அங்குசம் பார்வையில் ‘இரவின் விழிகள்’
தயாரிப்பு: ‘மகேந்திரா பிலிம் ஃபேக்டரி’ பி.மகேந்திரன், டைரக்டர்: சிக்கல் ராஜேஷ், ஆர்டிஸ்ட்: மகேந்திரா, நீமா ரே, நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சேரன் ராஜ், சிஸர் மனோகர , ஆன்ஸி சிந்து, ஒளிப்பதிவு: பாஸ்கர், இசை: ஏ.எம்.அசார், எடிட்டிங்: ஆர்.ராமர், பி.ஆர்.ஓ. : ஏ.ஜான்
அடர்ந்த வனப்பகுதியில் இரவில் முரட்டு மாஸ்க் அணிந்த ஒருவன் சிலரைக் கொலை செய்கிறான். பகலில் அதே காட்டுப் பகுதியில் ரவுண்ட்ஸ் வரும் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜும் கான்ஸ்டபிள் சிசர் மனோகரும் காஸ்ட்லி பைக் ஒன்றைத் தள்ளிக் கொண்டு வரும் ஒருவனைப் பிடித்து விசாரிக்கும் போது தான் அங்கே சில தடயங்கள் கிடைக்கின்றன. அதை வைத்து விசாரிக்க அதே வனப்பகுதியில் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.
யார் அந்த மாஸ்க் ஆசாமி? ஏன் இந்த கொலைகளைச் செய்தான்? என்பதற்கான விடை க்ளைமாக்ஸுக்கு கால் மணி நேரம் முன்பாக தெரிகிறது.
வெறி கொண்டு அலையும் சோஷியல் மீடியா பைத்தியங்களைப் பற்றிய விழிப்புணர்வுக் கதை தான் இந்த ‘இரவின் விழிகள்’. ஆனால் டைரக்டர் சிக்கல் ராஜேஷின் சொதப்பலான திரைக்கதையும் படத்தில் நடித்த அத்தனை பேரின் செயற்கைத்தனமான நடிப்பும் விழிப்புணர்வுக்குப் பதிலாக நம்மை ரொம்பவே விழிபிதுங்க வைத்துவிட்டது என்பது தான் உண்மை.
படத்தின் தயாரிப்பாளரே ஹீரோ என்பதால் ‘பிளாக் ஸ்டார்’ மகேந்திரா என்ற அடைமொழியுடன் டைட்டில் கார்டில் போட்டு அலப்பரை பண்ணியிருக்கிறார். ஆனால் எல்லா சீனிலும் நடிப்பதற்கு ரொம்பவே அல்லாடியிருக்கிறார். ஹீரோயின் நீமா ரேவும் அதே ரகம் தான். ஆனால் கொஞ்சம் கிளுகிளுப்புக்கு ஹெல்ப் பண்ணியிருக்கார்.
டைரக்டர் சிக்கல் ராஜேஷ் தான் அந்த சிக்கலான சைக்கோ கேரக்டரில் வருகிறார். பல நூறு தமிழ் சினிமாக்களில் வந்த சைக்கோ கேரக்டரை மிக்ஸியில் போட்டு அரைத்துக் குடித்து நடித்திருப்பார் போல. யூடியூப் சேனலில் செய்தி வாசிக்கும் இவரின் தங்கையைக் கொலை செய்ததற்காகத் தான் இவரும் கொலை பண்ணுகிறார் என்பதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நியாயமான சீன்கள் இல்லாமல் திணறுகிறது இரவின் விழிகள்.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.