அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அந்த அதிசயம் நடந்தது  நமது சென்னை மண்ணில்தான் ! ஐ.பி.எல். தொடர் 21

திருச்சியில் அடகு நகையை விற்க

லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் மேட்ச் ஆடிய இந்திய அணி அதில் வெற்றி பெறாவிட்டாலும் சர்வதேச கிரிக்கெட் வரிசையில் கவனம் பெறும் அணியாக ஆனது. இங்கிலாந்துக்கு போய் இந்திய அணி ஆடிவிட்டுத் திரும்பிய நிலையில், 1933 இல் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. பாம்பே (மும்பை), கல்கத்தா (கொல்கத்தா), மெட்ராஸ் (சென்னை) ஆகிய 3 இடங்களில் நடந்த டெஸ்ட் மேட்ச்களில் இரண்டில் இங்கிலாந்து அணி வென்றது. ஒரு மேட்ச் ட்ரா ஆனது.

இந்தியா தனது கிரிக்கெட் திறனை மெல்ல வளர்த்துக் கொண்டு வந்த நிலையில், சமஸ்தான இளவரசர்களும், வியாபாரத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் வாரிசுகளும் இந்திய அணியின் நட்சத்திரங்களாகத் திகழ்ந்தார்கள். 1940-களில் இரண்டாம் உலகப் போர் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி பெரிய அளவில் டெஸ்ட் மேட்ச்களை ஆட முடியாமல் போனது. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றது. ஆஸ்திரேலிய அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மென் வெளுத்து வாங்கிய காலம் அது. அவர்தான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கோவி.லெனின்
கோவி.லெனின்

மொத்தம் 5 டெஸ்ட் மேட்ச்கள். இந்திய பவுலர்களின் பந்துகளை நாலாபக்கமும் சிதறவிட்டார் பிராட்மேன். 4 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வென்றது. ஒரு மேட்ச் ட்ரா ஆனது. இந்திய அணிக்கு இது பெரிய தோல்வி என்றாலும், ஆஸ்திரேலிய மண்ணில் அதற்கு மிகப் பெரிய அளவிலான பயிற்சி கிடைத்தது.

முதல்வர் பிறந்தநாள்

இங்கிலாந்துதான் கிரிக்கெட்டை கண்டுபிடித்து வளர்த்த நாடு. அங்கிருந்துதான் அந்த விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையில்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. 1877ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வெற்றி பெற்ற வலுவான அணி ஆஸ்திரேலியா என்பதால் மோதிரக் கையால் குட்டு வாங்கியது போன்ற அனுபவம் இந்தியாவுக்கு கிடைத்தது.

அந்த அனுபவத்துடன், 1948ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த வெஸ்ட் இன்டீஸ் அணியை இந்தியா எதிர்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் ஒரு மேட்ச்சில் வெற்றி பெற்றது. மற்ற 4 போட்டிகளும் ட்ரா ஆனதால், தொடரையும் வென்றது வெஸ்ட் இன்டீஸ். 1932ல் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் மேட்ச்சை ஆடிய இந்திய கிரிக்கெட் அணி, 1952 ஜனவரி வரை 24 மேட்ச்களில் ஆடியிருந்தது. 12 மேட்ச்களில் தோல்வி. 12 மேட்ச்கள் ட்ரா.  20 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியாத அணியாக இருந்தது. எப்போது வெற்றிக்கனி விழும் என இந்திய அணி காத்திருந்தது.

கேப்டன் விஜய் ஹசாரே
கேப்டன் விஜய் ஹசாரே

1951-52ல் இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்   தொடர் இந்தியாவில் நடந்தது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. நான்காவது போட்டி கான்பூரில் நடந்தது. அதில் இங்கிலாந்து வென்றது. இந்த டெஸ்ட் தொடரும் அம்போதான் என இந்திய கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கவலை கொண்டனர். கடைசி டெஸ்ட் மேட்ச்சான ஐந்தாவது ஆட்டம் மெட்ராஸில் (சென்னை) நடைபெற்றது. சேப்பாக்கத்தில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) விளையாட்டு அரங்கத்தில் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அந்தப் போட்டி தொடங்கியது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பாலி உம்ரிகர்
பாலி உம்ரிகர்

இந்திய அணியின் கேப்டனாக விஜய் ஹசாரே இருந்தார். இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நொறுக்கித் தள்ளலாம் என இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் நினைத்ததற்கு மாறாக, இந்திய இடது கை சுழல் பந்து வீச்சாளர் வினு மன்காட்டின் பவுலிங் இங்கிலாந்தை திணறடித்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வினு மன்காட் வெறும் 55 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஃபீல்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.

அடுத்து பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பங்கஜ் ராய் 111 ரன்கள் அடித்து அசத்தினார். அதன்பிறகு, 7-ஆவதாக களமிறங்கிய பாலி உம்ரிகர் 130 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக நின்றதால் இந்திய அணியின் ஸ்கோர் 9 விக்கெட் இழப்புக்கு 457 என உயர்ந்தது. பவுண்டரிகளாக விளாசி சென்னை ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்கள் இந்திய ஆட்டக்காரர்கள். அந்த இன்னிங்ஸை டிக்ளேர் செய்ததாக இந்தியத் தரப்பு அறிவித்தபோது, இங்கிலாந்தைவிட 191 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

பங்கஜ் ராய்
பங்கஜ் ராய்

இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அழுத்தம் அதிகமானது. வினு மன்காட்டுடன், ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர் குலாம் அகமதும் இணைந்தார். இருவரும் இங்கிலாந்து அணியை 183 ரன்களில் சுருட்டினர். இருவரும் ஆளுக்கு தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மற்ற இரண்டு விக்கெட்டுகள் ரன் அவுட் ஆயின. இந்தியா தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியை ஒரு இன்னிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்று, கிரிக்கெட் உலகத்தைத் திரும்பப் பார்க்க வைத்தது. அந்த அதிசயம் நடந்தது நமது சென்னை மண்ணில்தான்.

ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்கு முன் பெற்ற அந்த வெற்றி, இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

(ஆட்டம் தொடரும்)

கோவி. லெனின், மூத்த பத்திாிகையாளா்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.