கிரிக்கெட் இளவரசனை மணந்த சினிமா இளவரசி ! – IPLக்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-22
IPLக்கு முன்பு(ம்) கிாிக்கெட் இருந்தது-22
அதிகாரப்பூர்வமாக டெஸ்ட் மேட்ச் விளையாடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை சென்னை சேப்பாக்கம் எம்.சி.சி. மைதானத்தில் பெற்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்தன. சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கியது. முதல் டெஸ்ட் வெற்றி சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக பெற்றது போல, முதல் டெஸ்ட் தொடர் வெற்றி என்பது இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிராகக் கிடைத்தது. பாகிஸ்தானை விளையாட்டில் ஜெயித்தால் யுத்தத்தில் ஜெயிப்பது போன்ற உணர்வு கிரிக்கெட் ரசிகர்களின் ரத்தத்திலேயே ஊறியிருந்ததால், இந்த வெற்றியும் பெரியளவில் கொண்டாடப்பட்டது.

1950களின் பிற்பகுதியிலிருந்து 1970களின் தொடக்கம் வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணி பலவித முன்னேற்றங்களை அடைந்து வந்தது. ராஜ வம்சத்தவர்களும் தொழிலதிபர்களின் வாரிசுகளும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர். நவாப் மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி 1960களில் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடியதுடன், வெற்றி-தோல்வியைக் கடந்து ஆட்டத்தின் நேர்த்தியில் வெகுவாக முன்னேறியது. இந்தியாவின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேனாக பட்டோடி இருந்தார். அப்போது கிரிக்கெட்டிற்கு இந்தளவு ரசிகர்கள் கிடையாது. அதிலும் பெண் ரசிகர்கள் மிகவும் குறைவு.
டி.வி.யில் லைவ் ரிலே பார்க்க முடியாது. ரேடியோ கமெண்ட்ரி மூலமாகத்தான் ஸ்கோர் தெரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால், அடுத்த நாள் காலையில் வரும் நியூஸ் பேப்பர்களில் வெளியாகும் விளையாட்டுச் செய்திகளில் நேற்றைய ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். அதிலும், தமிழ் பத்திரிகைகளில் விளையாட்டுக்கான இடம் குறைவுதான். ஹிந்து போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் கிரிக்கெட்டுக்கு ஸ்பெஷல் ரிப்போர்ட்டர், ஃபோட்டோகிராபர் ஆகியோரை அனுப்பி படம் எடுத்து செய்தி வெளியிடுவது வழக்கம்.
அப்போதைய சூழலில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பிரபலம் தேடித் தந்தது விளம்பரங்கள்தான். பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த பிரபல திரை நட்சத்திரங்களைப் போலவே, பிரபல கிரிக்கெட் வீரர்களையும் பயன்படுத்தத் தொடங்கியது. சமஸ்தான இளவரசராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்த மன்சூர் அலிகான் பட்டோடியை வைத்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. கிரிக்கெட் ரசிகர்களுக்கே, ஓ..பட்டோடி இவர்தானா என்று அப்போதுதான் அதிகம் தெரிய ஆரம்பித்தது. அதைவிட அவர் அதிகம் பிரபலமானதற்கு காரணம், அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது, இந்தி திரைப்பட நடிகை ஷர்மிளா டாகூரை.
பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு இணையாகக் கொடிக்கட்டிப் பறந்தவர் ஷர்மினா டாகூர். திரையுலக இளவரசி, கிரிக்கெட் விளையாடும் சமஸ்தான இளவரசரைத் திருமணம் செய்துகொண்டது அப்போது பெரிய செய்தியாக முன்னிலைப்படுத்தப்பட்டது.

