அதிகரித்து வரும் ஐ டி பணியாளர்களின் உடல்நலப் பாதிப்புகள் !
நாட்டில் தகவல் தொழில்நுட்பம் – ஐடி தொழில் ஏராளமான இளையோரின் தெரிவாக உள்ள நல்ல வருவாய்த் தரும் தொழில் துறையாக உள்ளது. அதேவேளை இத் துறைப் பணியாளர்கள் மிகக் கடுமையான உடல் மற்றும் மனப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஐதராபாத்தில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்( National Institute of Nutrition – NIN) மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியானப் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.
பாதிப்புகள் :
ஐடி பணியாளர்களில், 42 சதவீதத்தினருக்கு உடல் எடை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. 46 சதவீதத்தினருக்கு வளர்சிதை மாற்றம் தொடர்பானப் பாதிப்புகள் உள்ளன. இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 90 செ. மீ ஆகவும் பெண்களுக்கு 80 செமீ ஆகவும் இருக்க வேண்டும். ஆனால் ஐடி பணியாளர்களில் 65 சதவீதமானோருக்கு இடுப்பு சுற்றளவு மிக அதிகமாக உள்ளது.

ட்ரை கிளிசரைடுகள் இயல்பாக 150 மிலி இருக்க வேண்டும். இவர்களுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. 4 சதவீதத்தினருக்கு இளம் வயதிலேயே நீரிழிவு நோய் உள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதயப் பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன் மாரடைப்புக்கான வாய்ப்புகளும் உள்ளன. தொடர்ச்சியாகக் கணினியில் வேலை செய்வதால் மணிக்கட்டு மற்றும் விரல் நரம்புகள் பாதிக்கின்றன. ( கை விரல் நரம்புகளைப் பாதிக்கும் நோய் Carpal Tunnel Syndrome) ஒரே நிலையில் வெகு நேரம் அமர்ந்திருப்பதால் கழுத்து நரம்புகளும் முதுகெலும்பும் பாதிக்கிறது.
மனநலப் பாதிப்பு :
தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமைந்து பல மணிநேரம் வேலை பார்ப்பதால் கடுமையான மன அழுத்தம் ஏற்படுகிறது. திட்டங்களை (Projects ) கையாள்வதில் ஏற்படுகின்ற சிக்கல்கள் கடுமையான மனச் சோர்வை ஏற்படுத்துகின்றன.
இதன் விளைவாக வேலையால் ஏற்படும் மன உளைச்சல் அவர்களது குடும்ப வாழ்க்கையையும் உறவுகளையும் பாதிக்கக் கூடும்.
— தமிழகன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.