறிப்பிடுகிறார் மிதுன்.
சதுரங்க வேட்டையில் வரும் கதாநாயகனைப் போல விலிவி என்று சொல்லி ஏமாற்றி விட்டார் என்று பல்வேறு மோசடி புகார்கள் எல்பின் ராஜா மீது ஒன்றன் பின் ஒன்றாக பதியப்பட்டு வருகின்றன. இது குறித்து நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது,
“எல்ஃபின் நிறுவனம் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தியதில் ராஜா, ரமேஷ் என்ற எல்ஃபின் நிறுவன உரிமையாளர்கள் பெயரில் எவ்வித சொத்தும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘மக்கள் அரசன் பிக்சர்ஸ்’ என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பிரபல பாடல் ஆசிரியரும், இயக்குனருமான ப.விஜய் இயக்கத்தில் ‘மேதாவி’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக பல கோடி ரூபாயை ப.விஜய்யிடம் எல்ஃபின் நிறுவனம் கொடுத்துள்ளதாம்.
‘திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு நிறுவனத்தை நடத்தி, அந்நிறுவனம் திவாலானதாக கணக்கு காட்டிவிட்டு தலைமறைவானவர் தான் எல்பின் ராஜா’ என்று அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். எல்பின் ராஜாவிடம் பணம் கேட்பவர்களை அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக ராஜாவின் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது.
எல்பின் ராஜா மீது பதியப்படும் புகார்களை காவல்துறை விரைந்து விசாரித்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஏமாந்த முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு..!
பா.ஜ.க., வி.சி.க. கட்சிகளில்
இணைத்துக் கொண்ட எல்பின் ராஜா, ரமேஷ்
எல்பின் ராஜா தம்பி ரமேஷ் விடுதலை சிறுத்தை கட்சியில் பொறுப்பில் இருந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் பறக்கும் படையினர் அரியலூர் மாவட்டத்தில் வைத்து ராஜாவின் காரில் இருந்து ரூ.1,99 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது பிடிபட்ட அந்தப் பணம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் தேர்தல் செலவுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக பேசப்பட்டது.
அறம் மக்கள் நல சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வரும் எல்பின் ராஜா, சங்கத்தில் உறுப்பினராக சேர ரூ.1,350 வசூல் செய்துள்ளார். சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் தனது சங்கத்தில் இருப்பதாகவும், அனைவரும் என்னுடன் பா.ஜ.கவில் இணைவார்கள் என்று கூறி தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். ‘பணமோசடி புகாரில் சிக்கியவரை கட்சியில் எப்படி சேர்த்தீர்கள்’ என்று ஆரம்பத்தில் பா.ஜ.க. வட்டாரத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சென்ற ஆண்டு கொரோனா முதல் அலையின் போது தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வைரலான எல்பின் ராஜா ஆடியோ
காவல்நிலையத்தில் பலரும் புகார் தெரிவித்து வரும் நிலையில், எல்ஃபின் ராஜா பேசுவதாக வாட்ஸ்-அப் ஆடியோ பதிவுகள் சமூகவலை தளங்களில் உலா வருகின்றன. அதில், “என் மீது நம்பிக்கை வைத்து இருக்கக்கூடிய அனைவருக்கும் நான் கண்டிப்பாக செய்வேன். என்னிடம் உலக அளவிலான வணிகத்திற்கான திட்டம் உள்ளது” என்று ஒரு ஆடியோவிலும். “சிலர் தவறான தகவல்களை பரப்பு கின்றனர். யாரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம். நான் பொருளாதாரப் புரட்சி பண்ணப் போகிறேன், அதற்கான திட்டமெல்லாம் என்னிடம் இருக்கிறது” என்று மற்றொரு ஆடியோவிலும் கூறியுள்ளார்.
எல்பின் வலையில் வீழ்ந்த பெண்ணின் அதிரடி..!
கடந்த ஜூன் 24ம் தேதி இரவு திருச்சி, கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் பெண் ஒருவர், “எல்பின் நிறுவனத்தில் நான் 3 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறேன். பணத்தை திருப்பித் தராமல் எல்பின் ராஜா ஏமாற்றி வருகிறார். அவர் இங்கு வந்து எனக்கு பணம் தரும் வரை இங்கேயே காத்திருப்பேன்” என்று கூறி சாலையில் தனது கார் டிரைவருடன் அமர்ந்து தர்ணா செய்துள்ளார். அவர் யார் என்பதை விசாரித்த காவல்துறையினர் அதிர்ந்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் ஆடை அணிந்து, ஏட்டு முதல் எஸ்.பி வரை ஏராளமான காவல்துறை அதிகாரிகளை தனது வலையில் வீழ்த்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. அந்த ஜெயலட்சுமி தான் இந்த பெண் என்பதை அறிந்த காவல்துறையினர் பெரும் பதட்டமாகி, “நாளை காலை வாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” எனக் கூறி சமாதானப்படுத்தி ஒரு வழியாக அவரை அனுப்பி வைத்த பின்னரே பெருமூச்சு விட்டனர். என்றாலும் தினமும் எல்பின் அலுவலகம் சென்று பணம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜெயலெட்சுமியின் இந்த போராட்டத்தில் எல்பின் மோசடி செய்தி தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
– ஜித்தன், மெய்யறிவன்