லாலா அமர்நாத், அஜித் வடகேர், பரூக் இன்ஜினியர், நாரி கான்ட்ராக்டர், விஜய் மன்ஜ்ரேக்கர் இப்படி பல பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் கவனம் பெறக்கூடிய அளவில் விளையாடினார்கள். எனினும், ஆடிய ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆட்டங்கள் என்பது குறைவாகவே இருந்தன. வெளிநாட்டுப் பயணங்களில் பெரும்பாலும் தோல்வியே அதிகமாக இருந்தது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இன்டீஸ் அணிகளின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்கவோ, அந்த தட்பவெப்ப நிலையில் விளையாடவோ இந்திய அணியினரால் முடியாத சூழல். மண்ணுக்கேற்ற வகையில் இந்திய கிரிக்கெட்டின் போக்கு 1960களின் இறுதியில் மாறத் தொடங்கியது.
பிஷன்சிங் பேடி, சந்திரசேகர், பிரசன்னா இந்த மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் வெற்றித் திசையைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக மாறினர். மற்ற நாடுகளின் அணிகளில் பேட்ஸ்மென் ஹீரோவாக இருந்தால், இந்திய கிரிக்கெட் அணியில் பவுலர்கள் அதுவும் சுழல் பந்து வீச்சாளர்களே முன்னிலை பெற்றனர். இவர்களில் பிஷன்சிங் பேடி சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். பிரசன்னாவும் சந்திரசேகரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராகவனும் இணைந்தார். அவருடைய ஆஃப் ஸ்பின் எதிராளியைத் திக்குமுக்காட வைத்தது. அதே சமயத்தில், இந்திய அணிக்குள் நேர்த்தியாக ஆடக்கூடிய பேட்ஸ்மென்களும் வரத் தொடங்கினர்.

கர்நாடகாவைச் சேர்ந்த குண்டப்பா விஸ்வநாத் வேகமாக ரன் அடிக்கக்கூடியவராக இருந்தார். அவருடைய ஆட்டமும் அவர் அடித்த செஞ்சுரிகளும் கவனத்தை ஈர்த்தன. அந்த நேரத்தில் மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பையிலிருந்து ஓர் இளம் வீரர் அறிமுகமானார். பெயர், சுனில் மனோகர் கவாஸ்கர். இந்தியாவுக்கும் வெஸ்ட் இன்டீசுக்குமான கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தியர்கள் என்றால் சொந்த மண்ணில் சுழல் பந்து வீச்சை முன்வைத்து வெற்றி பெறக்கூடியவர்கள் என்பதற்கு மாறாக, வெளிநாட்டு மண்ணில் உலகின் அதிவேக பந்து வீச்சாளர்கள் போட்ட பந்துகளை பவுண்டரிக்கு விரட்டக்கூடியவராக கவாஸ்கர் இருந்தார். இந்திய அணியை பல டெஸ்ட் மேட்ச்களில் இக்கட்டில் இருந்து மீட்டு வந்ததும் கவாஸ்கருக்கு கிரிக்கெட்டில் ஸ்டார் அந்தஸ்தை உருவாக்கியது.

சுழற்பந்து வீச்சாளர்களான நால்வரும் சற்று பின்தங்கிய காலத்தில், இந்திய அணிக்குள் புதிய வேகத்துடன் ஒரு புயல் நுழைந்தது. ஹரியானா ஹரிகேன் என வர்ணிக்கப்பட்ட அந்த புயல்தான், கபில்தேவ். இந்திய அணியில் சர்வதேசத் தரத்திலான முதல் வேகப் பந்துவீச்சாளர் கபில்தான். பந்து வீசுவதில் மட்டுமல்ல, அதிரடியாக ரன்கள் குவிக்கும் பேட்ஸ்மேனாகவும் அவர் இருந்தார். இந்தியாவின் முதல் பர்ஃபெக்ட் ஆல்ரவுண்டரும் அவரேதான்.
டெஸ்ட் போட்டிகள் நிறைந்த கிரிக்கெட்டில், 1975ல் ஒரு நாள் போட்டிக்கான முதல் உலகக் கோப்பை டோர்னமென்ட் இங்கிலாந்தில் நடந்தது. நின்று நிதானித்து ரன்கள் சேர்த்து செஞ்சுரி அடிக்கும் கவாஸ்கர் போன்றவர்களால் இந்த புதிய ஆட்டத்தை சட்டெனப் புரிந்துகொள்ள முடியவில்லை. 1975, 1979 இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் வெஸ்ட் இன்டீஸ் சாம்பியன் ஆனது. இந்திய அணியால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
வெஸ்ட் இன்டீஸை யார் வெற்றிகொள்ள முடியும் என்ற கேள்வியுடன் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி தொடங்கியது. இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் கபில்தேவ். வரலாறு அவருக்காகக் காத்திருந்தது.
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின் , மூத்த பத்திரிகையாளா்










Comments are closed, but trackbacks and pingbacks are open.